வியாழன், 12 நவம்பர், 2009

8-வது உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரைகள்: ஆய்வு மலர் வெளிவருமா, வராதா?

First Published : 12 Nov 2009 02:15:02 AM IST


தஞ்சாவூர், நவ. 11: தஞ்சாவூரில் 1995, ஜனவரி 1 முதல் 5 வரை 8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டு ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆய்வு மலராகத் தொகுக்கப்பட்டு, அடுத்து நடைபெறும் மாநாட்டில் வெளியிடுவது வழக்கம்.
1966, கோலாலம்பூர் முதல் உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரைகள் 1968, சென்னையில் நடைபெற்ற 2-வது மாநாட்டிலும், 2-வது மாநாட்டுக் கட்டுரைகள் 1970-ல் பாரீஸில் (பிரான்ஸ்) நடைபெற்ற 3-வது மாநாட்டிலும், 3-வது மாநாட்டுக் கட்டுரைகள் 1974-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4-வது மாநாட்டிலும் வெளியிடப்பட்டன.
பின்னர், கால இடைவெளியில் நடைபெற்ற மாநாட்டுக் கட்டுரைகள் ஆய்வுத் தொகுப்பாக வெளிவந்தன.
8-வது உலகத் தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட 500-க்கும் அதிகமான கட்டுரைகளில் 351 கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
5,199 பக்கத்தில் 351 கட்டுரைகள் 5 தொகுதிகளாக அதாவது, முதல் தொகுதியில் 1,107 பக்கங்களில் 54 கட்டுரைகளும், 2-வது தொகுதியில் 922 பக்கங்களில் 62 கட்டுரைகளும், 3-வது தொகுதியில் 859 பக்கங்களில் 60 கட்டுரைகளும், 4-வது தொகுதியில் 1,190 பக்கங்களில் 85 கட்டுரைகளும், 5-வது தொகுதியில் 1,121 பக்கங்களில் 90 கட்டுரைகளும் அச்சிடப்பட்டு, ஆய்வு மலராக வெளியிட நூல் தொகுப்பாளர்களாகச் செயல்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவர் நெபுரு குரோசிமா, அப்போதைய மாநாட்டு அமைப்புச் செயலர் ராஜாராம், பேராசிரியர் இ. அண்ணாமலை ஆகியோர் கொண்ட குழு முடிவெடுத்தது.
ஆய்வு மலர் அச்சிடும் பணி 2004-ம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டிருந்தது. மன்றத் தலைவர் நெபுரு குரோசிமா ஆய்வு மலரை வெளியிட பலமுறை தமிழக அரசை வலியுறுத்தி தொடர்ந்து கடிதம் எழுதினார்.
இதையடுத்து, நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு 2005-ல் 5 தொகுதிகளின் மொத்த விலை ரூ. 3,000 என நிர்ணயிக்கப்பட்டு, 1,000 ஆய்வு மலர் தஞ்சாவூரில் அச்சிடப்பட்டு, அவை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
ஆய்வு மலரை வெளியிடும் பொறுப்பை சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால், ஆய்வு மலர் தயாரிக்கப்பட்ட நிலையில், அப்போது வெளியிடவில்லை என்பது மட்டுமல்ல, இன்று வரை வெளியிடப்படவில்லை.
மலர் வெளியீடு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லாததால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்த அனைத்து மலர்களும் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இன்றுவரை அங்கேயே அந்த நூல்கள் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன.
8-வது உலகத் தமிழ் மாநாடு நிறைவு பெற்று 14 ஆண்டுகள் ஆகியும், இன்று வரை ஆய்வு மலர் வெளியிடப்படவில்லை. அதற்கான முயற்சிலும்கூட யாரும் ஈடுபடவில்லை.
1995 ஆண்டிலிருந்து 14 ஆண்டுகளாக 351 அறிஞர்களின் தமிழ்ச் சிந்தனைகள் முடங்கிப்போய் வெளியுலகுக்குத் தெரியாமலேயே உள்ளது.
மலர் வெளியிட்டிருந்தால் தமிழறிஞர்களின் சிந்தனைகள் வெளியுலகுக்குத் தெரிந்திருக்கும். கட்டுரைகளில் சொல்லப்பட்ட கருத்துகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கும். சிந்தனையாளர்களின் கருத்துகள் வலுப் பெற்றிருக்கும் அல்லது விமர்சனம் செய்யப்பட்டிருக்கும். இதில் எதுவுமே நடைபெற வாய்ப்புகள் இல்லாமல் மறுக்கப்பட்டுவிட்டன.
முன்னதாகவே மலரை வெளியிட்டிருந்தால் அடுத்து நடைபெறும் மாநாடுகளில் கட்டுரைகள் தயாரிக்க அது முன்னோடியாக இருக்கும். மேலும், தமிழின் வளர்ச்சிப் படிநிலைகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். மாநாடு நிறைவுபெற்று 14 ஆண்டுகளாகியும் ஆய்வு மலர் வெளியிடாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்?
8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற காலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்த ஆய்வு மலர் வெளியிடப்படாமல் நின்று போனது.
ஆண்டுகள் பல கடந்தும் எண்ணங்கள் ஒன்றுபடாததால், எண்ணற்ற தமிழறிஞர்களின் சிந்தனைகள், அறிவு ஊற்றுகள் அடுத்து வரும் தமிழறிஞர்களுக்குக் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கின்றன.
நடைபெற இருப்பது உலகத் தமிழ் மாநாடா, உலகத் தமிழ் செம்மொழி ஆராய்ச்சி மாநாடா என்றொரு சந்தேகம் கிளப்பப்பட்டிருக்கிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்றால் அந்த வகையில் இதை "முதலாவது' மாநாடாகக் கருத வேண்டியிருக்கும். அப்படியென்றால் இது உலகத் தமிழ் மாநாட்டின் தொடர்ச்சி அல்ல என்றும் கருத நேரும். எனவே அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை மாநாட்டில் வெளியிடாவிட்டாலும் தவறில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதை விளக்க வேண்டியது மாநாட்டை நடத்தப் போகிறவர்கள்தான்.
எது எப்படியோ, அடுத்த தலைமுறையினருக்கு பயன்படக்கூடிய, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஓர் ஆய்வு மலரை முடக்கிவைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?

கருத்துக்கள்

நல்லதொரு சிக்கலைத் தினமணி உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அடுத்த மாநாட்டில்தான் வெளியிட வேண்டும் என்று இல்லாமல் உடனே கடநத மாநாட்டு மலரை வெளியிட உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/12/2009 2:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக