சனி, 14 நவம்பர், 2009

யாழ்ப்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்



ராமேசுவரம், நவ. 13: விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் சிறையில் ஜெகதாபட்டினம் மீனவர்கள் நவ. 11-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக நிரபராதி மீனவர் சங்கக் கூட்டமைப்பு பிரதிநிதி யூ. அருளானந்தம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெகதாபட்டினம் கடற்கரையில் நவ. 2-ம் தேதி 4 படகுகளில் 18 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி கைதுசெய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 10 நாள்களுக்கு மேலாகியும் மீனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இதனையடுத்து, தங்களை விடுதலை செய்யக் கோரி நவ. 11-ம் தேதி காலை முதல் மீனவர்கள் 18 பேரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதன்பின்னர் அன்று மாலை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தம், வடமராச்சி மீனவர் சங்கத் தலைவர் எமலியான் பிள்ளை, யாழ்ப்பாணம் மீனவர் சங்கச் செயலர் ராஜாராம் ஆகியோர் சிறைக்குள் சென்று மீனவர்களை சந்தித்து விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பின்னர், மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க மாநிலச் செயலர் என்.ஜே.போஸ் வெள்ளிக்கிழமை கூறும்போது, இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து மாநில மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நவம்பர் 17ம் தேதி நூறு கார்களில் பேரணி நடத்தப்பட உள்ளது.
ராமேசுவரத்தில் தொடங்கும் இப்பேரணி ஜெகதாபட்டினம், நாகை, கடலூர் வழியாக நவ.21ம் தேதி சென்னையில் முடிவடைகிறது. அங்கு முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றார்.

கருத்துக்கள்

மீனவர்களே! உங்களின் ஒன்று பட்ட போராட்டங்களால் இந்திய-சிங்களக் கொடுமைகளை உலகு புரிந்து கொண்டு தமிழ் ஈழத்தை விரைவில் ஏற்கட்டும்! உங்கள் நலன் அதன் மூலம் என்றென்றும் காக்கப்படட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக