மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு: விடுதலைப் புலிகள் விளக்கம்
புலம்பெயர் நாடுகளில் தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் ஏனைய அமைப்புக்கள் தொடர்பாகவும் உள்ள குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு இவ்வறிக்கை விடுக்கப்படுகிறது என அதிர்வு இணையத்திற்கு விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. மின்னஞ்சல் மூலமாக இவ்வறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளது.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
09–11–2009 ஊடக அறிக்கை
சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும். காலத்திற்குக் காலம் ஆட்சிபீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது.
ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் விடயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத்தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றன. உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்லவேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத்தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் கடமையாகின்றது.
இவ்வகையில், ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும். இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதற்கட்டமாகும்.
அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத்தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.
அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.
மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 12120
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக