தஞ்சாவூர், நவ. 13: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக்
குடியுரிமை பெற்றுத் தரப்படும் என்றார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றிய திமுக செயலர் கே. செல்லக்கண்ணு இல்லத் திருமணத்தையும், அம்மாபேட்டை ஒன்றியச் செயலர் தியாக. சுரேஷ் திருமணத்தையும் வெள்ளிக்கிழமை தலைமையேற்று நடத்தி வைத்து அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி அமைச்சர்கள் அண்மையில் ஆய்வு நடத்தினோம். அமைச்சர்களின் ஆய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டியதைவிடக், கூடுதலாக இலங்கை அகதிகளின் மறுவாழ்வுக்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.
தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்விலும் முதல்வர் அக்கறை செலுத்தி வருகிறார். தமிழகத்தில் தற்போது மக்களால் உருவாக்கப்பட்ட, மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. அரிய பல திட்டங்களை நிறைவேற்றி, தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாபெரும் தலைவராக முதல்வர் கருணாநிதி உயர்ந்துள்ளார்.
இந்தத் திருமணங்கள் சீர்திருத்த முறையில் சுயமரியாதை உணர்வோடு நடந்துள்ளன. 1967-க்கு முன்னர் அண்ணா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, சீர்திருத்தத் திருமணங்களுக்கு சட்டப்படி செல்லும் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அப்போது சீர்திருத்த திருமணங்களைக் கேலி செய்தனர். எள்ளி நகையாடினர். இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று அண்ணா முதல்வரானதும் முதல் தீர்மானமாக அதை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.
சீர்திருத்த திருமணங்கள் பல்கிப் பெருக வேண்டும் என்ற பெரியாரின் கனவையும், அண்ணாவின் எண்ணத்தையும் முதல்வர் கருணாநிதி இன்று நிறைவேற்றி வருவதைப் பார்க்கிறோம்.
பெண்களால்தான் குடும்பத்திலும், சமுதாயத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று கருதித்தான் இந்த ஆட்சியில் பெண்களுக்கு ஏற்ற நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவிருக்கிற இந்தத் தருணத்தில், திருமணத் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்றார் ஸ்டலின்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி, மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர், தஞ்சாவூர் மூப்பனார் சாலையில் சுற்றுலா மாளிகை அருகே கட்டப்படவுள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் இல்லம் கட்டுமானப் பணிகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்து, கட்சிக் கொடியேற்றி வைத்தார் துணை முதல்வர் ஸ்டாலின்.
காலங்கடந்து அரசியல் தேவைகளுக்காக புலம் பெயர்ந்து வந்துள்ள இலங்கைத்தமிழர்கள் பற்றிப் பேசும் அரசியல் வாதிகளே ! அவர்களை மனித நேயத்துடன் அணுகி, விரும்பியவாறு கல்வி. தொழில்.வேலைவாய்ப்பு பெற்று விருமபிய இடத்தில் உரிமையுடன் வாழ வழிவகை செய்யுங்கள் கொத்தடிமை முகாம்களில் அடைத்து வைத்து விட்டு. நீலிக் கண்ணீர் வடிக்காதீர்கள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/14/2009 4:40:00 AM
stalin and PM are trying to keep srilankan taimils as beggers in tamilnadu. before giving them citizenship think howmany percentage of job opertunaity are you going to give them. without deciding this you can not bring light in their life.
11/14/2009 3:53:00 AM