தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்
சிறீலங்கா இராணுவ முள்வேலி முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களை விடுதலை செய்வதற்காக தமிழின உணர்வுமிக்கவர்களை ஒன்றிணைத்து செயற்படுவதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்.
இவரது இந்த முயற்சிகள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்திவருதாகவும், இதனால் இவர் மீது கலைஞர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து பலவிதமான செய்திகள் உலாவருகின்றபோதும் அவர் அடுத்த கட்டப் போராட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அதே வலிமையுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று உறுதியாகக் கூறும் பழ.நெடுமாறன் அவர்கள், முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்காக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அவரை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு ஈழமுரசு தற்போதைய நிலைமை தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, வழங்கிய கருத்துக்களை இங்கே தருகின்றோம்.
ஈழமுரசு:- இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் 58 ஆயிரம் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதாக உறுதி மொழி வழங்கியது. இதனை சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது என்று நீங்கள் கருதுகின்றீர்களா..?
பழ.நெடுமாறன்:- இலங்கையில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது முக்கியமான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையோ இந்த முகாம்களைச் சென்றுபார்க்க சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. சர்வதேச பத்திரிகையாளர்களையும் அனுமதிக்கவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா சபை போன்றவற்றின் பிரதிநிதிகளையும் அனுமதிக்க மறுக்கிறது. ஆனால் இவ்வளவு பேரை அனுமதிக்க மறுத்த ராஜபக்ச, கருணாநிதி அவர்களிற்கு மட்டும் கடிதம் எழுதி ஒரு குழுவை அனுப்பும்படி வேண்டிக்கொள்கிறார் என்றால் அதன் மர்மமென்ன? உள்நோக்கமென்ன?
இரண்டாவதாக இந்தக்குழு அங்கே சென்று, தாங்கள் விரும்பிய இடங்களிற்குச் செல்லவேண்டுமென்று கேட்க முடியவில்லை. ராஜபக்ச அரசு எங்கே அழைத்துக்கொண்டு போனதோ அங்கே மட்டும் போனார்கள். யாரை இவர்கள் குழுவிற்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்களோ அவர்களுடன் மட்டும் பேசினார்கள். ஆக இந்தக் குழு முழு உண்மையையும் அறிந்திருக்க முடியாத குழுவாகத் திரும்பி வந்துவிட்டது. இவர்களுக்கு ராஜபக்ச அளித்த வாக்குறுதியைத்தான் கருணாநிதி திரும்பவும் சொல்லுகின்றார். 58,000 பேரை விடுதலை செய்துவிட்டார்களென்று. அது உண்மையா? இல்லையா? என்பது யார் சரிபார்ப்பது. பொதுவாக இதுபோன்ற பிரச்சினைகளில் அகதிகள் மீள் குடியேற்றப் பிரச்சினைகளில் ஐ.நா அகதிகள் ஆணையத்தின் முன்னிலையில்தான் அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னிலையில்தான் இந்த மீள்குடியேற்றம் நடைபெறும்.
எத்தனை பேர் வெளியேறினார்கள். எந்தெந்த ஊர்களிற்குப் பாதுகாப்பாகச் சென்றார்கள்? அவர்கள் வீடுகளிற்குப்போய்ச் சேர்ந்துவிட்டார்களா என்பதையெல்லாம் ஐ.நா அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் சரிபார்த்துத் தெரிவிப்பார்கள். அதுதான் வழக்கம். ராஜபக்ச சொல்லுகின்றார் 58,000 பேரை விடுதலை செய்தாகிவிட்டது என்று. அதை தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் திருப்பிச் சொல்லுகின்றார். இப்படி விடுதலை செய்யப்பட்டவர்கள், அவர்கள் ஊர்களிற்கு, வீடுகளிற்கு பத்திரமாகப் போய் சேர்ந்துவிட்டார்களா என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாத நிலைமையில் இதுபோன்ற செய்திகளை நம்புவது இயலாது.
ஈழமுரசு:- உலகத் தமிழர் மாநட்டில் பங்கேற்பவர்களை தடுப்பதற்கு சிலர் முயற்சி செய்வதாக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். அதில் ‘நெடுமரங்கள்’ என அவர் குற்றம்சாட்டியுள்ளது உங்களையே எனக் கருதுகின்றோம். இந்த மாநாடு தொடர்பாகவும் இதனை நீங்கள் ஏன் தடுக்க முயல்கின்றீர்கள் என்பதையும் விளக்கமுடியுமா..?
பழ.நெடுமாறன்:- இந்த மாநாட்டைத் தடுப்பதற்கோ, இந்த மாநாட்டிற்கு வரும் தமிழ் அறிஞர்களை வரவேண்டாம் என்று சொல்வதற்கோ ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. நான் முதலமைச்சரிடம் கேட்ட கேள்வி ஒன்றுதான். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இந்த மாநாடுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. மறைந்த தமிழறிஞர் தணிநாயகம் அடிகளின் பெருமையைச் சேர்ந்தவர்களால்தான் உலகத் தமிழர் ஆராய்ச்சி மன்றம் உருவாக்கப்பட்டது. அவர் எவ்வளவு பாடுபட்டு உலகத் தமிழறிஞர்களையெல்லாம் ஒன்றுகூட்டி இதை உருவாக்கினார் என்பது ஒரு வரலாறு. இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில்தான் பல்வேறு நாடுகளில் இத்தகைய ஆய்வு மாநாடுகள் நடாத்தப்பட்டன.
மகாநாடு நடாத்தும் பொறுப்பு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றைச் சேர்ந்தது. அந்தந்த நாட்டைச் சேர்ந்த அரசுகள் அந்த மாநாட்டை நடாத்துவதற்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் ஒரு சிறிதளவுகூடக் கலந்துகொள்ளாமல் தமிழக முதலமைச்சர் திடீரென்று உலகத் தமிழ் மாநாட்டை நடாத்தப்போவதாக அறிவித்தார். அதே உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராய் இருக்கக்கூடிய ஜப்பானிய அறிஞர் ஆட்சேபித்தார். யாரைக்கேட்டுக்கொண்டு அறிவித்தீர்கள் என்று சொன்னார். பிறகு அவரை சமாதானப்படுத்தினார்கள். அப்போதும் அவர் சொன்னார் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பதற்கு பல காலமாகும். ஆகவே 2011ம் ஆண்டு ஜனவரியில் இந்த மாநாட்டை நடாத்தலாமென்று அவர் யோசனை சொன்னார்.
அதற்கு முதலமைச்சர் சொன்ன பதில் வேடிக்கையானது. எங்களிற்கு ஏப்ரல் மாதம் சட்டத் தேர்தல் இருக்கிறது. ஆகவே அந்த நேரத்தில் இதை நடாத்த முடியாதென்று சொன்னார். சட்டசபைத் தேர்தல் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ஒரு அரசியல் பிரச்சனை. அதற்கும் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அப்படி அவர் சொல்வதைச் சரியென்று வைத்துக்கொண்டாலும்கூட, இந்தத் தேர்தல் நடந்த பிற்பாடு மாநாட்டை நடத்தலாமே. அதை ஏன் இப்ப நடாத்தவேண்டுமென்று அவசரப்படுகின்றார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றைச் சிறிதும் கலந்துகொள்ளாமல் தன்னிச்சையாக ஒரு முடிவை அறிவித்து எப்படி நடத்தி முடிப்பதென்று அறிவித்து அதற்கு அவர்கள் இசைவு தராத நிலையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை உடைப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகின்றார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடத்தப்போகின்றேன் என்று சொன்னதோடு சரி நடத்தட்டும். ஆனால் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில் இருக்கும் ஒன்பது நிர்வாகிகளில் ஆறுபேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்களென்று இவர் சொல்லவேண்டிய அவசியம் என்ன? அப்படியானால் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்த இவர் முயற்சிசெய்கின்றார் என்று நான் குற்றம்சாட்டினேன். அதிலே அவருக்கு கோபம் வந்துவிட்டது. மாநாட்டிற்கு வருபவர்களை நான் தடுப்பதற்கு முயற்சிசெய்வதாகத் திட்டியிருக்கிறார். உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் எத்தனையோ ஆண்டு காலத்திற்கு முன்னால் அது மறைந்த தணிநாயகம் அடிகளாலே பெரும் பாடுபட்டு உருவாக்கப்பட்டதொன்று. அதைப் புறுக்கணிப்பதென்றோ, அதை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னிச்சையாகச் செயற்படுவதற்கோ அல்லது அதைப் பிளவுபடுத்துவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செய்பவர்கள் தமிழுக்கு நன்மை செய்யாதவர்கள் என்றுதான் அதற்குப் பொருள்.
ஈழமுரசு:- தமிழீழ தேசியத் தலைவர் குறித்த பல்வேறு செய்திகள் வெளிவந்தபோதும், அவரது இருப்பு குறித்து இன்னும் உறுதியாக கருத்து வெளியிட்டு வருபவர்கள் நீங்கள். தேசியத் தலைவர் மாவீரர் நாளுக்கு உரையாற்றவுள்ளதாக உங்கள் ‘தென்செய்தி’ இதழில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளீர்கள். இது எந்தளவிற்கு சாத்தியம். அவ்வாறு உரை நிகழாதுவிட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன..?
பழ.நெடுமாறன்:- அது தென்செய்தியின் கருத்தல்ல. அது இணையத்தில் வந்த ஒரு கட்டுரையை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். அதை இணையத்தில் வந்திருக்கிறது என்பதைப் போட்டிருக்கவேண்டும். அதைப் போடுவதற்கு அவர்கள் தவறிவிட்டார்கள். அது தென்செய்தியின் கருத்தல்ல.
ஈழமுரசு:- முள்வேலி முகாம்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை தமிழ் உணர்வுமிக்க பல கட்சிகளின் ஆதரவோடு முன்னெடுத்துள்ளீர்கள். இந்தப் பிரச்சாரம் பயணத்திற்கு கிடைக்கும் ஆதரவு எவ்வாறு இருக்கின்றது..?
பழ.நெடுமாறன்:- இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களின் தலைமையில் இந்த விழிப்புணர்வுப் பரப்புரைப் பணயம் நடத்தப்பட்டது. நம்முடைய தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்தும் இந்தப் பயணம் தொடங்கப்பட்டிருக்கின்றது. சென்னையில் இருந்து மருத்துவர் ராமதாஸ் அவர்களும், இராமேஸ்வரத்திலிருந்து சகோதரர் வைகோ அவர்களும், குமரி முனையத்திலிருந்து சோழர் சா. பாண்டியன் நல்லகண்ணன் அவர்களும், கோவையிலிருந்து நானும் இந்தப் பயணத்தைத் தொடங்கினோம். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்தப் பயணம் நடந்தது.
செல்லும் வழியெல்லாம் மக்கள் பெருந்திரளாகக்கூடி ஆதரவு தந்தார்கள். முள்வேலி முகாமிற்குள் இருக்கும் 3 இலட்சம் மக்களை உடனடியாக விடுதலைசெய்யவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இதை வலியுறுத்தித்தான் இந்தப் பயணம் நடந்தது. கட்சிவேறுபாடுகளின்றி நமது தமிழகத்து மக்கள் ஒன்று திரண்டு இந்த இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். அதைப்போல இறுதி நாளன்று இருந்த மிகப்பெரிய கூட்டத்திலும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்து இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். ஒட்டு மொத்தத்தில் தமிழக மக்கள் முள்வேலி முகாமிலுள்ள மக்களை விடுதலை செய்ய வேண்டுமென்பதிலே உறுதியாக இருக்கின்றார்கள். அதற்காகத் தொடர்ந்து போராடவும் தயாராக இருக்கின்றார்கள்.
ஈழமுரசு:- இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எவ்வாறான காத்திரமான பணிகளை ஆற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்..?
பழ.நெடுமாறன்:- இன்றைக்கு தமிழினத்திற்கே மிக நெருக்கடியான காலகட்டம். தமிழீழ மண்ணில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம், இப்போது களம்மாறி இருக்கின்றது. உலகத் தமிழர்களின் கரங்களிற்கு அது மாற்றப்பட்டுவிட்டது. எனவே உலகம்பூராகவும் இருக்கும் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எந்தெந்த வகையில் துணைநிற்க முடியுமோ அந்த வகையிலெல்லாம் அவர்கள் தோள்கொடுத்து, துணைநிற்கவேண்டியது அவசியமாகும். இது காலம் நமக்குக் கொடுக்கின்ற கட்டளையாகும். அந்தக் கடமையை அனைத்து நாட்டுத் தமிழர்களும் செய்யவேண்டும். அந்தந்த நாட்டு அரசுகளிற்கு அழுத்தம் கொடுத்து, இந்த மக்களைக் காப்பாற்ற என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யவேண்டுமென நான் அவர்களை வற்புறுத்தி வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி்:ஈழமுரசு
Tags: சிறீலங்கா இராணுவம், பழ.நெடுமாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக