மாநில நலனும் முக்கியம்!
நாடு முழுவதிலும் உள்ள ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத் தலைவர்கள் அனைவரையும் அப்பதவியிலிருந்து நீக்க ஆணை பிறப்பித்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி. வாரியத் தலைவர்கள் அனைவரும் முன்பு லாலு பிரசாத் யாதவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது மட்டுமன்றி, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியான விவகாரமும் இதற்கு ஒரு காரணம். மேலும், மாநில மொழிகளில் ரயில்வே பணிக்குத் தேர்வுகள் எழுதலாம் என்று அனுமதித்துள்ள மம்தா பானர்ஜி, அதற்கேற்ப குழுக்களை மாற்றியமைக்கவும் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது. ரயில்வே பணிக்குத் தேர்வு நடத்தி பணியில் அமர்த்தும்போது, அந்தந்த மாநிலத்தவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்காமல் இருந்த நிலை இதனால் மாறும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி நடக்குமெனில் இப்போதே மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துகள். ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளில் தகுதியுள்ள இந்தியர் யாரும் கலந்துகொள்ளலாம். இருப்பினும், பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் யார், அந்த வாரியத்தில் உறுப்பினர்கள் யார் என்பதைப் பொறுத்து, சில பாரபட்சமான போக்குகள் உள்ளன என்பது வெளிப்படை. ரயில்வே தேர்வு வாரியத்தால் நியமனம் பெற்று தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பட்டியலிட்டால், அவர்களில் தமிழர்கள் 30 சதவீதம் இருந்தால் அதுவே அதிகம். பெரும்பாலும் அண்டை மாநிலத்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தமிழர்கள் இத்தேர்வுகளை எழுதவில்லை என்றோ, தமிழர்களில் அத்தகுதி உள்ளவர்கள் இல்லை என்றோ அர்த்தமல்ல. ஆனாலும், அது அப்படியாகத்தான் ஆகிவருகிறது. அதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் கடைகள், உணவுக்கூடங்கள், ஓடும் ரயில்களில் உணவுவிநியோகம் எல்லாவற்றுக்கும் உரிமம் பெற்றுள்ளவர்கள் யார் யார் என்று பட்டியலிட்டாலும், தமிழர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் சுண்டல், வேர்க்கடலை விற்பதோடு சரி. இந்த நிலையை மாற்றுவதற்கு மத்திய முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் (பாமக) ஆர்.வேலு சில முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. சேலம் கோட்டத்தை உருவாக்க அவர் எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவையைச் சேர்ப்பதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. சென்னை-திருச்சி அகலரயில்பாதை ஆவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை-திருவனந்தபுரம் அகலரயில்பாதை ஆகிவிட்டது. மின்பாதையாக மாற்றப்பட்டது. தமிழகத்தில் விழுப்புரம்- திருச்சி ரயில்வே மின்பாதைப் பணியே இன்னும் முடியவில்லை. இதற்கு முதன்மையான காரணம், தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே கோட்டங்களில், ரயில்வே வாரியம் நியமனம் செய்யும் ஊழியர்களில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இல்லை. ஆகவே, தமிழ்நாட்டு நலன் கருதும் திட்டங்களை முன்வைக்கவோ அல்லது புறக்கணிக்கப்படும்போது குரல் எழுப்பவோ அல்லது திட்டநிதியை ஒதுக்குவதில் தமிழகத்துக்கு முன்னுரிமை கொடுக்கவோ ஆளில்லை. தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் தமிழர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று சொல்வதன் மூலம், மும்பை நவநிர்மாண் சிவசேனா சொல்வதைப்போல தமிழ் மண் தமிழருக்கே என்று சொல்வது அல்ல நோக்கம். தமிழ் மண்ணில் தமிழர்தான் வாழவேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதல்லதான். ஆனால், தமிழ் மண்ணில் தமிழருக்கு வாய்ப்பில்லை என்றால் அது அவலம். அந்த அவலம் பிரிவினைவாதத்துக்கு வித்திடும் அபாயமாகக்கூட மாறிவிடும். தமிழ்நாடு என்று மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும் ரயில்வே பணிகள் மட்டுமன்றி மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அந்தந்த மாநிலத்தவருக்கு குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்கப்பட்டால், பொதுவான நல்லுணர்வை வலுப்படுத்த உதவும். அந்தந்த மாநில மக்களின் நலனும், மாநிலத்தின் நலனும் பாதுகாக்கப்படும். அகில இந்திய மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வுகளில் 15 சதவீத இடங்கள் மட்டுமே பிற மாநிலத்தவருக்காக ஒதுக்கப்படுகின்றன. தேசிய பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதம் அந்தந்த மாநிலத்தவருக்கும், மீதமுள்ள இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோன்ற நடைமுறையை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளலாம். வாரியம் தேர்வு நடத்திப் பணியாளர்களை நியமிக்கும்போது அந்தந்த மாநிலத்தவருக்குக் குறைந்தது 85 சதவீதமாகவும் பிற மாநிலத்தவருக்கு 15 சதவீதமாகவும் பணி ஆணை வழங்கலாம். ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திலும் அந்தந்த மாநிலத்தவர் பெரும்பான்மையாக இருக்கும்படி நியமனம் செய்யப்பட வேண்டும்.
தமிழ் மண்ணில் தமிழருக்கு வாய்ப்பில்லை என்றால் அவலம் என இடித்துரைக்கும் தினமணிக்குப் பாராட்டுகள்! தொடர் வண்டித்துறை என்று மட்டுமல்ல எல்லா பணி வாய்ப்புகளிலும் இந்த அவலம்தான் உள்ளது. இதனைத் துடைத்தெறிய அரசியல் கட்சிகளை நம்பாமல் மக்கள் பாடுபட வேண்டும். 80 விழுக்காடு மாநிலத்தவர்க்கு 20 விழுக்காடு அந்தந்த மாநில மொழிகளை அறிந்த பிற மாநிலத்தவருக்கு எனப் பொது விதி வகுத்தால் மண்ணின் மைந்தர் உரிமை காப்பாற்றப்படும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/9/2009 3:03:00 AM