ஞாயிறு, 8 நவம்பர், 2009

General India news in detail

புரி: இந்தியாவின் தொன்மை வாய்ந்த புரி ஜகன்னாதர் கோவிலில் தேவதாசி சம்பிரதாயம் மறையும் நிலையில் இருக்கிறது. தற்போது இரண்டு தேவதாசிகள் மட்டுமே உள்ளனர். கிருஷ்ணர், சுபத்ரா, பலராமர் மூவரும் கோவில் கொண்ட இடம் தான் ஒரிசாவின் புரி ஜகன்னாதர். இந்தக் கோவில் 800 ஆண்டுகால வரலாற்றுத் தொன்மை கொண்டது.இங்கு மொத்தம் 36 சேவைகள் எனப் படும் சடங்குகள் தினமும் நடக்கின்றன. இவற்றில் சிலவற்றை அக்கோவிலில் உள்ள தேவதாசிகள் மட்டுமே செய்ய வேண்டும். புரி கோவில் தேவதாசிகள் "மகரி' என்று அழைக் கப்படுவர். இவர்கள் இறைவன் சன்னிதானத்தின் முன் பாடுதல், ஆடுதல் போன்ற சேவைகளைச் செய்ய வேண்டும். இதுதான் பொதுவாக தேவதாசிகளின் பணி. ஆனால், புரியில், தேவதாசிகள் கருவறைக்குள்ளேயே சென்று இறைவன் முன் சில சடங்குகளைச் செய்வர்.இதை அவர்கள் தவிர வேறு யாரும் செய்ய முடியாது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் "நந்த உற்சவம்' என்ற ஜென்மாஷ்டமி திருவிழாவில் தேவதாசிகள், கண்ணனின் தாயான யசோதா நிலையில் இருந்து சில சடங்குகள் செய்வர். பல மாநிலங்களில், தேவதாசிகளைத் தங்கள் சுயநலங்களுக்காக சிலர் பயன்படுத்திக் கொண்டாலும், புரியில் மட்டும் அவர்களைக் கண்ணனின் "வாழும்' மனைவியாகவே மதிக்கும் பண்பு இன்றும் நிலவுகிறது. புரி கோவில் தேவதாசிகள் இருவகைப்படுவர்.கருவறைக்குள் செல்லும் உரிமை பெற்றோர் "பிதர் கயானி' என்றும், கருவறைக்கு வெளியே பணி செய் வோர் "பகர் கயானி' என்றும் அழைக் கப்படுவர். 1992ல் கோகிலப்ரவா என்ற தேவதாசியின் மறைவோடு பிதர் கயானி மரபு நின்றுவிட்டது. எண்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு பல தேவதாசிகள் இருந்தனர். காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி இப் போது சசிமணி(85), பரஸ்மணி என்ற இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். சசிமணி கால் உடைந்து, கோவில் அருகிலிருக்கும் ஓர் இருளடைந்த அறையில் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.எட்டு வயதில் தேவதாசியாக சேர்ந்தவர் அவர். சசிமணி, பகர் கயானி தேவதாசி. பரஸ்மணி கோவிலுக்கு வந்தே பல ஆண்டுகள் ஆயிற்றாம். தேவதாசிகளைச் சேர்க்க வேண்டும் என்று 90களில் கோவில் நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நிர்வாகம் அந்த யோசனையைக் கைவிட்டது. புரி கோவிலின் முதல் தேவதாசி யார் என்று தெரியாவிட்டாலும், கண்ணனின் கடைசி "வாழும்' மனைவி சசிமணிதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக