வெள்ளி, 13 நவம்பர், 2009

வருத்தத்தோடு விலகுகிறேன்; மகிழ்ச்சியுடன் இணைகிறேன்: திருநாவுக்கரசர்



சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வியாழக்கிழமை வந்த திருநாவுக்கரசரை சால்வை அணிவித்து வரவேற்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு.
சென்னை, நவ. 12: "பாஜகவில் இருந்து வருத்தத்தோடு விலகுகிறேன். காங்கிரஸில் மகிழ்ச்சியுடன் இணைகிறேன்' என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார். தில்லியில் கடந்த திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் முதன்முறையாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வியாழக்கிழமை வந்தார். நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து அவரை வரவேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, மக்களவை உறுப்பினர் ஜே.எம். ஹாரூண், முன்னாள் அமைச்சர் பூவராகவன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் பாஜகவில் இருந்து விலகுவது வருத்தமாகவே உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் ஈர்க்கப்பட்டு அவர் அழைத்ததன்பேரில் 2002-ல் பாஜகவில் இணைந்தேன். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேரவில்லை. வாஜ்பாய் நிரந்தரமாக அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு பாஜக முழுமையாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. ஜின்னா குறித்து கருத்து தெரிவித்த பிறகு அத்வானியும் கட்சி தலைவர் பதவியில் இருந்து கண்ணீருடன் வெளியேற வேண்டிவந்தது. இப்போது அடுத்த தலைவர் யார் என்பதைக்கூட முடிவு செய்ய முடியாத நிலையில் பாஜக உள்ளது. தமிழகத்தில் பாஜகவை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் உள்ளிட்டோர் தங்களுக்கு தொடர்பில்லாத கட்சியாகப் பார்க்கின்றனர். தமிழகத்தில் பாஜகவுக்கு கடந்த காலமும் இல்லை. எதிர்காலமும் இல்லை. தமிழகம்தான் எனது அரசியல் களம். எனவே மத்தியப் பிரதேசத்தில் எம்.பி.யாக இருந்து தமிழக மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய இயலாது. தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முயன்றேன். அதுவும் முடியவில்லை. பாஜகவில் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள். அன்போடு நடந்து கொண்டார்கள். ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, அனந்தகுமார் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து தகவல் தெரிவித்த பிறகே காங்கிரஸில் இணைந்தேன். காங்கிரஸில் இணைந்த பிறகுகூட ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "குட்பை' சொன்னேன். ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், தங்கபாலு உள்ளிட்ட அனைத்து தலைவர்களுடன் இணைந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கப் பாடுபடுவேன். டிசம்பர் முதல் வாரத்தில் திருச்சியில் இணைப்பு விழா நடைபெறும். சோனியா அல்லது ராகுல் காந்தி ஆகியோரில் ஒருவர் அதில் பங்கேற்பார்கள் என்றார் திருநாவுக்கரசர்.
கருத்துக்கள்

கொலைகாரக் கும்பலில் அடைக்கலமாகும் திருநாவுககு மன்னிப்பே கிடையாது. குழு அரசியலில் சிக்கி அவதிப்படுவதே அவருக்கான தண்ட‌னை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2009 3:40:00 AM

Thirunavukkarasu, you are a traitor. You will pay price for your actions.

By ganesh
11/13/2009 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக