உதகை, நவ. 7: அடுத்த 2 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் அழைப்புகளில் உள்ளூர் அழைப்புகளுக்கு 10 பைசாவும், எஸ்டிடி அழைப்புக்கு 25 பைசாவும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுமென மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார். அகில இந்திய அளவிலான கிராமிய அஞ்சல் காப்பீட்டின் குறுங்காப்பீடு இயக்கத்தை, கோத்தகிரி அருகேயுள்ள சோலூர்மட்டம் கிராமத்தில் சனிக்கிழமை அமைச்சர் ராசா தொடங்கி வைத்து பேசியதாவது: நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பழமைவாய்ந்த இரு துறைகள் உள்ளன. இவற்றில் ரயில்வே துறை வர்த்தக ரீதியில் லாபம் ஈட்டி வருகிறது. அதற்கடுத்த நிலையிலுள்ள அஞ்சல் துறைக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டாலும் பொதுநலன் கருதியே செயலாற்றி வருகிறது. நாட்டில் 1 லட்சத்து 55,000 தபால் நிலையங்கள் இயங்குகின்றன. தகவல் தொழில்நுட்பம் தற்போதுள்ள அளவுக்கு வளராத காலத்தில் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்கு இருந்த ஒரே வாய்ப்பு அஞ்சல் துறை மட்டுமேயாகும். இதனால் மக்களின் நம்பிக்கையையும் பெற்றிருந்தது. அந்த உணர்வு கிராமப்புறங்களில் இன்னமும் உள்ளது. அஞ்சல் துறையின் மூலம் கிராமப் புறங்களிலுள்ள மக்களின் வசதிக்காக கிராமிய அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுங்காப்பீடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது ரூ.25 ஆயிரத்தில் இருந்து காப்பீடு செய்து கொள்ளலாம். சேமிக்கும் பழக்கம் நகர்ப்புறங்களில் அதிகளவில் உள்ளது. கிராமப்புறங்களில் அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் போதிய வசதிகள் இல்லை. இத்திட்டத்தின்கீழ் அஞ்சல் துறை ஊழியர்களே காப்பீடு செய்துள்ளவர்களின் வீடுகளுக்கு தினந்தோறும் வந்து கட்டணங்களை பெற்றுக்கொள்வர். எல்ஐசி போன்றவற்றில் காப்பீடு செய்யும்போது மருத்துவச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சேர்பவர்களுக்கு மருத்துவச் சான்றிதழே தேவையில்லை. அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை விட அஞ்சல் துறை இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு அதிகளவில் உதவும். தொலைத் தொடர்பை பொருத்தவரையில் தற்போது உலக சாதனையாக மாதத்துக்கு 15 மில்லியன் இணைப்புகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் பல புதிய நிறுவனங்களும் இத்துறையில் வரவுள்ளதால் தொழிலில் போட்டி ஏற்படுவதோடு கட்டண விகிதங்களும் குறையும். பிஎஸ்என்எல் அழைப்புகளில் இந்த மாதத்திலிருந்து நிமிடக் கணக்குக்கு பதிலாக நொடிக் கணக்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குள் உள்ளூர் அழைப்புக்கு 10 பைசாவும், எஸ்டிடி அழைப்புக்கு 25 பைசாவும் கட்டணம் அமலாகும் என்றார் அவர்.
கருத்துக்கள்
பாராட்டுகள்! சுந்தரம் சொல்வதும் உண்மைதான்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2009 4:32:00 AM
11/8/2009 4:32:00 AM
Antha 60000 kodi iruntha, India makkal ellorume free'a pesalame da..raasa..
By Sundaram
11/8/2009 12:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
11/8/2009 12:44:00 AM