திங்கள், 1 நவம்பர், 2010

தமிழருவி மணியன் பேட்டி














S.Thalapathy

 to anandh, arasezhilan_19., arivarasan, arunabarathi, harappa, me, inaivagam, jeyaraj.s, kana, karikalan, keetru, ki.ve, mahendran, Pamaran, praba, rasu, satya, senthil, tamilrajendiran, tamizhdesiyam, thambi, thiru, thiyagu, thiyagu, umayar
show details 8:08 PM (8 hours ago)

 
கோவை, திருப்பூர் என தமிழகம் முழுவதும் ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்பு, காந்திய மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தீவிர சுற்றுப்பயணம் என பிசியாக இருந்த தமிழருவி மணியனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டில் சூரிய கதிருக்காக சந்தித்தோம். தமிழ் உணர்வு பொங்க, அவர் மனம் திறந்து பேசினார்.
‘‘காந்திய மக்கள் இயக்கத்தை இப்போது துவங்க அவசியம் என்ன? காந்திய இயக்கத்துக்கு ஏதாவது நோக்கங்கள் இருக்கிறதா?’’
‘‘முழுக்க முழுக்க தேர்தல் அரசியலை மையமாக வைத்து கட்சியை உருவாக்கி, ஆட்சியை பிடித்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்பதற்காக புதிய கட்சிகளை உருவாக்கி வருகிறார்கள். பெரியாரை போல அரசியல் களத்தில் இருந்தபடி, தேர்தலில் நிற்காமல் சமூக நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்ள ஒரு இயக்கத்தை உருவாக்க யாரும் முன்வரவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவே காந்திய மக்கள் இயக்கம் துவங்கப்பட்டது. பதவி வேட்கை, பண நாட்டம் என இரண்டும் இல்லாமல் தன்னிடம் இருக்கும் அறிவை, பணத்தை, உழைப்பை சமூக மக்கள் நலனுக்கு பங்கிட்டு தருவதாக முன்வரக்கூடிய மனிதர்கள் மட்டும் இந்த இயக்கத்தில் இருப்பார்கள். இந்த இயக்கம் துவங்கி ஓர் ஆண்டு முடிந்து விட்டது. தமிழகத்தில் தன்னலமற்ற ஒரு லட்சம் பேர் மக்கள் தொண்டாற்ற முன் வருவது போல் இந்த அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆறரை கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் இந்த 1 லட்சம் பேர் தமிழகத்தின் மனச்சான்றுகளாக விளங்குவர்’’
‘‘அப்படியென்றால், தமிழகத்தில் இப்போதுள்ள காந்திய இயக்கங்கள் சரியாக செயல்படவில்லை என நினைக்கிறீர்களா?’’
‘‘தமிழகத்தில் உள்ள காந்திய அமைப்புகள் வள்ளலார் மன்றம் போல இயங்குகிறது. கதர் உடுத்துவது, மது அருந்தக்கூடாது என பிரசாரம் செய்வது, கிராமத்தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது இதுதான் காந்தியம் என்ற புரிதலோடு காந்திய அமைப்புகள் நின்று விடுகின்றன. ஆனால் காந்திய அரசியல் என்பதுதான் முக்கியமானது. ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறபோது சாத்வீகமாக, அறம் சார்ந்த வழியில், அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவதுதான் உண்மையான காந்திய அரசியல். இன்று உள்ள காந்திய அமைப்புகள் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல், காந்தி காட்டிய 3 குரங்கு பொம்மைகளாகவே இருக்கின்றன. தமிழகத்தில் மது வெள்ளமாக ஓடுகிறது. மதுக்கடை இல்லாத வீதிகளே இல்லை. டாஸ்மாக்வரி மூலம் வருமானமாக ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருகிறது. 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் உள்ள குடிமக்கள் குடித்தால்தான் அரசுக்கு வரியாக 14 ஆயிரம் கோடி ரூபாய் வரமுடியும். ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தமிழர்களை குடிக்கச் செய்த இந்த அரசுக்கு எதிராக எந்தக் காந்திய அமைப்பும் சின்ன முணுமுணுப்பை கூட காட்டவில்லை.’’
இயக்குனர் சீமானின் நாம் தமிழர்இயக்க மேடைகளில் நீங்கள் பேசியது ஏன்?
 ‘‘நாம் தமிழர் இயக்கம் முழுக்க, முழுக்க தமிழக மக்களின் இன உணர்வு மற்றும் மொழிப்பற்றையும் தூண்டி துலங்கச் செய்யும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழர்களை தமிழனாக உருவாக்கவும் சீமானால் ஏற்படுத்தப்பட்ட இயக்கம்தான் அது. காந்தியம் என்பது தாய்மொழியை முன் எடுத்து செல்வது, தாய்மொழி வழியாக கல்வியை கற்பிக்க செய்வது. சீமான் இயக்கத்துக்கும், எங்கள் இயக்கத்துக்கும் நோக்கங்களில் பெரிய வேற்றுமை இல்லை. எனவே நாம் தமிழர் இயக்க மேடைகளில் இதுவரை பேசினேன். ஆனால் சீமான் தனது இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி விட்டார். தேர்தல் அரசியலில் கலந்து விட்டார். காலநடையில் சில நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் வரும். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக இருப்பேன் என சொன்ன விஜயகாந்த் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். ஈழப்பிரச்னையில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் அணுகு முறைகள் சரியில்லை என சொல்லும் சீமான் இறுதிவரை அரசியல் களத்தில் தனியாகவே நின்று சாதிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி இப்போது ஏற்பட்டு இருக்கிறது.’’
‘‘தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்களால் ஏற்படுத்த முடியுமா?’’
 ‘‘தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இருகட்சிகளுமே ஊழலில் ஊறித்திளைக்க கூடிய ஆட்சியைத்தான் வழங்கியிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும், ‘ஆட்சி மாற்றம்நிகழ்ந்தாலும் அரசியல் காட்சி மாற்றம் நிகழ்வது இல்லை. இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் புறம் தள்ள வேண்டும் என்றால் இடதுசாரிகள், ம.தி.மு.க., பா.ம.க., தலித் அமைப்புகள் ஆகியவை தேர்தல் லாபத்தை மட்டும் கணக்கில் வைக்காமல் ஒரு பத்தாண்டு காலம் தொடர்ந்து ஒரு அணியாக திரண்டு மக்கள் இயக்கத்தை வார்த்து எடுத்தால் அரசியல் மாற்றம் சாத்தியப்படும்.’’
 ‘‘தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. அரசை நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்?’’
 ‘‘இது உடனடியாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி. இந்த ஆட்சி அகற்றப்பட்டால் அடுத்து வருவது யார் என்பது குறித்து சிந்திப்பதை விட இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற சிந்தனைதான் தமிழர் நலனுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு குடும்பம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. இந்த மண்ணில் இந்த அளவு இதுவரை நடந்ததில்லை. மக்கள் கருத்தை உருக்குலைக்க ஊடகங்களில் இருந்து பொழுது போக்கு அம்சங்களை தருகின்ற சினிமா வரை இன்றைய முதல்வரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. மாற்று கருத்தை நாகரீகமாகவும், ஆலோசனையாக எடுத்து வைத்தாலும் கூட அவர்களை இன்றைய ஆட்சியாளர்கள் பல விஷயங்களில் சோதனைகளை கொடுத்து அச்சுறுத்துகிறார்கள். இன்று எதிர் கருத்துக்களை எடுத்து வைக்க முடியவில்லை. இதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன். இதில் எந்தத் தவறும் இல்லை. முறையான தேர்தல் நடத்துவதுதான் ஜனநாயகத் தின் உயிர்த்தளம். ஆனால் திருமங்கலம்தேர்தல் பாணியின் மூலம் இந்த ஆட்சி ஜனநாயகத்தின் உயிர் நிலையை வீழ்த்தி விட்டது. சமூகத்தில் சகலத்தையும் பணம் மட்டுமே தீர்மானிக்கும் என்ற கருத்து இன்று வலுப்பெற்று இருப்பதற்கு இந்த ஆட்சிதான் முக்கியக் காரணம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை கொடுத்துவிட்டு, 80 ரூபாய்க்கு சாராயம் குடிக்க செய்யும் தி.மு.க. அரசின் இலவச திட்டங்களால் ஏழை மற்றும் அடித்தள மக்கள் உருப்படியான பலன்களை பெற முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் இன்று இருப்பது போல் ஒரு மோசமான ஆட்சியை தமிழகம் சந்திக்கவில்லை. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் போனால் ரஜினிகாந்த் அன்று சொன்னது போல் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.’’
 ‘‘இலங்கைத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசை குறை சொல்லும் பழக்கத்தை உங்களால் கைவிட முடியாதா?’’
‘‘ஈழத்தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மேற் கொண்ட முறைகள் தமிழ் இன அழிப்பை சிங்கள அரசு நடத்துவதற்கு ஆதரவாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. தன் சொந்த இனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறபோது அந்தப் பேரழிவை ஏற்படுத்திய ராஜபக்சே அரசுக்கு அனைத்து உதவி களையும் இந்திய அரசு வலியப்போய் செய்தது. தன் பதவி நாற்காலி பறி போய்விடக்கூடாது என்பதற்காக மவுனப்பார்வையாளராக இருந்து தன் வாழ்வில் தீராத களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் முதல்வர் கருணாநிதி. வரலாறுகளும், இனி வரும் தலைமுறைகளும் இவர்களை துரோகிகளாத்தான் பார்க்கும். இது உணர்வுப்பூர்வமான பிரச்னை. எனவே நடந்ததை சொல்லி வருகிறேன். திட்ட மிட்டு குறைசொல்ல வேண்டும் என்பது என் நோக்கமல்ல’’
 ‘‘விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சி மற்றும் நிலைப்பாடு எதிர்கால தமிழக வளர்ச்சிக்கு பயன்படுமா’’
 ‘‘நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் தனியாக ஓட்டுக்களை பிரித்து மறைமுகமாக தி.மு.க.& காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் பேருதவி செய்து இருக்கிறார். வாக்குகளை விஜயகாந்த் பிரிக்காமல் இருந்திருந்தால் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்காது. மறைமுகமாக காங்கிரஸ் கூட்டணிக்கு உதவும் அவர் இன்னும் 40 ஆண்டுகள் அரசியல் நடத்தினாலும் எம்.ஜி.ஆர் ஆகப்போவதில்லை. வரவிருக்கும் தேர்தலில் அவர் தனியாக நின்றால் அவரோடு இருப்பவர்கள் அவரை விட்டு ஓடி விடுவார்கள். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக எந்த வகையிலும் அவர் தன்னை நிரூபிக்க வில்லை. விஜயகாந்த் தன் மனைவி, மைத்துனருடன்தான் அரசியலை துவங்கி இருக்கிறார். கறுப்பு பணம் வாங்கி பழக்கப்பட்டவர்கள் அரசியலுக்கு வந்து ஊழலை ஒழிப்பார்கள் என எதிர்பார்ப்பது அறிவுடமை ஆகாது. அவர் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்தால், அவரது வாக்கு வங்கி சரிந்து விடும். அதேசமயத்தில் அவர் அரசியல் களத்தில் எந்தத் தேவையையும் நிறைவேற்ற முடியாத ஒரு தனிமரமாக இருந்தால், பின்நாளில் அவரது கட்சி சிதறிவிடும்.’’
‘‘காங்கிரஸை எதிர்க்கும் நீங்கள், சில நாட்கள் காங்கிரஸில் இருந்தது ஏன்?’’
‘‘(புன்சிரிப்புடன்) நான் காந்தியை படித்தவன். காமராஜர் என்ற அரசியல் முழுமுனியை பார்த்தவன். அதனால் காங்கிரசில் இருந்தேன். ஆனால் தற்போது எந்த லட்சியமும் இல்லாமல் காங்கிரஸ் செயல் படுவதை உணர்ந்த நான் அதிலிருந்து விலகினேன்’’.நன்றி : சூரிய கதிர்

S.Thalapathy,B.E.,

280,NORTH MASI STREET,
MADURAI - 625 001.
PHONES : 0452 - 2621 767,
Mobile : 98430 - 50198

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக