செவ்வாய், 2 நவம்பர், 2010

தலையங்கம்: இதுவல்ல நல்லாட்சி!

ஓர் அரசின் அடிப்படைக் கடமை மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பது, போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதும், தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வதும் மட்டுமல்ல, சராசரிக் குடிமகனின் அன்றாட வாழ்க்கை நிம்மதியாகக் கழிவதற்கும், அவரவர் தத்தம் வேலைகளை எந்தவிதத் தடையோ, இடையூறோ இல்லாமல் தொடர்வதற்கு வழிகோலுவதும்தான்.  பெருகிவிட்ட மதுபானக் கடைகளும், தெருவுக்குத் தெரு, வட்டத்துக்கு வட்டம், பகுதிக்குப் பகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தும் அரசியல் கட்சிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூக விரோதக் கும்பல்களும், சராசரிக் குடிமகனின் அடிப்படைப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டிருக்கின்றன.  சென்னையில் மட்டுமே ஆரம்பத்தில் காணப்பட்ட "கட்டைப் பஞ்சாயத்து' தாதாக்கள் இன்று தமிழகத்தின் சிறு நகரங்களில்கூடக் காளான்களாகப் பெருகிவிட்டிருக்கின்றனர். தெருவில் மணலும் செங்கல்லும் வந்து இறங்கினால் "மாமூல்' வசூலிக்க வார்டு உறுப்பினரிலிருந்து, தாதா கும்பல்வரை நடத்தும் அடாவடி மிரட்டல்களும், அத்துமீறல்களும், சட்டம் செயலிழந்துவிட்டதைத்தானே எடுத்துரைக்கிறது.  அதையெல்லாம்கூட சகித்துக் கொள்ளலாம். தைரியமாகப் பெண்கள் நடமாட முடியவில்லை, வயதானவர்கள் தனியாக வாழ முடியவில்லை, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏற்பட்டால் அதையும், ஆட்சியாளர்களைத் தவறாகத் தேர்ந்தெடுத்தற்காகத் தலையெழுத்தே என்று ஏற்றுக்கொள்ளவா முடியும்?  சமீபகாலமாகப் பணத்துக்காக குழந்தைகளைக் கடத்தும் செயல்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது காவல்துறை செயல்படுகிறதா இல்லையா என்கிற சந்தேகம் ஏற்படாமல் இல்லை. சில தினங்களுக்கு முன்பு கோவையில் ஒரு தொழிலதிபரின் இரு குழந்தைகளைக் கடத்திச் சென்று அந்த ஓட்டுநர், ஆற்றில் தள்ளிக் கொலை செய்திருக்கிறார். சிறுமியின் சடலம் கிடைத்து அந்தக் குழந்தையின் இறுதி ஊர்வலத்துக்குத் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தாலே மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பது புரிந்தது.  சிறுமியுடைய தம்பியின் சடலமும் மறுநாள் மீட்கப்பட்டது. போலீஸ் தன்னைப் பிடித்துவிடும் என்று பயந்து கொலை செய்ததாக ஓட்டுநர் கூறியுள்ளார். அவர் மட்டும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்து, குழந்தைகளை ஒப்படைத்திருந்தால், அதிகபட்சம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்திருக்கும். குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பர். சரண் அடைந்த ஓட்டுநரை, பெற்றோரே கூட வழக்கில் தீவிரம் காட்டாமல் மன்னித்திருக்கக் கூடும். அதன்மூலம் அந்த ஓட்டுநரின் குடும்பமும் தலைகுனிந்து வாழும் அவலநிலை ஏற்பட்டிருக்காது.  சென்னை முகப்பேரில் தனியார் பள்ளியில், 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் திங்கள்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளார். சிறுவனின் தந்தை கிரானைட் தொழில் செய்கிறார். இதுவும் பணத்துக்காக நடத்தப்பட்ட கடத்தல்தான் என்று தெரிகிறது.  கடந்த ஜூன் மாதத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் குழந்தைகள் இருவர் ஒரு வார இடைவெளியில் கடத்தப்பட்டனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த வேகம் மற்றவர் விஷயங்களில் இல்லாமல் போவது ஏன் என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.  சொத்துகளைப் பறிப்பதற்காக அரசியல்வாதிகளும், ரவுடிகளும் இதுபோல ஆள்கடத்தலைத் தொடங்கி வைத்தார்கள். அவ்வாறு புகாரில் சிக்கி கைதானவர்கள் மீதான வழக்குகள் இன்னும் முடியவில்லை. குற்றவாளிகளின் அரசியல் பின்புலம் காரணமாக, இதுபோன்ற ஆள்கடத்தலில் ஈடுபடுவோரை ஒடுக்க காவல் துறையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லையோ என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சென்னையில் மட்டும் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவை போலீஸ் வழக்குப் பட்டியலில் வந்திருப்பவை. வழக்கிற்கு வராமல் சம்பந்தப்பட்டவர்களே பைசல் செய்து கொண்டவை இரண்டு, மூன்று மடங்கு அதிகம் இருக்கலாம் என்று காவல் துறையினரே ஒப்புக் கொள்கின்றனர்.  மணல் கடத்தல், அரிசி கடத்தல், கிரானைட் கற்கள் கடத்தல் இவையெல்லாம் போதாதென்று, கந்துவட்டிக் கும்பலும், கட்டைப் பஞ்சாயத்து கோஷ்டிகளும், கேள்வி கேட்க யாருமில்லாமல் வளைய வருவதுதான், அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தின் இன்றைய நிலைமை. இந்த மாஃபியாக்கள் அனைத்துமே ஏதாவது அரசியல் பின்புலத்தில்தான் இயங்குகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்.  அரசியல்வாதிகளுடன் சமூகவிரோதிகள் கைகோத்துச் செயல்படுவது தடுக்கப்படாவிட்டால், இங்கே தீவிரவாதம் தலைதூக்காமல் போனாலும், திரைப்படங்களில் காட்டுவதுபோல வெட்டரிவாளும், வீச்சரிவாளும், ஆசிட் பல்புகளும், நாட்டு வெடி குண்டுகளும் கோலோச்சத் தொடங்கும்.  இரு தினங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூரில் ஒரு பெண்ணை அடித்து, கையைப் பிடித்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற இளைஞர்கள் பற்றி போலீஸில் புகார் தரப்பட்டது. மோட்டார் சைக்கிளின் எண் தவறாக உள்ளது என்று கூறி அவர்களை இன்னும் போலீஸôரால் பிடிக்க முடியவில்லை. அந்த இளைஞர்கள் யாருக்குச் சொந்தமோ? யாருக்கு நெருக்கமோ? நமக்கென்ன தெரியும்?  அம்பத்தூர் நகராட்சி கவுன்சிலர் ஒருவரின் மகன் கடந்த மாதம் மாநகரப் போக்குவரத்து ஓட்டுநரை அடித்தாரே, கவுன்சிலர் மீது கட்சி என்னதான் நடவடிக்கை எடுத்தது? வாரிசுகளின் கொட்டத்தை அடக்கக் கட்சித் தலைமை ஏன் தயங்குகிறது?  முந்தைய ஆட்சியில் நடக்கவில்லையா என்று கேட்பதோ, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இது குறைவுதான் என்று கூறுவதோ இதற்குச் சமாதானம் ஆகிவிடாது. முந்தைய ஆட்சியில் தவறுகள் நடந்ததால்தானே அந்த ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.  அங்கே நடக்கவில்லையா? இங்கே நடக்கவில்லையா? என்று புள்ளிவிவரங்களை அடுக்கி வாய்ப்பந்தல் போடுவதன்மூலம் பிரச்னையைத் திசைதிருப்பாமல், சீர்கெட்டுக்கிடக்கும் சட்ட ஒழுங்கு சூழ்நிலையை சீர்திருத்தாவிட்டால், இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவதற்கு வேறு காரணம் எதுவுமே தேவையில்லை. அரிசி கொடுத்தது, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தது, காப்பீட்டுத்திட்டம், கான்கிரீட் வீட்டுத் திட்டமெல்லாம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத அரசுக்குத் தேர்தலில் கை கொடுக்காது என்பதுதான் கடந்த காலம் உணர்த்தும் உண்மை!
கருத்துக்கள்

சூழலுக்கேற்ப தாக்குவது அல்லது தாங்குவது என்னும் தவறான அணுகுமுறை முதல்வரிடம் உள்ளதால் எக்சுபிரசு வளாகத் தொடக்க விழாவில் தினமணியைப் பாராட்டினார். அதற்கு முன்புதான் கருத்தாளர் மதியைச் சாடினார். இப்பொழுது மீண்டும் அதே போன்ற வரிகளை எடுத்தாளலாம். யாரை எங்கே வைப்பது என்றே தெரியாமல் நடந்து கொள்ளாமலும் இடி்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பால் இலானும் கெடும் என்றும் செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்புடைமை ஆள்வோர்க்கு வேண்டும் என்றும் வலியுறுத்தும் வான்புகழ் வள்ளுவத்தை நினைத்தும் குறைகளைக் களைந்தும் நிறைகளைப் பெருக்கியும ஆவன செய்வாராக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 2:42:00 AM
சராசரி தமிழனின் உள்ளக் குமுறல்களுக்கு எழுத்து வடிவம் தந்த தினமணிக்கு நன்றி. No More Comparison Business, No More statistics. We Need a Good Government, a Transparent Government and the one Open to Public's Concerns.
By மதுரைக்காரன்
11/2/2010 12:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக