ஞாயிறு, 31 அக்டோபர், 2010

மொழிப் பயிற்சி

 
மொழிப் பயிற்சி- 11: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!

பேசும்போதும், எழுதும்போதும் சொற்றொடர்கள் அமைப்பதில் அத்து எனும் சாரியைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.  ஒரு திருமடத்தின் தலைவரைக் (அதிபர்) காண புலவர் பலர் வந்தனர். இறுதியாக வந்தவர் சோழநாட்டின் கடைமடைப் பகுதியைச் சார்ந்தவர். மடாதிபதி சற்றே கேலியாக அந்தப் புலவரை நோக்கி ""வாரும் கடை மடையரே'' என்றார். புலவர் என்ன ஒன்றும் அறியாதவரா? ""வந்தோம் மடத் தலைவரே'' என்று திருப்பியடித்தார்.  இப்படி இருபொருள் தோன்றத் தமிழில் நிரம்பச் சொல்லலாம்.  மடத்தலைவர் என்று சொல்லாமல், மடத்துத் தலைவரே என்று சொல்லியிருந்தால் பொருள் நேராக அமையும். இதற்கு அத்து என்ற சாரியைப் பயன்படுகிறது. சார்ந்து வருவது சாரியை. இதற்குத் தனியே பொருள் இல்லை.  மனம் என்பது தனித் தமிழ்ச் சொல். (மனசு, மனது வேறு ). இச்சொல்லுடன் "இல்' உருவு சேர்த்தால் மனத்தில் என்று எழுத வேண்டும். ஏன்? மனம் + அத்து + இல் என்று இடையில் அத்துச் சாரியை சேர்க்க வேண்டும் என்பது இலக்கண விதி.  குளம் + இல் என்பதும் குளத்தில் (குளம் + அத்து + இல்) என்றுதானே சொல்லப்படுகிறது. பணத்தில் பாதி என்று சொல்லுகிறோம். இங்கு பணம் என்ற சொல்லுடன் அத்துச் சாரியை இணைந்துள்ளது. ஆக, தமிழில் "அம்' என்று முடியும் பல சொற்களுடன் அத்துச் சாரியைச் சேர்த்தல் என்பது வழக்கத்தில் உள்ள இலக்கண விதியே.  இன்னும் வேண்டுமா? குலம் - குலத்தில், நலம் - நலத்தில், இனம் - இனத்தில், வலம் - வலத்தில். இப்படி எல்லாவற்றிலும் "இல்' உருபு சேர்த்தால் "அத்து' சேர்வதைப் பார்த்தோம். அத்துச் சாரியை இல் உருபோடு மட்டுமே வருவதா? இல்லை. உடன் எனும் உருபு சேர்த்துப் பாருங்கள். நலம் + உடன் = நலத்துடன், சினம் +உடன் = சினத்துடன் இன்னும் முன் கூறிய பணம், குணம், மனம், மணம் எச்சொல்லோடும் உடன் சேரும்போது அத்துச் சாரியைத் தோன்றும். அத்துச் சாரியையின் அவசியத்தை உணர இவை போதும்.  சொற்றொடர் முடித்தல்  வாக்கியங்களை முடிக்கும்போது ஒருமை, பன்மை மாறாதிருத்தல் வேண்டும் என்பதோடு ஐம்பால் வினைமுடிவுகள் பொருத்தமாக அமைத்தல் வேண்டும்.  எடுத்துக்காட்டாக:  அவன் நல்லவன் அல்லன் (ஆண்பால்)  அவள் நல்லவள் அல்லள் (பெண்பால்)  அவர் நல்லவர் அல்லர் (பலர் பால்)  அது நல்லது அன்று (ஒன்றன் பால்)  அவை நல்லவை அல்ல (பலவின் பால்)  காலப்போக்கில் இந்த இலக்கணத்தைப் பலரும் பொருட்படுத்துவதில்லை. அல்லது மறந்து போயினர் என்று சொல்லலாம். எல்லா பால், இடங்களிலும் நாம் இப்போது பயன்படுத்தும் ஒரே சொல் அல்ல என்பது மட்டுமே. நானல்ல, அவரல்ல, அதுவல்ல, அவையல்ல என்றுதான் பேசுகிறோம், எழுதுகிறோம்.  இல்லை, அல்ல  இன்மைப் பொருளை உணர்த்த மட்டுமே இல்லை எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. புத்தகம் மேசை மீது இல்லை- இது சரியான வாக்கியம். "நான் அப்படிப்பட்ட மனிதன் இல்லை' - இது பிழையுடைய வாக்கியம். இது "நான் அப்படிப்பட்ட மனிதன் அல்லன்' என்று இருந்தால் சரியாகும். "மரத்தில் காய்கள் இல்லை', "வயிற்றுக்குச் சோறு இல்லை'என்பன போன்று இன்மைப் பொருளை உணர்த்தவே இல்லை எனும் சொல் பயன்பட வேண்டும். "இன்று பள்ளி இல்லை' என்பது பிழை. "இன்று பள்ளிக்கு விடுமுறை' என்பதே சரியானது.  "அல்லன்', "அல்லள்' என்பனபோல் "அல்லை' எனும் சொல்லும் உயர்திணைப் பயன்பாட்டில் நம் இலக்கியங்களில் காண முடியும். மந்தரையிடம் கைகேயி உரைக்கின்றாள்:  "" எனக்கு நல்லையும் அல்லை என்மகன் பரதன்  தனக்கு நல்லையும் அல்லை தருமமே நோக்கில் உனக்கு நல்லையும் அல்லை'' என்று முன்னிலை இடத்தில் வந்து நல்லவள் ஆகமாட்டாய் எனப் பொருள் தந்தது.  (தமிழ் வளரும்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மொழிப் பயிற்சி - 12: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!


குறைந்த படிப்புடைய வாசகர்களுக்கு மட்டுமல்லாது, நிரம்பப் படித்தவர்களும் ஊடகங்களில் பணியாற்றுபவர்களும் அறிய வேண்டும் என்றே சில நுட்பமான செய்திகளையும் இப்பகுதியில் எழுதி வருகிறோம். நம் பேச்சு வழக்கிலுள்ள சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம். "அவர்தான் இப்படிச் சொன்னார்' இவ்வாக்கியம் அவர்தாம் இப்படிச் சொன்னார் என்றிருத்தல் வேண்டும். அவன்தான், அவர்தாம், அதுதான், அவைதாம் என்பனவற்றை நோக்குக."அதுகளுக்கு என்ன தெரியும்?'"இது பற்றியெல்லாம் அதுகளுக்கு என்ன தெரியும்? என்று இயல்பாகப் பேசுகிறோம். அவர்களுக்கு என்ன தெரியும் என்று சரியாகச் சொல்ல வேண்டும்.உயர்திணையை அஃறிணையாக்கிப் பின் பன்மையை ஒருமையாக்கும் இரண்டு பிழைகளைத் தவிர்க்க வேண்டும். இந்தச் செயலுக்கு நான் பொறுப்பல்ல என்று முடித்தல் தவறு. "நான் பொறுப்பல்லேன்' என்று முடித்தல் வேண்டும். பன்மையில் சொன்னால் யாம் (நாம்) பொறுப்பல்லோம் அல்லது பொறுப்பல்லேம் என முடித்தல் வேண்டும்.அவர் தன் நாட்டிற்காக மிக அரும்பாடுபட்டார். இந்த வாக்கியத்தில் பிழையுண்டா? உண்டு. அவர் தம் நாட்டிற்காக என்று திருத்துதல் வேண்டும். அவன், அவள், அது வரும்போது தன் என்றும், அவர் அவை வரும்போது தம் என்றும் இணைப்புச் செய்க. "திருவள்ளுவர் தன் திருக்குறளில் சொல்லாத அறம் இல்லை' இவ்வாக்கியத்தில் திருவள்ளுவர் தம் திருக்குறளில் என்று ஒரு சிறிய திருத்தம் செய்தால் பிழையற்றதாகும்.கவிதாயினி- சரிதானா?பேராசிரியர், தலைமையாசிரியர் என்று ஆண்களைக் குறிக்கும் நாம் பேராசிரியை, தலைமையாசிரியை என்று பெண்களைக் குறிப்பது ஏன்? பெண்ணுரிமை பேசும் மகளிரே கூட இது தம்மை குறைவு செய்கிறது என உணர்வது இல்லை. பெண்ணைப் பேராசிரியை, தலைமையாசிரியை எனக் குறிப்பிட்டால், ஆணைப் பேராசிரியன், தலைமையாசிரியன் என்று அன் விகுதி போட்டுச் சொல்ல வேண்டும். கவிதாயினி என்றும் பெண்ணுக்கு அடைமொழி தருகிறார்கள். கவிஞர் என்பது ஆண், பெண் இருவர்க்கும் பொதுதானே? (அர்-மரியாதைப் பன்மை) கவி,தா, இனி- இனிமேலாவது கவி தருக என்று பொருளாகாதோ? மருத்துவர், பொறியாளர், முதல்வர், எழுத்தாளர் என்றெல்லாம் ஆண், பெண் இருபாலரையும் குறிக்கும் நாம் பேராசிரியை, தலைமையாசிரியை, கவிதாயினி என்று சிலவற்றைப் பெண்களுக்குரியதாகப் பயன்படுத்துதல் ஏனோ? ஆண் ஆசிரியர் ,பெண் ஆசிரியர் என்று வேறுபடுத்தி அறிவதற்காக இப்படிக் குறிக்கிறோம் என்பார் சிலர். அந்த அடைமொழிக்குப் பின் வருகின்ற பெயரை வைத்து, அவர் ஆண் அல்லது பெண் என்று அறியமுடியுமே!"உம்' என்னும் இடைச்சொல்பெயர்,வினை, இடை, உரி எனும் நான்கு வகைச் சொற்களுள் பெயரும் ஆகாது, வினையும் ஆகாது, குணம் சுட்டும் உரிச்சொல்லும் ஆகாது, பெயர்க்கும், வினைக்கும் இடையே நின்று செயற்படுபவை இடைச் சொற்கள். உவமை உருபுகள் (போல, போன்ற, ஒத்த, நிகர்த்த) அசைநிலைகள் ஏகாரம், ஓகாரம் போன்றவை. உம் எனும் இணைப்புச் சொல். இவையெல்லாம் இடைச்சொற்கள் எனப்படும்.முத்தும், மணியும், பவளமும் நிறைந்திருந்தன. இவ்வாக்கியத்தில் வரும் "உம்' என்பது இடைச்சொல். கபிலரும், பரணரும் வந்தனர். பூரியும் கிழங்கும், பொங்கலும் வடையும் இவற்றில் வருகின்ற உம் இணைப்பை உண்டாக்கும் ஓர் இடைச்சொல். ஆனால் இந்நாளில், கடிதம் போடவும், வந்து செல்லவும், ஐயாவைப் பார்க்கவும் என்று பலரும் சொல்லி வருகிறோம். ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு சொல்லை கட்டளைப் பொருளில் வினைமுற்றாகப் பயன்படுத்துகிறோம். இது பிழையன்றோ?ஆங்கிலமொழியின் தாக்கம் காரணமாக, உம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் புதிதாக மற்றும் என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறோம். தமிழில் மற்று எனும் அசைச் சொல் உண்டு. மற்றொன்று - வேறொன்று என்ற பொருள் உண்டு. ஆனால், இந்நாளில் பேச்சு, பாட்டு மற்றும் நடனப் போட்டிகள் நடைபெறும் என்று ஆங்கிலத்தில், சிலவற்றைச் சொல்லி இறுதிக்கு முன்னதாக ஹய்க்  சேர்ப்பது போல் மற்றும் சேர்த்து வருகிறோம். இது சரிதானா? "சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி வகுப்பு நடைபெறும்' இந்த மற்றும் தேவைதானா?அருவி - நீர்வீழ்ச்சிஎல்லாப் பொருள்களுக்கும் தமிழில் சொல் உண்டு. நமக்குப் புதிதாக அறிமுகமான வந்தேறிய பொருள் என்றால் அதற்கும் ஓர் ஆக்கச் சொல்லைக் கண்டறிவது தமிழில் எளிதே.   கடல், மலை, அருவி எல்லாம் தமிழில் என்றென்றும் இருப்பவை. மலையிலிருந்து நீர் கொட்டுவதை அருவி என்று தமிழன் குறித்தான். நீர் உயரத்திலிருந்து கீழே விழுவதால் "வாட்டர் ஃபால்ஸ்' என்று ஆங்கிலத்தில் குறித்தார்கள். இதை மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்று சொல்வது சரியா? அருவி இருக்க நீர்வீழ்ச்சி எதற்கு? தாய்ப்பால் இருக்கப் புட்டிப் பால் கொடுப்பதேன்?(தமிழ் வளரும்)
++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக