ஞாயிறு, 31 அக்டோபர், 2010

நீதிமன்றத்திலும் தமிழ் - காமராசர்

இப்படிப் பேசியுள்ள பெருந்தலைவர்தான் கட்சி அரசியல் கண்ணோட்டத்தில் 1971 ஆம் ஆண்டில் கல்லூரிகளில் தமிழ்வழிக்க்கல்வி நடைமுறைக்கு
வருவதாக இருந்த பொழுது மாணவரக்ளைத் தூண்டிவிட்டு எதிராகக் கிளர்ச்சி
நடத்தினார். இதனால் அஞ்சிய கலைஞர் வாழ்நாள் முழுவதும் தமிழ்வழிகல்விக்கு எதிராக இருந்த இலட்சுமணசாமி (ஏ.எல்.முதலியார்) யைக் கொண்டு ஓராள் ஆணையம் போட்டு, தமிழ்வழிக்கல்வியை நிறுத்தினார். அதே போல் விடுதலையில் எழுதியுள்ள எழுத்துச் சிதைவு  இலக்கியத்திற்கும் மொழிக்கும் இனத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடியன
எனக் காலம் காலமாகச் சொல்லப்பட்டவை உண்மை என்பதை இன்று இணையத்தில்
 ஒருங்குறிப் போர்வையில் சமற்கிருத வடிவங்களைக் கொண்டு வரும் சதி மெய்ப்பிக்கின்றது. எழுத்துச்சிதைவு இனத்தை அழிப்பதே என்பதை அறிய நட்பூ  இணைய இதழில் (natpu.in)  இலக்கியப் பகுதியில் காண்க.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


நீதிமன்றத்திலும் தமிழ்

October 31st, 2010
முதலமைச்சர் திரு. காமராசர் அவர்கள் நேற்று மாலை சட்டக் கல்லூரித் தமிழ் இலக்கிய சங்கத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில், தமிழ்நாட்டின் நீதிமன்றங்களிலும் தமிழிலேயே நடவடிக்கை நடக்கப் போகிறது; இக்கல்லூரி மாணவர்கள் இப்போதே தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வைத்தியம், எஞ்சினியரிங் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தமிழ் உடனடியாக நுழைய முடியாவிட்டாலும், சட்டத் துறையிலாவது நுழைவது எளிதும், அவசரமும் ஆகும். ஏனெனில், சட்டமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடக்குமானால், ஏழை எளியவர்களில் பலர் இன்றையப் பட்டதாரி வக்கீல்களைக் காட்டிலும் பல மடங்கு திறமையாக சட்ட நுணுக்கங்களை எடுத்துக்காட்டி வாதாடுவர் என்பதில் அய்யமில்லை. இன்றைய வக்கீல் உலகம் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்குக் காரணம், சட்டப் புத்தகங்கள் இங்கிலீஷில் இருக்கின்ற ஒரே காரணம் தவிர வேறல்ல. இவைகளைத் தமிழில் மொழி பெயர்த்துவிட்டால் நீதியின் விலை இவ்வளவு அதிகமாயிருக்காது.
மற்ற விஞ்ஞான நூல்களைப் போன்ற மொழி பெயர்ப்புத் தொல்லை சட்டப்புத்தகங்களின் மொழி பெயர்ப்பில் இல்லை. சிறப்பான ஒரு சில சொற்களை இங்கிலீஷிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம்.
நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு தனி மொழி நாடாகப் போகிறது. அதுமுதலே மாஜிஸ்ட்ரேட் கோர்ட்களிலாவது தமிழில் நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் இருக்கவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கவேண்டும். பிறகு 1957 ஜனவரி முதல் உயர்நீதிமன்றத்திலும் தமிழில் நடக்கவேண்டுமென்று உத்தரவிடலாம்.
தன்னைப்பற்றி நீதிமன்றத்தில் என்ன பேசப்படுகிறது என்பதைக் குற்றவாளி உணர்ந்துகொள்ளவேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கூறுகிறார்.
ஆம்! இதுதான் உண்மையான ஜனநாயகம் ஆகும். இன்று நீதிமன்றமும் கோவிலும் ஒன்றாகவே இருக்கின்றன. ஒன்றில் இங்கிலீஷில் பேசும் வக்கீல்! இன்னொன்றில் சமஸ்கிருதத்தில் பேசும் அர்ச்சக வக்கீல்! வக்கீல் கூட்டமும் அர்ச்சகக் கூட்டமும் வயிற்றுப் பிழைப்பு நடத்துவது, மற்றவர்களின் மடமையை மூலதனமாக வைத்துத்தான்.
ஆகவே, நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும். இதற்கு முன்னணி வேலையாக, ஒவ்வொரு சட்டப் புத்தகத்தையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பொறுப்பையும், செலவையும் ஆட்சியாளரே ஏற்றுக்கொள்ளவேண்டும். தமிழ்ப் புலவர்களாயுள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலரிருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தைச் சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிக்கலாம்.
இதேபோல் ஆட்சி நிருவாகத் துறையிலும், இங்கிலீஷ் இன்றுள்ளது போலவே, தமிழும் இயங்கவேண்டுமானால், இங்கிலீஷ் படித்த தமிழ்ப் புலமைப் பட்டதாரிகளையெல்லாம் சர்க்கார் பணிமனைகளில் ஏராளமாக நியமிக்கவேண்டும். இவர்களுக்குக் கொடுத்தவை போக மீதியிடங்களைத்தான் மற்றப் பட்டதாரிகளுக்குக் கொடுக்கவேண்டும். நல்ல இங்கிலீஷ் படிப்புள்ள
தமிழாசிரியர்களையும் சர்க்கார் பணிமனைகளில் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்தவேண்டும்.
இதுமட்டுமல்ல, தமிழில் சுருக்கெழுத்தும், டைப்ரைட்டிங்கும் கற்றுத் தேர்ச்சி பெறக்கூடியவர்கள் ஏராளமாகத் தேவை. இத்தேர்வுகளுக்குச் செல்வோரில் 100 க்கு ஒருவர் இருவருக்குத்தான் இன்று வெற்றி கிடைக்கிறது. இந்தக் கடுமையைத் தளர்த்தவேண்டும்.
அச்சுப் பொறியிலும் அவசர மாற்றம் ஏற்பட வேண்டும். தானே உருக்கி வார்க்கும் தமிழ் மானோடைப் (monotype) இயந்திரங்கள் பெருக வேண்டும். இம்முயற்சியில் கோவை நவ இந்தியா உரிமையாளர் தீவிரமாக ஈடுபட்டு வெற்றி கண்டிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். இத்தொழிற்சாலையில் உருவாக்கப்படுகின்ற ரோட்டரி அச்சு இயந்திரத்தையும் நாமே நேரிற் கண்டு வியப்படைந்தோம்.
இவைகள் மட்டுமல்ல, விஞ்ஞான நூல்களை யெல்லாம் தமிழில் ஆக்கி மலை மலையாகக் குவிக்கவேண்டும்.
கல்லூரிகளிலும் தமிழிலேயே பாடங் கற்பிக்கப்பட வேண்டும். என்ற கல்வியமைச்சரின் ஆசை உண்மையாயிருக்குமானால் தமிழ் மொழி பெயர்ப்புப் படை (Translation Army) ஒன்று தயாராக வேண்டாமா? இந்தப் பொறுப்பு யாருடையது? இதற்காக இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் பெருந்தொகை ஒதுக்கினால்தான் முடியும்.
இவற்றையெல்லாம் செய்யாவிடில் சில தமிழ்ப் புலவர்கள் தமிழ், தமிழ் என்று கூறுவது போல், மந்திரிகளும் பேச்சளவில் கூறி வருகிறார்கள் என்றுதான் கருதவேண்டியிருக்கும்.
தமிழ் வளரவேண்டுமானால், இவ்வளவு துறைகளிலும் ஆக்க வேலைகள் நடக்கவேண்டும். இவைகளுக்கெல்லாம் இடுக்கண்ணாக உள்ள இன்றையத் தமிழ் நெடுங்கணக்கு சுருங்கவேண்டும். தேவையற்ற எழுத்துக்களை நீக்கிவிடவேண்டும். குறைந்தபட்சம் விடுதலையின் எழுத்து மாற்றங்களையாவது ஏற்றுக்கொள்ளவேண்டும். திரு. ஓமந்தூர் ரெட்டியார் அவர்களின் ஆட்சியில்,
திரு. அவிநாசிலிங்கம் அவர்களது முயற்சியினால் முடிவு செய்யப்பட்ட தமிழ் எழுத்து மாற்ற உத்தரவைக் குப்பைத் தொட்டியில் போட்டார், திரு.ஆச்சாரியார் அவர்கள். இல்லையேல், இன்று எல்லாப் பாடப் புத்தகங்களும் அறிவுக்கேற்ற முறையில் திருந்திய எழுத்துக்களுடன் அச்சிடப்பட்டவைகளாயிருக்கும்.
தமிழில் ஆட்சி நடப்பதென்றால் சுளுவல்ல. பல அவசர மாற்றங்கள் திருத்தங்கள் ஆக்க வேலைகள் செய்யவேண்டும். ஆட்சியாளரிடம் அகம்பாவ உணர்ச்சி இருக்கக்கூடாது. மாற்றார் கூற்றிலும் உண்மையிருக்கும் என்ற பரந்த உணர்ச்சி வேண்டும்.
(“விடுதலை” தலையங்கம், 1.9.1956)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக