ஞாயிறு, 31 அக்டோபர், 2010

10 கோடி கேட்ட புலிகளை விரட்டிய அனுப்பிய கலைஞர் – பழ.நெடுமாறன்

10 கோடி கேட்ட புலிகளை விரட்டிய அனுப்பிய கலைஞர் – பழ.நெடுமாறன்


இலங்கைத் தமிழின அழித்தொழிப்பு என்பது… இன்னமும் தமிழ்நாட்டில் ஆறாத ரணமே! கடந்த வாரம் சென்னையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந் தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலானது’ என்ற குறுந்தகடு வெளி யீட்டு விழாவில்… ஈழத் தமிழ் அனல் வீசியது!
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முதல் பிரதியை வெளியிட, ம.நடராசன் பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுஇருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக அவரின் அண்ணன் ம.சாமி நாதன் குறுந்தகட்டைப்பெற்றுக் கொண்டார். கல்யாணவீடுகளில் கட்டாயம் இடம் பிடிக்கும் ‘வாராய், நீ வாராய்’ பாடலைத் தந்த திருச்சி லோகநாதனின் மகன் டி.எல்.மகராசன் இசைய மைத்து, மேடையிலேயே இரண்டு பாடல்களையும்பாடி, தமிழ் உணர்வாளர்களை உற்சாகப் படுத்தினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், ”யாழ்ப் பாணத்தில் தமிழர்களைப் பட்டினி போட்டுக் கொல்ல சிங்கள அரசு முயன்றது. இதைத் தடுத்து நிறுத்துவதுபற்றி தி.க. தலைவர் கி.வீரமணியும், நானும் அப்போது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கலைஞரை சந்தித்தோம். அவருடன் வைகோவும், எஸ்.எஸ்.தென்னரசும் இருந்தனர். இரண்டு மணி நேரம் மன்றாடினோம். கருணாநிதியோ, ‘பிரபாகரன் என்னை மதிக்கவில்லை’ என்றார். ‘அந்த மக்களுக்காகவாவது நீங்கள் பேசக் கூடாதா?’ என்று கேட்டோம். ‘எல்லாம்ஒன்றுதானே… அந்த மக்களும் அவரைத்தானே தலைவனாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்’ என்றார். உடனே, எங்களுடன் வந்திருந்த ‘விடுதலை’ பத்திரிகை மேலாளர் சம்பந்தம், ‘பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவாக தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறீர்களே. அதன் தலைவர் யாசர் அராஃபத் உங்களை வந்து எப்போதாவது பார்த்திருக்கிறாரா?’ என்றதும், கலைஞர் கடுமையாகக் கோபம் அடைந்தார்.
இலங்கை – இந்திய உடன்பாட்டை ஆதரித்து அறிக்கை கொடுக்குமாறு மறைந்த ஈழத் தலைவர் அமிர்தலிங்கத்திடம் கலைஞர் சொன்னாரா, இல்லையா? ‘நீங்கள் எவ்வளவு தியாகம் செய்து வளர்த்திருப்பீர்கள்? உங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவர் (பிரபாகரன்) தன்னை தலைவன் எனப் பிரகடனம் செய்யப் பார்க்கிறார். இந்திய ராணுவம் அங்கு போய்விட்டது. இரண்டு நாள்களில் அவர் கொட்டத்தை ஒடுக்கி, அவரையும் பிடித்து உள்ளே போடுவார்கள். நீங்கள் தைரியமாக ஆதரித்து அறிக்கை கொடுங்கள்… நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று இந்தப் பெரிய மனிதர் சொன்னது உண்மையா, இல்லையா?
விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர். கோடிகளைக் கொட்டிக் கொடுத்தார். அதுபோல கலைஞரும் பணம் தருவார், வாங்கவேண்டும் என்று சில புலித் தம்பிகள் கூறியதும் அவர்களையே பிரபாகரன் அனுப்பிவைத்தார். அவர்கள் கலைஞரிடம் ரூ. 10 கோடி கேட்டார்கள். சீற்றமான கலைஞர், அவர்களை விரட்டி அனுப்பினார். எம்.ஜி.ஆர். கோடிகளைக் கொடுத்தபோது இவர் 50ஆயிரம் தந்து, விளம்பரம் தேட முயன்றார். அதற்கு புலிகள் இசையவில்லை என்பதால், அவர்கள் மீது என்னென்னவோ பழிகளை சுமத்தினார்.” என்று பகீர் தகவல்களாகத் தந்தார் நெடுமாறன்!
அடுத்து வந்த பழ.கருப்பையா, ”தமிழகக் கவிஞர்கள் பலரும் சோரம் போய் விட்டார்கள், முதுகு சொறிவதே அவர்கள் முழு நேரத் தொழில் ஆகிவிட்டது. மாறாக, உணர்ச்சிக் கவிஞர் எழுதிய பாடல்கள், உலகத் தமிழர்களிடம் செல்ல வேண்டிய தகுதி படைத்தவை. வைகோவும், நெடுமாறனும் தவிர, வேறு யாரும் வந்து பாராட்டி இருந்தால் இந்த விழா மாசுபட்டுப்போய் இருக்கும்!” என்றார். ஏற்புரை ஆற்றிய கவிஞர் காசிஆனந்தன், ”தமிழ் அழிந்துகொண்டு இருக்கிறது. தமிழ் ஈழம் பற்றிய எழுச்சி பரவிவரும் நேரத்தில், தமிழை அழிக்க வேண்டும் என எதிரி நினைக்கிறான். இந்த நேரத்தில் இங்கு தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவது கூடுதலாகி வருகிறது. தமிழ் மண்ணில் தூய தமிழ் பேசும் தொலைக்காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. ஓர் அறிவிப்பாளர் ஆங்கிலத்தில், ‘எனக்கு ஹேப்பி வேணும்’ என்கிறாள். ‘ஹேப் பினெஸ்’ வேணும்னுகூட சொல்லத் தெரியாதா? இன்னொருத்தி, ‘உங்க சில்ரன்ஸ் எப்படி இருக்காங்க?’ என்கிறாள். தமிழ்நாட்டில் மொழியை நித்தமும் கொலை செய்கிறார்கள். எதற்கெடுத்தாலும், ‘ஸோ’ போடுகிறான்… ‘பட்’ போடுகிறான். இந்த ஆங்கிலக் கலப்பு கலாசாரம் மிக ஆபத்தானது…” என்றவர்,
”இதுவரை 40 ஆயிரம் விடுதலைப் புலிகள் ஆண்களும் பெண்களும் உயிர்க் கொடை தந்திருக்கிறார்கள். அந்த தியாகம் வீண் போகாது, தமிழ் ஈழம் மலர்வது உறுதி. அந்த மண்ணில் விடுதலை நெருப்பு அணைந்து போகாது!” என்றார் ஆவேசமாக!
நிறைவாக மைக் பிடித்த வைகோ, ”காசி ஆனந்தன் எழுதிய களத்தில் கேட்கும் கானங்கள், புயல் கால ராகங்கள் ஆகிய ஒலிப் பேழை களில் உள்ளதைப்போன்ற தமிழ் ஈழ விடுதலை நெருப்புப் பாடல்கள் இன்னும் நிறைய வர வேண்டும். அவற்றைத் தமிழக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் நெடுமாறன் தலை மையில் நான் பங்காற்றுவேன். அண்மையில், என்னைப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பேச வரும்படி அழைத்தனர். நான் போகப் போவதில்லை. அந்த வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன். ‘நிறைவாக இருக்கும் வரை மறைவாக இரு’ என காசி ஆனந்தனின் வரிகள், பிரபாகரனுக்கும் பொருந்தும்!” என்றதும், எழுந்த விசில் ஒலி அடங்கச் சில நிமிடங்கள் நீடித்தன. உடனே வைகோ, ”இந்த விசில் சத்தம் தமிழகம் முழுவதும் கேட்க வேண்டும்…” என்று கேட்டுக்கொண்டது மொத்த சத்தத்தையும் மீறி ஒலித்தது!
- இரா.தமிழ்க்கனல்
படங்கள்: வீ.நாகமணி
நன்றி: விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக