வியாழன், 4 நவம்பர், 2010

மிழ் நூல்கள் வாங்க ஆங்கிலத்தில் விண்ணப்பம்


சென்னை, நவ. 3: தமிழ் நூல்கள் வாங்குவதற்கு ஆங்கிலத்தில் விண்ணப்பம்  அனுப்பி வைக்கப்பட்டதற்கு, பொது நூலகத்துறை மீது பதிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு பொது நூலகத்துறை சார்பில், கடந்த 2009-ல் வெளிவந்த தமிழ் நூல்களை பதிப்பாளர்களிடம் இருந்து வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நூலின் தலைப்புக்கும் தலா ரூ.100 கட்டணம் செலுத்தி பதிப்பாளர்கள் பதிவு செய்ய பொது நூலகத்துறை அறிவித்திருந்தது.  இதற்கிடையில் நூல்கள் குறித்த பக்க அளவு உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி, பொது நூலகத்துறை சார்பில் பதிப்பாளர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  தமிழ் நூல்களை வாங்குவதற்கான இந்த விண்ணப்பங்கள் தமிழில் இல்லாமல், ஆங்கிலத்தில் இருப்பது தமிழ் ஆர்வலர்களையும், தமிழ் பதிப்பாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதுகுறித்து பதிப்பாளர்கள் கூறியது:  தமிழ் நூல்களை வாங்குவதற்கான இந்த விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடத்தியாகிவிட்டது. அதைத்தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகமும் கட்டிமுடித்து, அதில் லட்சக்கணக்கான தமிழ் நூல்களை அரசு வாங்கி வைத்துள்ளது.  தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தமிழ் நூல்களை வாங்குவதற்கு ஆங்கிலத்தில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது எங்களைப் போன்ற தமிழ் பற்று கொண்ட பதிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால், நூல்களை சமர்ப்பிப்பதற்கான நெறிமுறைகள் குறித்த விவரம் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் உள்ளன. இதுபோல நூல்கள் குறித்த விவரம் அடங்கிய விண்ணப்பத்தையும் தமிழில் அனுப்ப வேண்டும். நவம்பர் 15-ம் தேதிக்குள் தங்களது நூல்கள் குறித்த விவர விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.  இதுதொடர்பாக பொது நூலகத்துறை அதிகாரிகள் கூறியது:  பொது நூலகத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களின் மூலம் பதிப்பாளர்களிடமிருந்து நூல்கள் வாங்கப்படுகின்றன. இந்த விவரங்களை மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் தெரிவிக்க வேண்டிவுள்ளது.  அதே போல ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை சார்பில் நூல்கள் வாங்க ரூ.4 கோடி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் என்னென்ன நூல்கள் வாங்குகிறோம் என்ற தகவல்களை, அந்த அறக்கட்டளைக்கு ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும் என்ற ரீதியிலேயே நூல்கள் குறித்த விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் அனுப்பி உள்ளோம். இந்த விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்.  நூலகத் துறையில் ஆன்லைன் முறை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறை நூலகத் துறை சார்பில், நூல்கள் விவரம் குறித்த விண்ணப்பங்கள், பதிப்பாளர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை பதிப்பாளர்களே ஆன்லைனில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
கருத்துகள்

முதலில் கட்டணம் செலுத்திப் பதிவதற்கான விண்ணப்பமும் ஆங்கிலத்தில்தான் இருந்தது. மத்திய அரசு கேட்பதால் ஆங்கிலத்தில் கேட்கப்படுகிறது என்பது ஏமாற்று வேலை. ஒரு வகையில் எலலா விவரங்களுமே மத்திய அரசிற்கு அனுப்பட வேண்டியுளள்ன என எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் கேட்டால் என் செய்வது? மத்திய அரசு இந்தியில் கேட்கிறார்கள் என அடுத்து இந்தியில் கேட்பார்களா?தமிழைப் பயன்படுத்துவதி்ல் ஆர்வமின்மையும் ஈடுபாடு இன்மையுமே இதற்குக் காரணம். செய்தியைக் கவனத்திற்குக் கொண்டு வந்து அடுத்த ஆண்டிலிருந்தாலாவது தமிழ் விண்ணப்பங்கள் வர வழிவகுத்த தினமணிக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/4/2010 3:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக