இந்தியா முழுவதிலும் எந்தவொரு கூட்டம் என்றாலும், அது அரசியல் மாநாடாக இருந்தாலும் அல்லது தெருமுனைக் கூட்டம் என்றாலும்கூட, ஊழல் என்கிற சொல் இல்லாமல் நடத்த முடியாது. ஆனாலும் ஊழல் என்பதைப் பற்றிப் பேசாமல் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று முன்தீர்மானம் போட்டுக்கொண்டு நடத்தியது போலத்தான் இருந்தது சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம்.இந்தக் கூட்டத்தில் பேசிய முக்கியப் பேச்சாளர்கள் மற்றும் கட்சியின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பில் உள்ளவர்களான கட்சித் தலைவி சோனியா காந்தி, பொதுச்செயலர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மூவருமே சமீபகாலமாக மக்கள் மன்றத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போன்ற மகா ஊழல்கள் பற்றியே பேசாமல், எளிய மக்கள் (ஆம்ஆத்மி) பற்றியும் ஏழைகளுக்கான நலஉதவித் திட்டங்கள் பற்றியும்தான் பேசினார்கள். ஊழலை ஒரு பிரச்னையாகவே இவர்கள் கருதவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது. இந்தியாவில் அறிவுஜீவிகள் முதல் டீக்கடையில் அமர்ந்திருக்கும் சாதாரண மக்கள் உள்பட பேசுகிற மூன்று முக்கிய ஊழல்கள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், மும்பையில் நடைபெற்றுள்ள வீடுகட்டும் நிறுவனங்களுக்கும் மகாராஷ்டிர அமைச்சர்களுக்கும் தொடர்புடைய நிலஒதுக்கீடு முறைகேடுகள். இந்த மூன்றிலும் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இல்லாமல் இல்லை. ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற ஊழலுக்கு முக்கிய காரணம் கல்மாதி என்றாலும் அவர் வெறும் பினாமிதான். இந்த ஊழலின் பணத்தை உறிஞ்சிய வாய்க்கால் வழி காங்கிரஸில்தான் என்பது ஊரறிந்த உண்மை. மகாராஷ்டிர மாநில ஊழலிலும்கூட தற்போது அம்மாநில முதலமைச்சர் சவாணுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரண்டு அமைச்சர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர் ஆ. ராசா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தன்னை கறைபடியாத கையாகக் காட்டிக்கொண்டாலும், அமைச்சர் ராசா ஒரு பேட்டியின் போது ஆத்திரத்துடன் குறிப்பிட்டதைப் போல, பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்பதில் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.இந்த மூன்று பெரும் ஊழல்களிலும் காங்கிரஸ் தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இது யாருடைய தவறு, இதனால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்ன, இதை எப்படிப் போக்குவது, கூட்டணிக் கட்சிகளால் தாங்கள் சுமக்க நேரும் சிலுவைகள் உண்டென்றால் அதற்குத் தீர்வு என்ன, இதற்காக ஆட்சியை இழக்கவும் காங்கிரஸ் தயாராக இருக்கிறதா இல்லையா என்பதைச் செயற்குழுவில் பேசி, கொள்கை முடிவுகள் காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் யாருமே இதைப் பற்றியெல்லாம் பேசவில்லை. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. அவர் சொல்லியிருக்கிறார் - காங்கிரஸ் என்பது வெறும் சாதாரணக் கட்சி அல்ல. காங்கிரஸ் கட்சிதான் நவீன இந்தியாவை உருவாக்கியது. காங்கிரஸ் போன்ற சிறந்த கட்சி இந்தியாவுக்குத் தேவையாக இருக்கிறது. காங்கிரஸ் எந்த அளவுக்கு வலிமை பெறுகிறதோ அந்த அளவுக்கு தேசம் வலிமை பெறும்.வலிமை என்று எதைச் சொல்கிறார் மன்மோகன் சிங்? ஊழலால் கிடைக்கும் பண பலத்தையா? புரியவில்லை. எல்லாம்வல்ல இறைவனைப்போல அங்கிங்கெனாதபடி இந்தியா முழுவதும் எங்கும் வியாபித்து நிற்பது ஊழல் மட்டும்தான் என்பது உலகறிந்த உண்மை. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1985-ம் ஆண்டு மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் வெறும் 15 பைசாதான் பயனாளியைச் சென்றடைகிறது என்று வருத்தப்பட்டுப் பேசியது, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ராகுல் காந்திக்கும் தெரியாவிட்டாலும், உடனிருந்த சோனியா காந்திக்கும், மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியாமல் இருந்திருக்காது. இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் இந்த 15 பைசாவை 16 பைசாவாகவாவது உயர்த்த முடிந்திருக்கிறதா என்பதையாவது பிரதமர் இந்த மாநாட்டின்மூலம் நாட்டுக்குத் தெரிவித்திருக்கலாம். சுதந்திர இந்தியாவில் அதிகமான ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்திருக்கும் கட்சி காங்கிரஸ்தான் என்கிற முறையில், உலகத்திலேயே மிக அதிகமான ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவிட்டிருப்பதற்குக் காங்கிரஸ் பொறுப்பேற்காமல் இருக்க முடியாது. காங்கிரஸ் மாநாட்டில் ஊழலைப்பற்றிப் பேசவே வேண்டாம் என்று நினைத்து செயல்பட்டிருப்பது, பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் கதையாக அல்லவா இருக்கிறது? நரகாசுரனை கொன்றழித்த நாள்தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் இன்றைய நரகாசுரன்- ஊழல்தான் என்று யாராவது பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் ராகுல் காந்தியிடமும் சொன்னால் தேவலாம். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்திருக்கிறார்கள். வாழ்க சோனியா காந்தியின் காங்கிரஸ்!
கருத்துகள்
தினமணியின் எதிர்பார்ப்பு தவறானது. ஊழலில் திளைப்பவர்கள் எவ்வாறு அவற்றை வெளிப்படையாகப் பேசுவார்கள் எனத் தினமணி எதிர்பார்க்கிறது? காங். எதிர்க்கட்சியாக இருந்தால் அப்பொழுது பிறரின் ஊழல்கள் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். கூட்டுக் கொள்ளைக்காரர்கள் தங்கள் பங்கைக் குறித்துத் தனியாகத்தான் பேசிக் கொள்வார்கள்.ஊரறிய மேடை போட்டுப் பேச மாட்டார்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 3:52:00 AM
11/5/2010 3:52:00 AM
பேஷ் பேஷ். நன்னா சொன்னேள் போங்கோ !!! வாயிலே தீபாவளி இனிப்பு போடணும்.
By kuppanna
11/5/2010 3:50:00 AM
11/5/2010 3:50:00 AM
ஓய் தினமணியாரே!!! என்ன மொத்த இந்தியாவையே முழுங்கிட்டமாதிரி பேசுரீரு,அந்தக்காலமும் வரும் , முழுங்குவானுங்க மொத்த இந்தியாவையும்,அப்போது ஓட்டு போட்ட மக்கள் திருவோடு தூக்கிட்டு அலையும் நாளும் ,இந்த அரசியல் நாதாரிகள் சுவிஸ்வங்கி பணத்துடன் அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியயவிலோ கனடாவிலோ செட்டில் ஆவார்கள்,அப்போதுதான் நம்மக்களும் உணருவார்கள் ,அதுவரர தலையங்கம் எழுதாமல் இருய்யா. பயமாவது இல்லாமல் இருக்கலாம்.
By ஏழை
11/5/2010 3:47:00 AM
11/5/2010 3:47:00 AM
All the responsibale newspapers , the opposition parties, must bring this to the common man
By Narayanan
11/5/2010 3:44:00 AM
11/5/2010 3:44:00 AM
ஐயா தினமணியாரே, மன்மோஹன் சிங் சொல்வதை கேட்டு சிரிக்கவேண்டிய அவசியம் இல்லை,ஏனெனில் அவர் தலை சிறந்த காமெடியனாக மாறி நாள் பல ஆகிவிட்டது,வடிவேலுவையும்,விவேக்ககயும்,ஏன் நாகேஷையும் கூட விஞ்சும் அபார ஆற்றல் அவருக்குதான் உண்டு,என்ன பண்ண? நம் இந்தியாவின் தலையெழுத்து இப்படிஆகிவிட்டது,
By குசும்பன்
11/5/2010 3:37:00 AM
11/5/2010 3:37:00 AM
காங்கிரஸ் கட்சிதான் ஊழலுக்கு முன்னோடி. நேருவின் காலத்திலிருந்தே ஊழல் தொடங்கிவிட்டது. ஆ. ராசா மட்டுமே குற்றவாளி என்றால் மேன்மோகன் சிங் எப்போதே அவனை நீக்கியிருக்க முடியும். அனால் அவ்வாறு செய்யாதது இதில் பெரியதலைகள் சம்பந்தப்படிருப்பதை காட்டுகிறது. ஊழல் மூலம் சம்பாதிக்கும் பணம் தேர்தல் செலவுகளுக்கும் சுவிஸ் வங்கிகணக்குகளுக்கும்தான் போய்ச்சேருகிறது. ஏழை மக்களின் பணம் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதற்கு ஒரு வரம்பே கிடையாது. இந்தியா சூப்பர்பவர் ஆகப்போவது ஊழலில்தான்.
By சிவா
11/5/2010 1:34:00 AM
11/5/2010 1:34:00 AM
ஊழலில் கரைந்து போனதை காங்கிரஸ் கமிட்டி விவாதிக்க மறந்தது மக்களை ஏமாற்றத்தான்! இது ராகுலுக்கான எதிர்கால வாய்ப்பை கெடுக்கும் என்பது நிச்சயம்.
By ஆரிசன்
11/5/2010 1:08:00 AM
11/5/2010 1:08:00 AM
இந்தியாவின் சாபக்கட்டலை காங்கிரஷ் கட்சி.. நாட்டு நலனில் அக்கரை இல்லாத திமுக,காங்கிரஷ் ஆலுவது இந்திய மக்கலின் தலை எழுத்து. இனி ஆன்டவன் தான் காப்பாட்ர வென்டும்.
By suresh.s
11/5/2010 12:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English 11/5/2010 12:41:00 AM