செவ்வாய், 2 நவம்பர், 2010

தமிழைக் காக்க

தமிழைக் காக்க

இலக்குவனார் திருவள்ளுவன்
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே!
இலக்கியம் கொல்வது இனத்தைக் கொல்வதே!
  • பாவேந்தர் பாரதிதாசன்
மிழ்க்காப்பு அன்பர்களே!
தமிழ் நலம் நாடும் நண்பர்களே!
வணக்கம்.
natpu உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் முன் தமிழ் எழுத்துச் சிதைவிற்கான அரசாணை (சீர்திருத்தம் என்ற பெயரில்) மாநாட்டில் அறிவிக்கப்படும் எனச் சிறுபான்மையராகவும் ஆனால் செல்வாக்காகவும் உள்ள சிலர் ஆங்காங்கே பேசியும் எழுதியும் வந்தனர். இதனால் தமிழ் எழுத்தைக் காத்துத் தமிழ் மொழியையும் தமிழினத்தையும் காக்க வேண்டும் எனத் தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் உலகெங்கும் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர். கருத்தரங்கங்கள், இதழ்கள், தொலைக்காட்சி முதலான ஊடகங்கள் வாயிலாகவும் இணையதளங்கள் மூலமாகவும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தினமணி முதலான செய்தியிதழ்கள் நிகழ்ச்சிகளை வெளியிட்டமையால் மாண்புமிகு முதல்வரின் பார்வைக்குச் சென்று அவர் அத்தகைய முயற்சி எதிலும் அரசு ஈடுபடாது என அறிவிக்கச் செய்தார்.
செம்மொழி மாநாட்டுக் கலந்துரையரங்கத்தில், எழுத்துச் சீரமைப்புப் பற்றி இருந்த தலைப்பையே நீக்கினார். ஆய்வரங்கத் தலைப்புகளில், ‘மொழியியல்’ தலைப்பிலேயே எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான ஆய்வுரைகளை வழங்கச் செய்தார். எனினும் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கட்டுரைகள் மட்டுமே அறிஞர்களால் வாசிக்கப் பெற்றன. பெரும்பாலான அரங்கங்கள் நாற்காலிகளால் மட்டும் நிரம்பியிருந்த்தாக்க் கூறப்பட்ட சூழலில் இவ்வரங்கம் மட்டும் அரங்கு நிறைந்த்தாக நடைபெற்றது. உலகத் தமிழன்பர்கள் பலரும் இங்கே கூடித் தமிழ்க்காப்பின்பாலான தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.
எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! என்னும் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் வெளியீடு மாநாட்டில் அனைவரின் வரவேற்பையும் பெற்று தமிழ் எழுத்துக்களைக் காத்துத் தமிழ் இலக்கியங்களையும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் காக்க வேண்டும் என்னும் உணர்வை ஏற்படுத்தியது.
தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழக அரசு தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளைத் தடுக்க வேண்டும் எனக் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. மேனாள் துணைவேந்தர்கள், இந்நாள் துணைவேந்தர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் அமைப்பினர், இதழாளர்கள், தமிழன்பர்கள் என அனைத்து வகையினரும் கையொப்பம் இட்டனர். ஆனால், மாநாட்டில் தமிழ் எழுத்தைச் சிதைக்கும் சீர்திருத்த ஆணை அல்லது தீர்மானம் எதுவும் அரசால் வெளியிடப்படாது எனக் கூறி அறிஞர் ஒருவர் இம் முயற்சியை நிறுத்துமாறு வேண்டியதற்கிணங்க நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், மாநாட்டு நேரத்தில் இதன் பொருட்டு எதுவும் கிளர்ச்சி வரக்கூடாது என்பதால் அடக்கி வாசித்துள்ளனர் எனப் பின்னரே புரிந்தது. மாநாடு முடிந்ததும் சிதைப்பாளர்கள் தம் முயற்சியில் முனைப்பாக இறங்கி விட்டனர்.
தமிழ் எழுத்துச் சிதைப்பாளர்கள் மாநாட்டுக் குழுவில் செல்வாக்குடன் உள்ளமையால் மாண்புமிகு முதல்வருக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்கள் மாநாட்டு ஆய்வரங்க உரைகள் அனைத்தும் இணையத்தில் ஒளிபரப்ப்ப்பட்டாலும் எழுத்துச் சிதைவிற்கு எதிரான ஆய்வுரைகள் ஒளிபரப்பப்படாமல் பார்த்துக் கொண்டனர். தமிழன்பர்கள் இணையதளத்தில் தேடித் தேடி ஏமாற்றம் அடைந்தனர். மாநாட்டு ஆய்வுரைகள் விரைவாக நூலாக வெளியிடப்பட வேண்டும் என மாண்புமிகு முதல்வர் அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்கச் செய்தார்.
natpu எனவே ஆய்வுரைஞர்களிடம் மாநாட்டில் இடம்பெற்ற கட்டுரையின் முழு வடிவையும் கலந்துரையாடல் குறிப்புடன் தருமாறு மாநாட்டுக் கருத்தரங்க்க் குழு கேட்டுள்ளது. ஆனால் விழிப்பாக இருந்து எழுத்துச் சிதைவிற்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்தி ஆய்வுரை வழங்கியவர்களிடம் இருந்து மட்டும் கட்டுரைகள் கேட்டுப் பெறவில்லை. இதனையறிந்த தமிழ் எழுத்துப் பாதுகாப்பு ஆய்வறிஞர்கள் மின்னஞ்சல் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் பதிவஞ்சல் வாயிலாகவும் முறையிட்டும் தமிழர் நலன் குறித்து மத்திய அரசிற்கு அனுப்பப்படும் மடல்கள் போல இவை புறக்கணிக்கப்பட்டன. இக்கட்டுரைகள் இடம் பெறாமல் ஆய்வுரை மலரை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் தடையாணை பெற வழக்குமன்றம் செல்லப்படும் எனக் கூறியும் சிதைவாளர்களின் சதியால் இவை ஏற்கப்படவில்லை. நீதிமன்றம் செல்வதைவிட மக்கள் மன்றத்திடம் கொண்டு போவதே சாலச்சிறந்த்து என எண்ணி ‘தமிழ்க்காப்புக் கூட்ட’த்தை இது தொடர்பிலான கூட்டம் நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு நடைபெறும். தமிழ் எழுத்தைக் காப்பதற்காக இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
மேலும் இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு அரசிற்கு அனுப்பி வைக்கப் பெறும்.
  • தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
  • உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா. செல்வகுமார், பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இப்பேராளர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள் இடம்பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
  • natpu
  • அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள எழுத்துச் சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இந்தியப் பண மதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.
  • அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.
  • குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர் ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
  • உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.
  • சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத் தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கும் வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.
  • சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இதேபோல் நல்ல தமிழில் வரும் இதழ்களுக்கும் செய்தித்தொடர்பாளர்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றி அரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின் விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும். கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துக்களைப் பயன்படுத்தியும் அயற் சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
  • நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப்பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
  • இணைய மாநாட்டின் தொடர்ச்சியாக்க் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துக்களையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிறமொழி எழுத்துக்ளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும்பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில் இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதே போல் இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழாக மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிற தமிழ் அமைப்பினரும் இத்தீர்மானங்களை நிறைவேற்றி அரசிற்கு மடல் அனுப்ப வேண்டுகிறோம்.
தமிழ்க்காப்பில் அனைவரின் ஒத்துழைப்பை வேண்டும்
தமிழ் நலம் நாடும்
natpu
  • தமிழ்க்காப்பு கழகம்
  • தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம்
  • இலக்குவனார் இலக்கிய இணையம்
  • புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
  • தமிழர் சுற்றம்
  • தமிழ் எழுச்சிப் பேரவை
  • புரட்சிக்கவிஞர் பேரவை
  • மாநிலத் தமிழ்ச் சங்கம்
  • தமிழர் களம்
  • தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
  • திருக்குறள் 466

Comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக