நவராத்திரி சண்டை
October 15th, 2010நவராத்திரி கொலுவில் சரசுவதி, லட்சுமி, கிருஷ்ணன், இராமன், சீதை, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. தனது வீட்டுக்கு வந்த நவராத்திரி விருந்தினருக்கு சுண்டல், தயிர் சாதம் வழங்கினார், கோபால அய்யர். இரவு தொலைக்காட்சியில், நடிகர்கள், கடவுள் வேடமிட்டு நடித்த பக்திப் படம் ஒன்றைப் பார்த்து உறங்கச் சென்றார். கனவில் கொலுவில் இருந்த கடவுள் பொம்மைகளும், உருவங்களாகப் பேசத் தொடங்கின….
கிருஷ்ணன் கீழே இறங்கி வந்து அய்யர் ‘ஆத்து’ சமைய லறைக்குப் போகிறான். பாத்திரங்களை உருட்டுகிறான். சத்தம் கேட்ட விநாயகன், கிருஷ்ணனை பின் தொடருகிறான்.
கிருஷ்ணன் : டேய், யானைத் தலையா! இங்கே, ஏண்டா வந்தே?
விநாயகன் : நிறுத்துடா, வெண்ணெய் திருடா; நீ எதையெதை எல்லாம் உருட்டப் போகிறாய், திருடப் போகிறாய் என்பதை பார்க்கத்தான் வந்தேன்.
கிருஷ்ணன் : நான் திருடினாலும் சரி; குளிக்கும் பெண்களின் ஆடைகளை உருவி மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டாலும்; நான் எப் போதுமே பக்தர்களுக்கு அன்பான விளையாட்டுப் பிள்ளைதான் தெரியுமா?
விநாயகன் : டேய்! இப்போதெல்லாம் ‘ஈவ்டீசிங்’ சட்டம் வந்து விட்டது. உள்ளே பிடித்து போட்டு விடுவார்கள், சும்மா துள்ளாதே!
கிருஷ்ணன் : அடேய், அழுக்குருண்டைப் பிண்டமே! வரம்பு மீறிப் பேசாதே; ஒவ்வொரு ஆண்டும் உன்னை அடித்து துவைத்து கடலில் போட்டு, உனது பக்தர்கள் மூழ்கடித்தும் புத்தி வர வில்லையே!
விநாயகன் : போதும் நிறுத்துடா! இப்போ அரசியலையே நான் தான் கலக்குறேன் தெரியுமா? எனது பிறந்த நாள் வந்துட்டா, நாடே அமளி துமளிப் படுது. போலீஸ்காரன் வீதிக்கு வீதி துப்பாக்கியோடு திரியறான், தெரியுமா? உன்னை எல்லாம் சீந்துவாரில்லை.
(விநாயகனும், கிருஷ்ணனும் கூச்சல் போடுகிற சத்தத்தைக் கேட்டு, கொலுவிலிருந்த இராமன், இறங்கி ஓடி வருகிறான்.)
இராமன் : என்னப்பா, என்ன பிரச்சினை: இப்படி நமக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டால் பக்தர்கள் நம்மை மதிப்பார்களா? கடவுள்களாக வந்துவிட்ட பிறகு, ஒழுங்கு வேண்டாமா?
விநாயகன் ஆத்திரத்துடன் : அடேய், ராமா! பொண்டாட்டியையே சந்தேகித்தவனே! நீயா, ஒழுங்கு பற்றிப் பேசுகிறாய்.
இராமன் : வீணா, என் வம்புக்கு வராதே; எனக்குள்ள செல்வாக்கு உனக்குத் தெரியாது!
விநாயகன் : என்னைவிட உனக்கு செல்வாக்கு அதிகமோ? பேத்தாதே!
இராமன் : அடேய், நான் தான்டா, இந்த நாட்டுல நீதிமன்றங்களையே ஆட்டிப் படைக்கிறவன். அலகாபாத் நீதிபதிகளையே என் காலடியில் விழச் செய்து விட்டேனே தெரியுமா?
விநாயகன் : இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை. வானுலகின் தெய்வமாக இருக்க வேண்டியவன். பூலோகத்துல நீதிமன்றத்துல வந்து வழக்குப் போட்டுகிட்டு நிற்கிறியே; நீ எல்லாம், ஒரு கடவுளா? நீதிமன்றத்திலே உன் பெயரிலேயே மனு போடுகிறானே, உனக்கு அவமானமாக இல்லை?
இராமன் : இதிலே என்னடா அவமானம்; நான் எடுத்த எத்தனையோ அவதாரங்களில் இதுவும் ஒன்று.!
விநாயகன் : என்ன புடலங்காய் அவதாரம்; உனக்கு சக்தி இருந்தால் உன் பிறந்த இடத்தை நீயே நேரில் வந்து சொல்லியிருக்கலாமே! பிரசவம் பார்த்த மருத்துவர்கள், மருத்துவச்சிகள் பெயரைக் கூறி இருக்கலாமே! இதற்காக 60 ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடக்க வேண்டுமா?
இராமன் : டேய், பிஸ்கோத்து! தேசத்தையே மீண்டும் ராமராஜ்ய மாக்கியிருக்கிறேன். மனுதர்மத்தை மீண்டும் நீதிமன்ற சட்டமாக்கி விட்டேன்; பாவம்! இந்த முட்டாள் ‘சூத்திரர்’கள்; அவர்கள் நாட்டில் மக்களாட்சி நடப்பதாக நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் உனக்கு எங்கே புரியப் போகுது!
கிருஷ்ணன் : (குறுக்கிட்டு) போதும்; போதும்; நிறுத்துங்கள்! நமக்குள்ளே ஏன் வீண் சண்டை? நமக்குள் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். நாம் ஒற்றுமையாக எந்த சண்டையும் போடாமல், ‘கல்லாக’ நின்றால் தான் இந்த மக்களை காலம் முழுதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும். மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால், நம்ம கதை அம்போ தான். இப்போதே பிளாட்பாரத்தில்கூட இடம் கிடைக்காத நிலை வந்து விடும் போலிருக்கிறது. இப்படி சண்டை போட்டுக் கொண்டால் நாட்டிலேயே இடமில்லாது போய்விடும். ஒற்றுமை யாக பக்தியைப் பரப்பி மக்களை மடையர்களாக்கி மொட்டை அடிப்போம்; சரிதானா?
(‘கடவுள்’கள் சமரசம் செய்து கொண்டனர். உறக்கம் கலைந்த கோபால அய்யர், மனைவியிடம், கெட்டக் கெட்ட கனவாக வருதுடி, ஏதோ, ஆபத்து வரும் போலிருக்கே என்று புலம்புகிறார்.)
- கோடங்குடி மாரிமுத்து
நன்றி: பெரியார் முழக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக