புதன், 13 அக்டோபர், 2010

நேர்மை உறங்கும் நேரம்...


மாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகிய இரு பதவிகள் மிக உயர்ந்த பதவிகள் ஆகும். நிர்வாகத்துக்குத் தலைமைச் செயலரும்,  சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் காவல்துறைத் தலைமை இயக்குநரும் பொறுப்பாளர்கள் ஆவார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்த இரு உயர் பதவிகளின் நியமனத்தை ஒட்டிய பிரச்னை எதுவும் எழுந்ததில்லை. முறைப்படி  மூத்த அதிகாரிகள் இப்பதவியில் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது  இந்தப் பிரச்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு,   காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவியில் லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:1. தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநராக லத்திகா சரணை நியமித்ததில் உச்ச நீதிமன்ற ஆணை பின்பற்றப்படவில்லை. இந்தப் பதவிக்கு முறையான தேர்வு நடைபெற்றது என்பதையோ, மற்ற மூத்த அதிகாரிகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன என்பதையோ அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.2. மூத்த அதிகாரிகளான நடராஜ், விஜயகுமார், பாலச்சந்திரன் ஆகியோரைப் புறக்கணித்துவிட்டு, லத்திகா சரணை தலைமை இயக்குநராக நியமித்ததற்கான காரணம் எதையும் அரசு குறிப்பிடவில்லை. 3. தமிழக அரசின் நிலைப்பாடு நீதிமன்றத்துக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த தமிழக அரசின் தலைமைச் செயலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.4. மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநரை நியமிப்பதற்கு முன்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து மூன்று மூத்த அதிகாரிகளைக் கொண்ட பட்டியலைக் கேட்டுப் பெறவேண்டும். அந்தப் பட்டியலிலிருந்து ஒருவரையே தலைமை இயக்குநராக நியமிக்க வேண்டும். அவரை இரண்டாண்டுகளுக்குத் தொடர்ந்து அப்பதவியில் நீடித்திருக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், லத்திகா சரண் நியமனத்தில் இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.5. லத்திகா சரண் நியமனத்தை எதிர்க்கும் மனுவை உச்ச நீதிமன்ற உத்தரவைக் கருத்தில் கொள்ளாமல் பணியாளர் மத்திய தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.6. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குத் தலைமை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் பெயர்களையும் மாநில அரசு அக்டோபர் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அப்பட்டியலில் இருந்து மூத்த அதிகாரிகள் மூன்று பேர் அடங்கிய பட்டியலை மாநில அரசுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.7. அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரை தலைமை இயக்குநராக (சட்டம்-ஒழுங்கு) டிசம்பர் 7-ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். அதுவரை லத்திகா சரண் தனது பணியில் தொடரலாம்.8. டிசம்பர் 14-ம் தேதி இது தொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். எனவே லத்திகா சரண் நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறிப்பிடத்தக்க மிக முக்கியமான தீர்ப்பாகும். பணி மூப்பு, நடைமுறை, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறி போன்ற எதையுமே சிறிதும் மதிக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் மிக உயர்ந்த பதவிக்கு அதிகாரிகளை நியமிக்கும் தமிழக அரசின் போக்குக்கு உயர் நீதிமன்றம் சாட்டையடி கொடுத்துள்ளது.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இரு கழகங்களின் ஆட்சியில் எப்படியெல்லாம் பந்தாடப்பட்டார்கள், பந்தாடப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தங்கள் நோக்கத்துக்கு இணங்கி வராத அதிகாரிகளைப் பதவிகளில் இருந்து திடீரென இடைநீக்கம் செய்வது, புதிய பதவி எதிலும் நியமிக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது,  ஓய்வுபெறும் நிலையில் உள்ள அதிகாரிகளை திடீரென இடைநீக்கம் செய்து ஓய்வூதிய சலுகைகளைப் பெறவிடாமல் இழுத்தடிப்பது போன்ற சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்து கையாண்டே வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். சுருக்கமாகக் கூறினால், நேர்மையான அதிகாரிகளை இந்த அரசுக்கு ஒருபோதும் பிடிக்காது.ஆளும்கட்சியினர் நடத்தும் லஞ்ச ஊழலுக்குத் துணையாக இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த அரசில் மரியாதை. சில நாள்களுக்கு முன்னால் நேர்மையான அதிகாரியான உமாசங்கர் இடைநீக்கம் செய்யப்பட்டுப் பழிவாங்கப்பட்டார். இச்செயலுக்கு எதிராகக் கடும் கண்டனம் எழுந்தபோது முதலமைச்சர் பல்டி அடித்து மீண்டும் அவருக்குப் பதவி அளிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார். காவல்துறையின் தயவு இல்லாமல் ஆட்சிக்கு வருவதும் ஆட்சியை நடத்துவதும் தனது கட்சிக்கு இயலாத ஒன்று என்பதை முதலமைச்சர் கருணாநிதி நன்கு உணர்ந்திருக்கிறார். எனவேதான் காவல்துறையின் தலைமை இயக்குநர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையையே புறக்கணித்துச் செயல்பட்டிருக்கிறார். இதுவரை தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசு செய்த மிகஉயர்ந்த பதவிக்கான நியமனத்தை ரத்து செய்ததாக வரலாறு கிடையாது. உயர் நீதிமன்றத்துக்கு தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவிலும் முற்றிலும் பொய்யான தகவல்களை அளித்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். பணிமூப்புப் பட்டியலில் நடராஜுக்கு அடுத்த நிலையிலுள்ள விஜயகுமார் மத்திய அரசுப் பணிக்குச் சென்றுவிட்டதால் அவர் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று அரசு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.உடனடியாக இதுகுறித்து விஜயகுமாரிடம் நீதிபதிகள் கருத்துக் கேட்டனர். அவர் தாக்கல் செய்த மனுவில், ""தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநர் பொறுப்பை ஏற்க முடியாது என நான் ஒருபோதும் கூறவில்லை. எனது பெயரும் தலைமை இயக்குநர் பதவிக்கு ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். மிக உயர்ந்த பதவிக்குரிய நியமனத்தில் இத்தகைய கபடமான வழிமுறைகளைப் பின்பற்றியது முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, தமிழக அரசு இயங்கும் முறைக்கே மாறாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது அரசு தலைமைச் செயலர் பதவிக்கு இரு மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இருவரும் ஒன்றாக ஐ.ஏ.எஸ். தேறியவர்கள்; ஒரே நாளில் பதவி ஏற்றவர்கள். ஒருவர் ஒரு மணி நேரத்துக்கு முன்பு பதவி ஏற்றார். இருவருக்கும் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு காலம் இருந்தது. இருவரில் ஒருவருக்குத்தான் இந்தப் பதவியை அளிக்க முடியும். அவ்வாறு செய்தால் மற்றவர் தலைமைச் செயலர் ஆகாமலே ஓய்வுபெறவேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்தப் பிரச்னை முதலமைச்சரின் முடிவுக்கு விடப்பட்டது. இருவர் சம்பந்தமான கோப்புகளை காமராஜ் மிகக்கவனமாக ஆராய்ந்தார். பிறகு அவருக்கே உரிய பாணியில் இருவரையும் அழைத்தார். இருவரும் அவருக்கு முன்னால் வந்து நின்றார்கள். இருவரையும் அமரச் செய்தார். பிறகு நான் சொல்லுகிறபடி செய்வீர்களா என்று கேட்டார். இருவரும் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள். அப்போது காமராஜ் பின்வருமாறு கூறினார்: ""இருவருக்கும் இந்தப் பதவி வகிப்பதற்குரிய தகுதி உள்ளது. ஆனால், ஒருவரைத்தான் நியமிக்க முடியும். அப்படி நியமித்தால் மற்றொருவருக்கு அது ஏமாற்றமாக இருக்கும். எனவே ஒரு மணி நேரத்துக்கு முன்னால் பதவியேற்றவர் ஆறு மாதம் இந்தப் பதவியில் இருக்கட்டும். அதற்குப் பிறகு அவர் ஆறுமாதகால நீண்ட விடுப்பில் சென்று அப்படியே ஓய்வுபெற வேண்டும். மற்றொருவர் இந்தப் பதவியை ஏற்று 6 மாத காலத்துக்குப்பின் அவரும் ஓய்வுபெற வேண்டும். இருவருக்கும் சமவாய்ப்புக் கிடைக்கும். இருவருக்கும் தலைமைச் செயலர் பதவியில் இருந்தததற்கான அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும்'' என கூறியபோது இருவருக்குமே நன்றிப் பெருக்கால் விழிகளில் ஈரம் கசிந்தது. அவ்வாறே இருவரும் தலா ஆறு மாதம் பதவி வகித்து மகிழ்ச்சியுடன் ஓய்வுபெற்றனர்.தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகிய பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் மிக்க பொறுப்புணர்வோடும், நிர்வாகத் திறமையோடும்,  நேர்மையோடும் செயல்பட வேண்டும். அத்தகைய மூத்த அதிகாரிகளையே இப்பதவிகளில் நியமித்தால் அரசுக்கும் பெருமை, மக்களுக்கும் நன்மை. ஆனால், உயர் நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகள் முன்னிலையில் முதலமைச்சர் கருணாநிதி பேசும்போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்த சில வழக்கறிஞர்களை தி.மு.க. குண்டர்களும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் கடுமையாகத் தாக்கியபோது, அங்கிருந்த லத்திகா சரண் அதைத் தடுக்காமல் ஊமை சாட்சியாக இருந்தார் என்பதுதான் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதற்கான தகுதியா? நாடெங்கும் அதிகாரிகளை ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குகிறார்கள். அதிகாரிகள் மீது லாரிகளை ஏற்றிக் கொல்லவும் மணல் கொள்ளையர்கள் அஞ்சவில்லை. பல்கலைக்கழகத் துணைவேந்தர், பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டார். நாள்தோறும் இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதிகாரிகள் மட்டுமல்ல, ஆளுங்கட்சியைச் சேர்ந்த குண்டர்களுக்குக் கப்பம் கட்ட மறுக்கும் வணிகர்களின் கடைகள் சூறையாடப்படுகின்றன. அரசுப் பேருந்துகளை ஓட்டுபவர்களும் வழிமறித்துத் தாக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் நிலை இன்னும் மோசம். வீடு புகுந்து தாக்குபவர்கள், வீட்டைச் சூறையாடுபவர்கள்,  நிலக்கொள்ளையர்கள் மீதெல்லாம் புகார் கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. காவல்துறையின் தலைமை இயக்குநராக இருப்பவரே குண்டர்களின் அட்டகாசத்தை வேடிக்கை பார்க்கும்போது, அவரின் கீழே இருப்பவர்கள் மட்டும் எப்படி ஒழுங்காகச் செயல்பட முடியும்? முதலமைச்சரின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அமைச்சர்களின் குடும்பத்தினர்களும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களும் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இவர்களின் விருப்பப்படியே அதிகாரிகள் பந்தாடப்படுகிறார்கள். இதற்கு அஞ்சிய அதிகாரிகள் இவர்களுக்குத் துணைபோகிறார்கள். பணியாத அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். கருணாநிதி முதலமைச்சர் மட்டுமல்ல, காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சரும் ஆவார். எனவே பிற அமைச்சர்கள் யார் மீதேனும் பழியைப் போட்டு அவர் தப்ப முடியாது.  உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். இதுவரை எந்த மாநில முதலமைச்சரும் இத்தகைய அவமானத்துக்கு உள்ளானதில்லை. உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் எந்த அழகில் நடைபெறுகிறது என்பதற்கு அழிக்க முடியாத சாட்சியமாக விளங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் பொய்யான தகவல்கள் அடங்கிய மனுவைத் தாக்கல் செய்ததற்கும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறியதற்கும் முதலமைச்சர் கருணாநிதி மக்கள் தனக்களித்திருக்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கும் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படியெல்லாம் அவர் செய்துவிடமாட்டார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம். தனது தவறுகளை நியாயப்படுத்துவதில் தமிழக முதல்வருக்கு நிகர் அவர் மட்டுமாகத்தான் இருக்க முடியும். அமைச்சர்களுக்குக் கார் கதவைத் திறந்துவிடுவதுதான் மாவட்ட ஆட்சியர் பதவியின் மரியாதை என்று ஒரு அமைச்சர் எள்ளிநகையாடுகிறார். உயர் நீதிமன்றத்திலேயே முதல்வர் சார்பில் பொய்யான தகவல் தரப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இவர்களுக்கு எடுபிடிவேலை செய்யும் ஏவலர்கள் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள் என்பதைத்தான் இவர்களது பேச்சுகளும் நடவடிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன.
கருத்துக்கள்

ஒருவர் புறக்கணிக்கப்படுவதாலேயே அவர் நேர்மையான அலுவலர் என்றும் கருத வாய்ப்பு இல்லை. அவர் முந்தைய கட்சியின் எடுபிடியாக இருந்து ஏவல் செய்தவாராகத்தான் இருப்பார். எனவே, அலுவலர்கள் தத்தம் சொந்த நலன்களுக்காக ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக மாறாமல் நடுநிலையுடன் நடந்து கொண்டால் இத்தகைய நேர்வு வராது. ஆட்சியாளர்களுக்கு யார் நெருக்கம் என்பதிலேயே போட்டி போடுவதில் அலுவலர்கள் கருத்து செலுத்தினால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை ஏற்படாது. எனவே, அலுவலர்கள் அடிமைத்தனத்துடன் இருக்கும பொழுது ஆட்சியாளர்கள் அவர்களை ஏவலர்களாகத்தான் கருதுவார்கள். கட்டுரை பொதுவாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:08:00 AM
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்த இரு உயர் பதவிகளின் நியமனத்தை ஒட்டிய பிரச்னை எதுவும் எழுந்ததில்லை எனக் குறிப்பிட்டுள்ளது தவறாகும். எல்லா மாநிலங்களிலும் கண்மூடி ஒத்துழைக்கும் அதிகாரிகளுக்குப் பதவியும் பிறருக்குப் புறக்கணிப்பும் வழங்குவது நடைபெற்றே வருகிறது. தமிழ் நாட்டிலும் ஆளுங் கட்சிக்கு வேண்டியவர்களை நியமிப்பதற்காக அவர் ஆறாம் இடத்தில் இருக்கிறார் எனில் அறுவருக்கும் பதவி உயர்வு வழங்கிவிட்டுப் பிற ஐவரை அப்பதவிநிலையில் பொம்மைப் பதவியில் அமர்த்தி விட்டு ஆறாமவரை நியமிக்கும் வழக்கம் உள்ளதைப் பழ.நெடு. மறந்து விட்டாரா? பழிவாங்குவதற்காக துறைஅலுவலர்களை நியமிக் க வேண்டிய இடங்களிலும் இ.ஆ.ப. அலுவலர்களை நியமிக்க வேண்டிய இடங்களிலும் இ.கா.ப. அலுவலர்களை நியமித்ததையும் மறந்து விட்டாரா? ஆனால், அப்பொழுதெல்லாம நீதிமன்றப் பார்வைக்குச் செல்லவி்ல்லை.இப்பொழுது சென்றதால் கண்டனம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் ஒருவர் புறக்கணிக்கப்படுவதாலேயே அவர் நேர்மையான அலுவலர் என்றும் கருத வாய்ப்பு இல்லை. அவர் முந்தைய கட்சியின் எடுபிடியாக இருந்து ஏவல் செய்தவாராகத்தான் இருப்பார். எனவே, அலுவலர்கள் தத்தம் சொந்த நலன்க
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக