வியாழன், 14 அக்டோபர், 2010

பட்டாசு விற்பனை: காவல்துறைக்கு விதிவிலக்கா?


நவம்பர் 5-ல் தீபாவளி. தீபாவளியைக் கொண்டாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, தீபாவளி வருகிறது, வருகிறது என்பதில்தான் அதிக மகிழ்ச்சி.  ÷தீபாவளி விடுமுறை நாள்களை தன் உடன்பிறப்புகளுடன், உறவுகளுடன் கொண்டாட, சொந்த ஊருக்கு பஸ் மற்றும் ரயில் முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வெளியூரில் வேலை செய்வோர், மகளுக்குத் தலை தீபாவளி சீர்செய்ய நிதி ஆதாரத்தைத் தேடும் நடுத்தரக் குடும்பத்தின் பெற்றோர் என்று அவரவர் நிலைக்கு ஏற்ப வரவிருக்கும் தீபாவளிக்குத் தயாராகி வருகின்றனர்.  ÷இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், என்னதான் ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்தாலும், புகையைக் கக்கும் பட்டாசு இல்லாமல் தீபாவளியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதால், வியாபாரிகளுக்குப் பட்டாசு விற்பனை உரிமம் வழங்குவது குறித்து பல மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான மனுக்களைப் பெற்றுப் பரிசீலித்து வருகின்றன.  ÷உரிமம் பெறுவதில் "இன்னபிற செலவுகளும்' உள்ளதாகக் கூறப்படுகிறது. அது இல்லாமல் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிடம் இருந்து தடையில்லாச் சான்று பெற முடியாது. இவர்களின் தடையில்லாச் சான்று இல்லையென்றால் உரிமம்பெற முடியாது. தீபாவளிக்குப் பட்டாசுக் கடைவைக்க வெடிமருந்து சட்ட விதிகள் 1983 படிவம் 24-ன் கீழ் உரிமம் பெற விரும்புவோர், விண்ணப்பங்களை வெடிமருந்து சட்டவிதிகள், படிவம் 4-ல் (6 நகல்கள் ) பூர்த்தி செய்து ரூ. 2-க்கு நீதிமன்றக் கட்டணவில்லை ஒட்டியும், உரிமக் கட்டணம் ரூ. 500 கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியும், அசல் சலானுடன் நீலவண்ண வரைபடம் (ஆறு நகல்கள்) மற்றும் பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம், சொந்தக் கட்டடம் எனில் வீட்டு வரி ரசீது மற்றும் கிராமக் கணக்கு நகல்கள் ஆகியவற்றுடன் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் தேதிக்குள், மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.  பின்னர் இந்த விண்ணப்பங்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றுக்கு அனுப்பப்படும். விண்ணப்பித்தவர்கள் பட்டாசுக் கடைவைப்பதாகக் குறிப்பிட்டுள்ள இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுசெய்து, தகுதி இருக்கும்பட்சத்தில், உரிமம் வழங்கலாம் என்று சான்று அளிக்கப்படும். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பட்டாசு விற்பனை உரிமம் வழங்குவார்.  தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், காவல்துறை சார்பில் போலீஸ் நல கேண்டீன்கள் இயங்கி வருகின்றன. இங்கு போலீஸôருக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், சீருடை தொடர்பான பொருள்கள், டீ, காபி, பிஸ்கட் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. தீபாவளி நெருங்கும்போது, புத்தகக் கடையில் தொடங்கி, மளிகைக் கடை, பூக்கடை வரை பட்டாசுக் கடைகளாக மாறுவதுபோல, போலீஸ் நல கேண்டீனும் அவ்வாறே மாறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனிநபர் விற்பனை செய்யும் பட்டாசைவிட, போலீஸ் நல கேண்டீன்கள் விற்கும் பட்டாசுகள்தான் அதிகம். ஒவ்வோராண்டு தீபாவளியின்போதும் லாரியில் குறைந்தது 4 லோடாவது விற்பனைக்காகப் பட்டாசுகள் இறக்கப்படுகின்றன. பட்டாசு விற்க பாமரன்தான் உரிமம் பெற வேண்டும் என்பது விதிமுறை. போலீஸ் கேண்டீன் எந்த ஆண்டும் பட்டாசு விற்பதற்காக உரிமம்பெற மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்ததே இல்லை.  ÷இதுகுறித்து மாவட்ட போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டபோது, நாங்கள் காவலர்களுக்கு மட்டும்தான் விற்பனை செய்கிறோம் என்றார். போலீஸôருக்கு விற்பனை செய்யும் பட்டாசுக் கடை என்றால் உரிமம்பெறத் தேவையில்லை என்று எந்த அரசாணையும் இல்லை என்ற நிலையில் ஒரு மாவட்ட போலீஸ் உயரதிகாரி அப்பாவியாகப் பதில் அளிப்பது கேலிக்குரியதாக உள்ளது.  ÷யாருக்கு விற்றால் என்ன? விற்பனை என்றாலே உரிமம் பெற்றுத்தானே ஆக வேண்டும். காவல்துறை மட்டும் விதிவிலக்கா? பெரும்பாலான மாவட்டங்களில் காவல்துறை அலுவலகமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அருகருகில்தான் இருக்கின்றன. கேண்டீனில் விற்கப்படும் பட்டாசின் விலை வெளிச்சந்தையைவிடக் குறைவாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முதல், அவர்களின் உறவினர், போலீஸôரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அனைவரும் அங்குதான் பட்டாசு வாங்குகின்றனர்.  சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்க யாருக்கும் கேண்டீனில் ரசீது வழங்கப்படுவதில்லை. இவ்வாறு விற்கப்படுவதால், முதலீடு செய்து, இன்னபிற செலவுகளும் செய்து, பட்டாசுக் கடை வைத்தவர்களுக்கு, வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். சாதாரண நாளில் "இன்று அவருக்குத் தீபாவளி' என்று சிலர் கிண்டலாகக் கூறுவதுண்டு. போலீஸôர் இவ்வாறு மலிவு விலையில் வெளி ஆள்களுக்கு விற்பதால், தீபாவளிநாள் கூட, பட்டாசு வியாபாரிகளுக்குத் தீபாவளியாக இல்லாமல் போய்விடுகிறது.  ÷பட்டாசுகளை விற்பனை செய்யும் போலீஸôரும் ஓர் உயிர்தான். அவரைப் பாதுகாப்பது போலீஸ் உயரதிகாரிகளின் கடமையும்கூட. விற்பனை செய்யப்படும் இடத்தில் தீயணைப்புக் கருவிகளோ, மணல், தண்ணீர் உள்ளிட்டவையோ வைக்கப்படுவதில்லை. தமிழகத்தில் இன்றும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு போலீûஸக் காட்டி சோறு ஊட்டி வளர்த்து வருவதால், குழந்தைகள் வளர்ந்த நிலையிலும் அதே பயத்தில் இருக்கின்றனர். இதனால் யாரும் காவல்துறை மீது புகார் தெரிவிப்பதில்லை. காவல்துறையினருக்கு உரிமம்பெற வேண்டும் என்று தெரிந்திருந்தும், "நம்மை யார் கேட்டுவிடப்போகிறார்கள்' என்ற எண்ணத்தால் உரிமம் பெற முயற்சிப்பதில்லை.  ÷இதுகுறித்து பட்டாசுக் கடை உரிமம் வழங்க வேண்டிய மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டபோது, "அப்படியா! போலீஸ் நல கேண்டீனில், பட்டாசு உரிமம் இல்லாமல் விற்கப்படுகிறதா? உடனடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவிடுகிறேன்' என்றார்.  பாமரன் உரிமம் இன்றி விற்றால் வெடிமருந்து சட்டத்தின்படி நடவடிக்கை. காவல்துறை விற்றால் விளக்கம் கேட்டு நோட்டீஸ்! இது எப்படி இருக்கு?    
கருத்துக்கள்

ட்டுரையாளர் நல்ல வினா தொடுத்துள்ளார். அரசு உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2010 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக