வெள்ளி, 15 அக்டோபர், 2010

எல்லை தாண்டி வரும் ஆபத்து!

வங்கதேச நலனுக்காகப் போரிட்டு, பாகிஸ்தானிடமிருந்து அந்த நாட்டைப் பிரித்து,பாகிஸ்தானுடன் மேலும் பகையைச் சம்பாதித்து, வங்கதேசம் என்றொரு தேசத்தை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்த இந்திரா காந்தி கனவிலும் நினைத்திருக்க மாட்டார், வங்கதேசத்தால் எதிர்காலத்தில் இப்படியொரு பிரச்னை ஏற்படப் போகிறது என்று.  எப் பிரச்னையால் அன்று பாகிஸ்தானிடம் இந்திரா காந்தி போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டாரோ, அதே பிரச்னைதான் இன்றும். ஆனால் இன்று இருக்கும் தலைவர்களால் எல்லையைத் தாண்டி நாட்டுக்குள் ஊடுருவும் வங்க அகதிகளையும், தீவிரவாதிகளையும் கட்டுப்படுத்தக்கூட முடியாத இயலாமை.  நாட்டுக்குள் 2 கோடி வங்கதேசிகள் ஊடுருவிய பின்னர்தான் இவர்களுக்கு எல்லைக் கோட்டில் வேலி அமைக்க வேண்டும் என்ற எண்ணமும், அவர்களைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்கிறது என்றால் இவர்களது கடமை உணர்ச்சியையும், தேசபக்தியையும் எப்படிப் "பாராட்டுவது' என்றே தெரியவில்லை.  அசாம், மேகலயா, திரிபுரா, மிஜோரம் ஆகிய 4 மாநிலங்களில் 4,096 கிலோ மீட்டர் தூரம் உள்ள வங்கதேசத்தின் எல்லை, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது என்றால் அது மிகையல்ல.  தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எல்லையின் வழியாக 1972-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவுக்குள் வந்த 12 லட்சம் வங்கதேசிகள், மீண்டும் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவில்லை என எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கின்றனர்.  அந் நாட்டின் நிலைத்த தன்மையற்ற ஆட்சியால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அகதிகளாக அந்த நாட்டு மக்கள், நமது நாட்டுக்குள் ஊடுருவி வந்தனர். ஆனால் இன்று நிலைமையே வேறு. கஞ்சா, அபின் என போதை வகையறாக்களும், தடை செய்யப்பட்ட சீன நாட்டுப் பொருள்கள், நவீன ரக ஆயுதங்கள், இந்திய கள்ள நோட்டுகள் என அனைத்துப் பொருள்களும் நாடு முழுவதும் தங்குதடையின்றி கடத்தப்பட்டு, கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றன.  இதற்கெல்லாம் மேலாக உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் தீவிரவாதமும், தீவிரவாதிகளும் உலகத்தின் பல பகுதிகளில் பயிற்சிபெற்று, இந்தியாவுக்குள் வங்கதேச எல்லை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகின்றனர். அண்மைக்காலமாக தீவிரவாதத்தின் வாசலாகவே வங்கதேசத்தின் எல்லைப் பகுதி உள்ளது.  எந்த நாட்டில் குண்டு வெடிப்புகள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தாலும் ஏதாவது ஒரு வகையில் அதில் வங்கதேசிகள் சம்பந்தப்படுகிறார்கள் என உள்துறை அமைச்சகம் தனது பங்குக்கு எச்சரிக்கிறது.  ஆனால், நம்ம ஊர் அரசியல்வாதிகளோ, வங்கதேசிகளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் என ஓர் இந்தியனுக்கு வழங்க வேண்டிய சகல உரிமைகளையும் வழங்கி, அங்கேயும் வாக்கு அரசியல் நடத்துகிறார்கள்.  வடகிழக்கு மாநிலங்களில் வந்தேறிகளாகக் குடியேறிய வங்கதேசிகள் இப்போது சில பகுதிகளில், அப் பகுதி அரசியலை நிர்ணயிக்கக் கூடிய சக்திகளாக வலுப்பெற்றுள்ளதற்கு வாக்குகளுக்கு விலைபோகும் அரசியல்வாதிகளும், பணத்துக்கு விலைபோகும் அரசு அதிகாரிகளும்தான் முழுக் காரணம்.  வங்கதேசிகளின் ஊடுருவலை நிறுத்துங்கள், அந் நாட்டில் இருந்து மேற்கு வங்கம், அசாம், மிஜோரம், மேகலயா, திரிபுரா மாநிலங்களில் குடியேறி இருக்கும் வங்கதேசிகளைக் கண்டறிந்து, அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.  உச்ச நீதிமன்றமே இவ் விஷயத்தில் தலையிட்டு, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியும், நமது அரசோ வங்கதேசிகளைக் கண்டறிவது கடினம் என இரு கைகளையும் முடிந்த அளவுக்கு விரித்துக் காட்டுகிறது. நமது கண்காணிப்பு முறை பலவீனமாக இருப்பதன் காரணமாகத்தான், எல்லை தாண்டும் வங்கதேசிகளைக் கண்டறிவதிலும், தடுப்பதிலும் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுவதாக ப.சிதம்பரம் தான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும் கூறினார்.  வங்கதேசிகளை அவர்கள் நாட்டுக்குள் அனுப்புவதற்கு குழுக்களை நியமித்து இருப்பதாகக் கூறுகிறது மத்திய அரசு. ஆனால், எத்தனை வங்கதேசிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற முழுமையான விவரத்தை இதுவரை வெளியிட்டதாகத் தெரியவில்லை.  இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு இணையாக, வங்கதேசிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசிகளின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. இப்போது அது 2 கோடியாக அதிகரித்துள்ளது என வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசிகளின் ஊடுருவல் குறித்து ஆய்வு செய்த ஒரு தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  நாட்டை அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இப்படி வரம்பில்லாமல் வங்கதேசிகள் வந்து குடியேறுவதுபற்றி மத்திய அரசு சிறிதும் லட்சியம் செய்யாமல் இருப்பதை அரசியல் சட்டக் கடமையிலிருந்து மத்திய அரசு தவறியதாகத்தான் கருத நேரும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்தும், இவ் விஷயத்தில் அரசு இன்னும் மெத்தனம் காட்டுகிறது.  உதாரணமாக, எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியை 2007-ம் ஆண்டுக்குள் முடிப்பதாகக் கூறிய மத்திய அரசு, இன்னும் அந்தப் பணியை முடித்தபாடில்லை.  இனியும் மத்திய அரசு தனது நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவில்லையென்றால், ஊடுருவிய வங்கதேசிகள் இந்தியாவில் உரிமையும் கோருவார்கள்.    
கருத்துக்கள்

மத்திய அரசிற்குத் தமிழர்களைத்தான் அடையாளம் கண்டு அழிக்கத் தெரியும். திபேத்தியர்கள் என்றால் உதவத் தெரியும். வங்கத் தேசத்தவர் என்றால் கண்டும் காணாமல் இருக்கத் தெரியும். ஒவ்வோர் இனத்திற்கு ஒவ்வோர் அளவுகோல் மத்திய அரசிற்கு மட்டும்தான் தெரியும். எனவே, கட்டுரையாளர் போல் கவலைப்பட அதற்குத் தெரியாது. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2010 2:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக