வெள்ளி, 15 அக்டோபர், 2010

போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்கும் பிரிவுக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு: தமிழக அரசு உத்தரவு


சென்னை, அக். 14: தமிழக காவல் துறை தலைமையகத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்கும் ரகசிய மற்றும் நம்பகப் பிரிவுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ÷அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது மற்றும் லஞ்ச ஊழலை ஒழிக்க உதவும் வகையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.  ÷பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட பல பிரச்னைகளுக்கு, இந்த சட்டத்தின் உதவியுடன் மக்கள் பெற்ற தகவல்களால் தீர்வு ஏற்பட்டது.  ÷இந்த சட்டத்தின் 24 (2) வது பிரிவின்படி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களும், 8 (1) (எச்) பிரிவின்படி விசாரணையில் குற்ற வழக்குகளின் முக்கிய தகவல்களையும் பாதுகாக்க சட்டத்தில் விலக்கு தரப்பட்டுள்ளது.  ÷நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் சுதந்திரத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்த விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.  ÷இதன்படி, தமிழக காவல் துறையில் உளவு மற்றும் தேச பாதுகாப்புடன் தொடர்புடைய சில முக்கிய பிரிவுகளுக்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுவிட்டன.  லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு: தமிழகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து 2008 ஆகஸ்டில் தமிழக அரசு உத்தரவிட்டது.  ÷அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை பொது மக்கள் தெரிந்துக் கொள்வதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த விலக்கு அளிக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது.  ÷இருப்பினும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணை விவரங்களை தெரிந்துக் கொள்வதைத் தடுக்கவே இந்த விலக்கு அளிக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.  ÷இருப்பினும், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வந்த அனைத்து மனுக்களையும் இந்த விலக்கு ஆணையை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத் துறை திருப்பி அனுப்பி வருகிறது.  ÷இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதில், ஒரு குறிப்பிட்ட மனு தொடர்பாக வந்த மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் விசாரித்தது.  ÷கடந்த ஆண்டு இந்த மனுவை விசாரித்த தமிழக தலைமை தகவல் ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன், விலக்கு ஆணை இருந்தாலும் மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  மீண்டும் விலக்கு ஆணை: இந்த நிலையில் தமிழக காவல் துறையில் காவலர் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை உள்ள அனைத்து அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிப்பது, மேலும், துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகள் டிஜிபி அலுவலகத்தில் உள்ள ரகசிய மற்றும் நம்பகப் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ÷அண்மைக்காலமாக தமிழக காவல் துறையில் குறிப்பாக ஐஜி, ஏடிஜிபி நிலையில் உள்ள சில அதிகாரிகள் மீது புகார்கள் வந்துள்ளன.  ÷இந்தப் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காவல் துறை பதிலளிக்க வேண்டும்.  அரசாணை வெளியீடு: இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த டிஜிபி அலுவலகத்தின் ரகசிய மற்றும் நம்பகப் பிரிவுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுடன் இதற்கான அரசாணை (உள்துறை எண்: 854) கடந்த 1-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது என உள்துறை முதன்மை செயலாளர் கே.ஞானதேசிகன் தெரிவித்தார்.  ÷கடந்த ஏப்ரல் 8-ம் தேதியிட்ட டிஜிபியின் கடிதத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 24(4)-ன் படி இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆர்வலர்கள் அதிர்ச்சி: ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரிவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.  ÷தகவல் பெறும் உரிமை சட்டத்தை முடக்கும் இத்தகைய நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்றும் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
கருத்துக்கள்

முன்னாள் தலைமைச் செயலர் பதவி தந்ததற்குரிய நன்றியைக் காட்டத் தொடங்கி விட்டார். இனிமேல் தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் அஞ்சியவாறு அடுக்கடுக்காய் விதிவிலக்குகளை எதிர் நோக்கலாம். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2010 3:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக