வியாழன், 14 அக்டோபர், 2010

ரியாத்தில் இலக்குவனார் நூற்றாண்டு விழா
அக்டோபர் 13,2010,11:55  IST

ரியாத் : வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பில் அக்டோபர் 08ம் தேதியன்று இலக்குவனார் நூற்றாண்டு விழாவும், வ.உ.சிதம்பரனார் நினைவேந்தலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பல நூறு தமிழ்க் குடும்பங்கள் கலந்து ‌கொண்டு, மகிழ்ந்துச் சிறப்பித்த இவ்விழாவில், பெண்களுக்கான கோலப் போட்டி, உப்பல் (பலூன்) ஊதி உடைத்தல், ஆகுல மங்கையர் யார் என்பன போன்ற விளையாட்டுப் போட்டிகளும், தமிழறிவை வளர்க்கும் விதமாக குறுக்கும் நெடுக்கும், நாத்திரிபுச் சொற்கள், பழமொழி கண்டறிதல், சொற்சமைத்தல் போட்டிகளும் நடைபெற்றன.
பொறிஞர் முருகேசன், தமிழகத்திலிருந்து வருகை அளித்திருந்த தேனி ஜெயராம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கி.வை.ராசா குழுவினரின் வில்லுப்பாட்டு, தமிழின் தளர்ச்சியும் மறுமலர்ச்சியும் பற்றி சிறப்பாக விளக்கும் வகையில் அமைந்து சிந்தை நிறைத்தது. கிராமிய தமிழிசைப் பாடல்களும் பாடப்பட்டன. பிரான்ஸிலிருந்து தமிழறிஞரும் பாவலருமான பெஞ்சமின் லெபோ இவ்விழாவில், தமிழ்ச்செம்மல் பேரா.இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு பற்றியும், சமூக சிந்தை பற்றியும் அரியதொரு உரையை மின்னுடகம் வழி நிகழ்த்தினார். சென்னை வாழ் பேராசிரியர் திருநாவுக்கரசு, இலக்குவனாரின் இளைய மைந்தர்  திருவள்ளுவர் இலக்குவனார் ஆகியோரும், தொலைத் தொடர்பு வழி வாழ்த்துரை வழங்கினர்.பொறிஞர் நாக.இளங்கோவன், பொறிஞர் சபாபதி,ரமேசு, கி.வை.ராசா,காமராசு, சீ.ந.ராசா உள்ளிட்ட 'வசெந்தம்' குழுவினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
- தினமலர் வாசகர் பாபு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் எழுச்சியின் அடையாளம். அவரது நூற்றாண்டு விழாவைக் கடல் கடந்த நாடுகளிலும் கொண்டாடி வருவது தமிழ் உணர்ச்சி இன்னும் மங்காமல் இருப்பதற்கு அடையாளம். அந்த வகையில் ரியாத்தில் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்குவனார் நூ்றாண்டு விழாவினைக்  கொ்ண்டாடியிருப்பது பாராட்டிற்குரியது. பெருந் தமிழறிஞரும் விடுதலைப் போராளியும் தொழிலாளர் தலைவரும் நாட்டிற்காகத் தன்னையே அளித்தவருமானசெக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரானர் அவர்களைத் தமிழுலகம்  மறப்பது வருத்தத்திற்குரியது.  அவரது நினைவேந்தலையும் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் கொண்டாடியிருப்பது பாராட்டிற்குரியது. தமிழ் மொழி, தமிழின மேம்பாட்டிற்கும் பிறந்த நாட்டிற்கும் வாழும் நாட்டிற்குமான ஒற்றுமைக்கும் பாடுபட்டு இச் செந்தமிழ்ச்சங்கம் மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகள். அயலகச் செய்திகளைச் சிறப்பான முறையில் வெளியிடும் தினமலருக்கும் பாராட்டுகள்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக