செவ்வாய், 12 அக்டோபர், 2010

அனைவருக்கும் வேண்டும் இலவச ஆயுள் காப்பீடு


தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் பாடலில் உணவு என்பதை உண்ணும் உணவு என்று மட்டுமே கருத்தில் கொள்ளக் கூடாது. தனிமனித உரிமை என்றும் பொருள் கொள்ளலாம்.  அந்த வகையில் நாட்டு மக்கள் கல்வி மற்றும் மருத்துவ வசதியை இலவசமாகப் பெறுவது உரிமை. அவற்றை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை.  தமிழகத்தைப் பொறுத்தவரை இலவச மருத்துவ வசதியை அனைவரும் பெறும் வகையில் ஏராளமான அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் செயல்பட்டு வருகிறது.  இதேபோல அனைவரும் இலவசக் கல்வி கற்கும் வகையில் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருவதுடன், பாடப்புத்தகங்கள், கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்காக பொறியியல் கல்லூரிகளில் சேரவும் கட்டணச் சலுகை உள்ளது.  இந்த வரிசையில் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமை, அனைவருக்கும் இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.  "எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்படுகிறது; எதைக் கொடுக்கிறாயோ அது இங்கிருந்தே கொடுக்கப்படுகிறது' என்ற கீதாச்சார வாக்குப்படி பொதுமக்களிடம் பெறப்பட்ட வரிப்பணத்தின், ஒரு பகுதியை மக்களுக்கே வழங்குவது தானே நியாயம்?  விபத்து, இயற்கைச் சீற்றம், காட்டு விலங்குகள் தாக்குதல், கலவரங்கள் உள்ளிட்ட சம்பவங்களின்போது உயிரிழந்தவர்களுக்கும், அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களிலும் இச்சலுகை உள்ளது.  ஆனால், சாதாரண மக்களில் ஒருவர் திடீரென உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு எவ்வித நிவாரணத் தொகையும் கிடைக்காத நிலையுள்ளது. எத்தனையோ குடும்பங்கள், வருவாய் ஆதாரமான குடும்பத் தலைவனையோ, தலைவியையோ, சகோதர, சகோதரிகளையோ இழந்து துன்பத்தில் தவிக்கின்றன.  உழைக்கும் கூலித் தொழிலாளி எப்போதும் உழைத்துக் கொண்டேதான் இருக்கிறான். அவர்களுக்கு பணிஓய்வு என்பதும், ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்குக் கிடைப்பது போன்ற வைப்புத்தொகை என்பதும் "கானல்' நீராகவே உள்ளது. அவற்றை "காணும்' நீராக மாற்றும் வகையில் இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்கலாம்.  தமிழகத்தில் 6 கோடியே 64 லட்சம் பேர் இருப்பதாகக் கணக்கிட்டாலும் அவர்களில் 40 வயதிலிருந்து 58 வயது வரை உள்ள, அரசு ஊழியர் அல்லாதோர் சுமார் 2 கோடி பேர் இருப்பர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தும்பட்சத்தில் ரூ.2,000 கோடி தேவை.  2007-08-ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் வருவாய் ரூ. 10 கோடிக்கும் மேல். பல்வேறு வகையில் வரிவிலக்கு அளிப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் தோராயமாக ரூ. 200 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுகிறது. 5 ஆண்டுகளில் இலவச கலர் டி.வி. வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 2,500 கோடி. இதில் 5-வது கட்டமாக இலவச கலர் டிவி வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 824 கோடியே 40 லட்சம். இதுதவிர ஆடம்பரமான அரசு விழாக்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் ஆகிறது.  இந்த வருவாய் இனங்களிலிருந்து சிக்கனமாகவும், சிறப்பாகவும் பட்ஜெட்டை அமைப்பதன் மூலம் ஆயுள் காப்பீட்டுக்குத் தேவையான தொகையை பிரீமியமாகச் செலுத்த அரசால் முடியும்.  இப்போது ஒரு குறிப்பிட்ட பிரீமியத் தொகையை ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் செலுத்தும்போது அதில் 20 சதம் அந்த முகவர்களுக்குச் செல்கிறது. 10 சதம் பிராஸசிங் தொகையாகக் கழிகிறது. மீதமுள்ள 70 சதம் தொகைதான் நமது கணக்கில் சேருகிறது. இவற்றுக்குத்தான் வட்டி கணக்கிடப்பட்டு, பாலிசி முதிர்வடையும்போது ஒரு தொகையாக உரியவர்களுக்குக் கிடைக்கிறது.  ஆனால், அரசால் இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்போது முகவர் கமிஷன் இல்லாமல் செலுத்தும் வகையில், காப்பீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும்.  இதனால் ஒருவரின் 58-வது வயது நிறைவில் பாலிசி நிறைவுற்று குறைந்தபட்சமாக ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. இடையே அவர்கள் உயிரிழந்தாலும் காப்பீட்டுத் தொகை அவர்கள் குடும்பத்துக்குக் கிடைக்கிறது.  இத் திட்டத்தைச் சட்டம் இயற்றி நிறைவேற்றினால், அடுத்து வரும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து பிரீமியத்தை கட்டுவர். இதன்மூலம் அரசு அலுவலர்கள் மட்டுமே வாக்கு வங்கி என்ற அரசின் (மனக்) கோட்டைக்குள் பொதுமக்களும் நுழைய முடியும்.  இலவசத் திட்டங்கள் எத்தனை இருப்பினும் காலத்தால் அழியாத, சாமானிய மக்களுக்குப் பயனுள்ள இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் தமிழக அரசு இதர மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.  
கருத்துக்கள்

நல வாரியங்கள் மூலம் அரசு இபபொழுது இலவச இடர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. (ஆயுள் காப்பீடு என்று சொல்வது சரியல்ல.) எனவே, கட்டுரையாளர் கூறுவது போல் அனைவருக்கும் விரிவாக்கலாம். ஆனால், 58 ஆம் அகவையில் குறைந்த அளவு 50,000 என்பது குறைவான தொகை. கட்டுரையாளர் கணக்கிட்டுப் பாராமலும் குறைந்து வரும் பணத்தின் மதிப்பை உணராமலும் தெரிவித்துள்ளார். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2010 2:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக