வெள்ளி, 15 அக்டோபர், 2010

தலையங்கம்:தாற்காலிக மகிழ்ச்சி...

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தாற்காலிக உறுப்பினராக இந்தியா ஏழாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐ.நா.வின் பாதுகாப்பு சபை உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உலக அரங்கில் நமது முக்கியத்துவம் உயர்ந்திருப்பதன் எடுத்துக்காட்டு என்று கருதுவதில் தவறே இல்லை.  1996-ல் நாம் போட்டி போட்டபோது இந்தியாவுக்கு ஆதரவாக 42 நாடுகள்தான் வாக்களித்தன. இப்போது ஐ.நா.வின் உறுப்பினர்களாக இருக்கும் 192 நாடுகளில் 187 நாடுகள் நமக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய நாடுகளில் பாகிஸ்தானும் அடக்கம் என்பது நமக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தரும் செய்தி.  ஐ.நா.பாதுகாப்பு சபையில் மொத்த உறுப்பினர்கள் 15 பேர். இதில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்பினர்கள். மீதமுள்ள பத்து இடங்கள் தேர்தல் மூலம் நிரப்பப்படும். இந்தத் தாற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். இப்போதைய பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருக்கும் ஆஸ்திரியா, ஜப்பான், மெக்சிகோ, துருக்கி, உகாண்டா ஆகிய ஐந்து நாடுகளின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய, அந்த ஐந்து இடங்களுக்கு கொலம்பியா, ஜெர்மனி, இந்தியா, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதி ஒருவர் நிரந்தரமாக ஐ.நா.வில் நமது சார்பில் இருப்பார்.  192 நாடுகளில் 187 நாடுகளின் ஆதரவுடன் இந்தியா வெற்றி பெற்றிருப்பது என்பது, பாதுகாப்பு சபையில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அதிகரிக்கும் என்பது உண்மைதான் என்றாலும் நாம் இன்னொரு உண்மையையும் மறந்துவிடலாகாது. அமெரிக்காவின் மறைமுக ஆதரவு இந்தியாவுக்கு இருந்தது என்பதால்தான் பாகிஸ்தான் உள்ளிட்ட இத்தனை நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்தது என்பதுதான் அந்தப் பேசப்படாத ரகசியம். இந்த மறைமுக ஆதரவே நமக்கு மிகப்பெரிய சோதனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நாம் நினைவில் நிறுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.  ஒரு சின்ன உதாரணம். கடந்த ஜூன் மாதம் ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. அப்போது தாற்காலிக உறுப்பினர்களான பிரேசிலும், துருக்கியும் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து, உலக அரங்கில் பாராட்டுப் பெற்றன. ஐ.நா. ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் சமாதானத்தை நிலைநாட்ட முனையவேண்டுமே தவிர, ஈரானுக்கு எதிராக அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், தண்டிக்கும் விதத்தில் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது என்றும் துணிந்து அந்த நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பின.  ஈரான் பிரச்னையில், இந்தியா சர்வதேச அணுசக்தி அமைப்பில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. ஆனால், பொருளாதாரத் தடை பிரச்னையில் ஈரானுக்கு எதிராக அப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தது. கருத்துத் தெரிவிப்பது என்பது வேறு. பாதுகாப்பு சபையின் உறுப்பினர் என்கிற முறையில் வாக்களித்து முடிவெடுப்பது என்பது வேறு. இதுபோன்ற பிரச்னைகள் எழும்போது, பிரேசிலும், துருக்கியும் எதிர்த்து வாக்களித்ததுபோல இந்தியாவால் அமெரிக்காவின் எதிர்ப்பைக் கருதாமல் செயல்பட முடியுமா?  அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுபோல பல பிரச்னைகள் எழுவதற்கான வாய்ப்புகளும் சூழ்நிலையும் காணப்படுகிறது. நாம் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று விழைகிறோம். அமெரிக்காவுக்கு பின்பாட்டுப் பாடத் தயாராக இருந்தால் ஒழிய, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா சம்மதிக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை.  ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் இந்தியா தாற்காலிக உறுப்பினராக நுழையும்போது, அங்கே நமது நண்பர்கள் சிலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது ஆறுதல் தரும் செய்தி. நாம் ஏற்கெனவே, "பிரிக்' (ஆதஐஇ) என்கிற அமைப்பின் மூலம் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா என்றொரு பொருளாதாரக் கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தக் கூட்டமைப்பிலுள்ள நான்கு நாடுகளுமே புதிய பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருப்பது மிகப்பெரிய பலம். நமது நட்பு நாடான தென்னாப்பிரிக்காவும் ஓர் உறுப்பினராக இருப்பதால் இந்த ஐந்து பேர் அணியும் முக்கியமான தீர்மானங்களில் இணைந்து செயல்படக் கூடும்.  சோவியத் யூனியன் இருக்கும்வரை ஐ.நா. பாதுகாப்பு சபை ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாகக் கருதப்படவில்லை. 1990 வரை 45 ஆண்டுகளில் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 646 மட்டுமே. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 1,295 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா. சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், சமாதான நடவடிக்கைகளிலும் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாகவே இருந்திருக்கிறது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.  ஐ.நா. சபையும், பாதுகாப்பு சபையும் பல முக்கியமான பிரச்னைகளில் நெருப்புக் கோழி மண்ணில் முகம் புதைப்பதுபோல செயல்பட்டிருக்கிறதே தவிர, துணிந்து நியாயத்துக்காகக் குரல் கொடுத்துத் தனது மேலாண்மையை நிலைநாட்டி இருக்கிறதா என்றால் இல்லை. இராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பையும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையையும் ஐ.நா.வால் வேடிக்கைதானே பார்க்க முடிந்திருக்கிறது? இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்னையில் நல்லதொரு முடிவை ஏற்படுத்த ஐ.நா.வால் முடியவில்லை என்பதுதானே நிஜம்?  ஐக்கிய நாடுகள் சபை என்பது பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தலைமையில் நடத்தப்படும் ஒரு கண்துடைப்பு உலக அமைப்பாக இருக்கிறதே தவிர, உலக நாடுகளின் கூட்டமைப்பாகச் செயல்படுகிறதா என்றால் சந்தேகம்தான். ஐக்கிய நாடுகள் சபை ஒட்டுமொத்தமாக சீர்திருத்தப்படாத வரையில், பாதுகாப்பு சபையின் தாற்காலிக உறுப்பினராகவோ, நிரந்தர உறுப்பினராகவோ இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு நமக்குத் தரப்பட்டிருக்கும் 'கலைமாமணி' விருது போன்ற ஒரு கௌரவம்தான் இந்த பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவி என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குப் புரியும்!
கருத்துக்கள்

வீண் பாராட்டுரை வழங்காமல் நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. அதுவும் ஈராக் மீதான படுகொலையையும் ஈழத்தமிழின அழிப்பையும் சுட்டிக் காட்டி ஐ.நா.வின் கையறுநிலையை உணர்த்தியுள்ளது. இந்தியாவின் பின்பாட்டுத் திறமையை அறியவே இந்தக் குறுங்காலப் பதவி என்பதை நன்கு தெளிவுபடுத்தியுள்ள தலையங்கத்தாருக்குப் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2010 2:55:00 AM
Ayyaaa dinamaniyaare, adhu eppadi ayaa, edhu kidaitthaalum adhula kutram kandupidikkireergal? Kutram kandupiditthe pervaangum pulavargal irukkirargal engira Thiruvilyaadal vasanamdhaan nyabagathukku varudhu.
By S. Bhoomi
10/15/2010 1:42:00 AM
ஐ நா பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர் பதவியை கலைமாமணி பட்டத்துடன் ஒப்பிட்டது மிகவும் அருமை.
By R NAGARAJAN
10/15/2010 1:34:00 AM
Top to bottom, aandipatti to America.... same politics & shame politics. UN is just a official servant for america. similarly, Congress government is servant for crorpathis & industrialists in India. If America wants UN to work, UN will work. otherwise, it will give comments only... nothing else... SAME POLITICS.
By A K
10/15/2010 1:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக