புதன், 13 அக்டோபர், 2010

தாய்லாந்தில் 155 இலங்கைவாசிகள் கைது


பாங்காக், அக்.12: இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த 155 பேரை தாய்லாந்து நாட்டு குற்றத்தடுப்பு போலீஸார் கைது செய்தனர். இதில் பெரும்பாலோர் ஈழத்தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. தாய்லாந்தின் சபான் மாய், சாய் மாய் ஆகிய இரு மாவட்டங்களிலும் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த பலர் அடைக்கலம் அடைந்துள்ளதாக அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இலங்கையில் இருந்து குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் ஈழத்தமிழர்கள் என்றும் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இரு மாவட்டங்களிலும் 17 இடங்களில் குற்றத்தடுப்பு போலீஸாருடன் சேர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த 155 பேரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்களில் சிலர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை பறிமுதல் செய்ததாகவும் அந்நாட்டு போலீஸார் தெரிவித்தனர். 155 பேரிடமும் தாய்லாந்துக்கு வந்ததற்கும், தங்குவதற்கான அனுமதி குறித்தும் எந்தவித ஆவணமும் இல்லை. அவர்கள் எப்படி வந்தார்கள், எதற்கு வந்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்ததும் அவர்கள் தாய்லாந்தில் இருந்து அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனிடையே, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த இந்த 155 பேரும் கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்று கனடா நாட்டு பத்திரிகையான "குளோப் அண்ட் மெயில்' தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்

சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அனைவரையும் உங்கள் நாட்டின் விருந்தினராக ஏற்றுக் கொண்டு அடைக்கலாம் தாருங்கள். இப்பொழுது தேவை சட்ட அணுகுமுறையன்று; மனிதநேயச் செயல்பாடே! தாய்லாந்து நாட்டில் பல நூற்றாண்டுகள் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து அந்நாட்டு முன்னேற்றத்திற்கும் நாகரிகச் சிறப்பிற்கும் பாடுபட்டுள்ளார்கள். அதற்கு நன்றிக்கடனாகவாவது தமிழர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தமிழ் ஈழ அரசு அமைந்தபின் உங்கள் சிக்கல் தீரும். கவலற்க. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக