சென்னை, மார்ச்11: நளினி விடுதலை தொடர்பாக ஆலோசனைக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை மீது முடிவு எடுப்பதில் தாமதம் கூடாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை சட்டப்படி, சிறை ஆலோசனைக் குழுவைக் கூட்டி பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மேல்முறையீடு செய்தார். அதே உத்தரவின் வேறு சில பகுதிகளை எதிர்த்து நளினியும் மேல்முறையீடு செய்தார்.இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறை ஆலோசனைக் குழு கூடி தனது அறிக்கையை மாநில அரசிடம் அளித்தது. சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு, மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சுவாமி கோரினார். இதையடுத்து, நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கையை "சீல்' செய்த கவரில் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். தொடர்ந்து அவர் முன் வைத்த வாதம்:நளினி முன்கூட்டியே விடுதலை கோருவது தொடர்பான சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இந்த அறிக்கை தொடர்பாக மேலும் சில விவரங்கள், ஆலோசனைக் குழுவிடம் இருந்து கோரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, முடிவு எடுக்க 2 வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார் பி.எஸ்.ராமன். இதுதொடர்பாக முடிவு எடுப்பதில் தாமதம் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.அதற்குப் பதிலளித்த பி.எஸ்.ராமன், ""இதுதொடர்பாக விரைந்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் சிறையில் தொடர்ந்து வாடக் கூடாது'' என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நளினி விடுதலை தொடர்பான சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கையின் மீது தமிழக அரசுதான் உரிய முடிவு எடுக்க வேண்டும். இதுதொடர்பான முடிவு எடுக்க அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் 2 வாரம் அவகாசம் கோரியுள்ளார். எனவே, வழக்கு விசாரணை மார்ச் 29}ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்
சட்டத்தின் முன் யாவரும் சமம் என்னும் பொழுது நளினிக்குரிய பொதுவான வாய்ப்பு அரசியல் சாயம் பூசி மறுக்கப்படுவது சட்டத்தின் ஆட்சியை விடக் கட்சிகளின ஆட்சியே மேலோங்கியுள்ள நமது நாட்டு நிலையை விளக்குகின்றது. அறிவுரைக் குழுமக் கூட்டம் முடிந்த பின்னும் உரிய அறிக்கை அரசிற்கு வந்து சேர இவ்வளவு காலத் தாழ்ச்சி என்னும் பொழுது விளக்கங்கள் பெறுவதில் வேண்டுமென்றே காலத்தாழ்ச்சி உருவாக்கப்படும் என்பது வெள்ளிடை மலை. நெடுநீர் மறவி மடி துயில நான்கும் கெடுநீரார் காமக் கலன் என்னும் உலகப் பொதுமறை அரசிற்கும் பொருந்தும் என்பதை உணர வேண்டும். அறிவுரைக் குழும அறிக்கை என்னவாக இருந்தாலும் நளினியை விடுதலை செய்வதே மனித நேயமும் நடுநிலை உணர்வும் கொண்ட செயலாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 4:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
3/12/2010 4:06:00 AM