மதுரை : ""தமிழகத்தில் கடும் மின்வெட்டு, வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து நிலவுகையில், அரசு ஆடம்பர விழாக்களில் நேரத்தை செலவிடுகிறது,'' என ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார். மதுரையில் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசியதாவது: ம.தி.மு.க., தொண்டர் களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்கள் ஒரு இயக்கத்திற்கு நாடித்துடிப்பு. எத்தனையோ சோதனைகள் வந்தாலும் ம.தி.மு.க.,வை அழிக்க முடியாததற்கு தொண்டர்களே காரணம். திராவிட இயக்க கொள்கைகள் நீர்த்து போகாமல் இருக்க பாதுகாப்பாக செயல்படுகிறது. ம.தி.மு.க.,வை துவக்கிய காலகட்டத்தில் நள்ளிரவு, அதிகாலை என மாநாடுகளை நடத்திய பெருமை உண்டு. அதற்கு தொண்டர்கள் அளித்த ஆதரவு காரணம்.
சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. பாஞ்சாலங்குறிச்சி, சிவகங்கை என எந்த போராட்டங்கள் என்றாலும் முதலில் வாளை தூக்கியது தமிழர்கள் தான். ஆனால் ஈழத்தமிழர்கள் இனத்தை அழிக்க இலங்கைக்கு ஆயுத உதவி செய்தது இந்திய அரசு. இன்று தென் மாவட்டங்களின் நிலைமை கவலையளிக்கிறது. பெண் உரிமைக்கு மதிப்பு கொடுக்கிறோம். மக்களவையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேறும் போது சிறப்பானதாக அமையும். இன்று பெண்கள் குடிநீருக்காக அலையும் நிலையுள்ளது. பெரியாறு அணை பிரச்னையில் கேரளா அரசு அநீதி இழைக்கிறது. பெரியாறு அணையை இடிக்க திட்டமிடுகிறது. அணை இடிக்கப்பட்டால் ஐந்து மாவட்ட மக்களுக்கு பாதிப்பு. இரண்டு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். தமிழக உரிமையை நிலைநாட்ட கேரள முற்றுகை போராட்டத்தை ம.தி.மு.க., மே 28ல் நடத்துகிறது. இப்போராட்டம் கேரளாவுக்கு எதிரானது அல்ல. தமிழர்கள் நலனை புறக்கணிப்பதை எச்சரிப்பதற்காக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் விவசாயிகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு ஒரு புறம். மற்றொரு புறம் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து. இந்நிலையில் தமிழக அரசு ஆடம்பர விழாக்களில் நேரத்தை செலவிடுகிறது. இவ்வாறு பேசினார்.
வெள்ளி, 12 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக