புதன், 10 மார்ச், 2010

திருவாங்கூர் ராஜவைத்திய சாலை மருத்துவரை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு



சென்னை, மார்ச் 9: மக்களுக்கு போலி வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றிய திருவாங்கூர் ராஜ வைத்திய சாலையின் மருத்துவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை மயிலாப்பூரில் திருவாங்கூர் ராஜ வைத்திய சாலை என்ற பெயரில் விஜயகுமார் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். அனைத்துவித நோய்களையும் குணப்படுத்துவதாக விளம்பரம் செய்வதாகவும், பொதுமக்களிடம் போலியான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்தன.ஜானகிராமன் என்பவரது மகனின் மூளையில் ஏற்பட்டிருந்த குறைபாட்டை மான்கறி வைத்தியத்தில் குணப்படுத்துவதாக இவர் உறுதிமொழி அளித்ததாகவும் கூறப்படுகிறது.மோசடி, மிரட்டல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட விஜயகுமார், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை எதிர்த்து அவரது மகன் ஜெகதீஸ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:எனது தந்தை விஜயகுமார் திருவாங்கூர் ராஜ வைத்திய சாலையை நடத்தி வந்தார். சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அவர் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் 2008}ல் தடை விதித்திருந்தது.இந்தத் தடை அமலில் இருக்கும்போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எனது தந்தையை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளார்.உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை குறித்து முழுமையாகப் பரிசீலிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு மனதையும் செலுத்தாமல் மாநகர போலீஸ் கமிஷனர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அனைத்துவித நோய்களையும் குணப்படுத்துவதாக விஜயகுமார் பொய்யான வாக்குறுதிகளை தொலைக்காட்சிகள் வாயிலாக அளித்துள்ளார். சிகிச்சை என்ற பெயரில் அதிகப் பணம் பெற்றுக்கொண்டு பொதுமக்களையும் அவர் ஏமாற்றியுள்ளார்.சிகிச்சைக்கு வழங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்டவர்களையும் அவர் மிரட்டியுள்ளார். அவரது செயல்கள் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளது.உயர் நீதிமன்ற உத்தரவு அவர் பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதி அளிப்பதையோ, ஏமாற்றுவதையே தடை செய்யவில்லை.எனவே, திருவாங்கூர் ராஜ வைத்திய சாலையின் வைத்தியரான விஜயகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கருத்துக்கள்

இதேபோல் நித்யானந்தனையும் குண்டர் சட்டத்தில பிடித்து உள்ளே போடுங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/10/2010 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக