Last Updated :
சென்னை, மார்ச் 9: புதிய, பழைய சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் திறக்கப்படும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு பேரவை உரிமைகளை மீறிய செயலாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தன்னலமற்ற சேவை புரிந்தவர்கள், சமுதாய மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர்கள், மக்களின் உரிமைகளை மீட்கப் போராடியவர்கள், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவை வளாகங்களில் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்கள் வைக்கப்படுகின்றன. இதுவரை இந்த மரபுதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற தன்னலமற்ற தியாகிகளின் திருவுருவப் படங்கள் தமிழக சட்டப் பேரவையில் திறந்து வைக்கப்பட்டன.அதற்கு மாறாக, தனக்குத் தானே விருதுகளை வழங்கிக் கொள்வது, தன்னுடைய சிந்தனைகளை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைப்பது, தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு சிலை வைப்பது, அரசு திட்டங்களுக்கு தனது பெயரை சூட்டுவது போன்ற மரபுக்கும், நடைமுறைக்கும் ஒவ்வாத செயல்கள் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகின்றன.இவற்றின் உச்சகட்டமாக புதிய, பழைய சட்டப் பேரவை வளாகத்தில் கருணாநிதியின் உருவப் படத்தை வைக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.இது பேரவை மரபுகளுக்கு முரணான செயல்.நாடாளுமன்றத்தில் தலைவர்களின் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்கள் வைப்பதற்கு மக்களவைத் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். அந்தக் குழுதான் யாருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்.சட்டப் பேரவையில் எம்.ஜி.ஆரின் படம் வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. மட்டுல்ல, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் விரும்பியது.அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், இரா.சிங்காரம் ஆகியோர் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படம் வைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் பேசினார்கள். அதன் அடிப்படையில்தான் அவரது படம் திறந்து வைக்கப்பட்டது.ஆனால் இன்று, யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில், சட்டப் பேரவையின் ஒப்புதலையும் பெறாமல், கூட்டணிக் கட்சிகளையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுப்பதுதான் ஜனநாயக நெறிமுறையா? இந்த முடிவு எடுக்கப்பட்ட முறையே ஜனநாயகத்துக்கு எதிரானது.அரசியலிலும், ஆட்சியிலும் கருணாநிதி கடைப்பிடித்து வரும் "ஜனநாயக நெறிமுறைகளை' தமிழக மக்கள் நன்கறிவார்கள்.தமிழக மக்களை ஏமாற்றி, தமிழகத்தின் வளத்தை சுரண்டி, தன் குடும்பம் உயர்வதற்காகப் பாடுபட்ட கருணாநிதியின் படத்தை புதிய மற்றும் பழைய சட்டப் பேரவை வளாகங்களில் திறந்து வைப்பது என்ற முடிவு தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.உண்மையில் கருணாநிதி மக்கள் சேவையாற்றியிருந்தால், தன்னலமற்ற மக்கள் பணிகளைச் செய்திருந்தால் அவருக்கு பின் வரும் ஆட்சியாளர்கள் அவரை கௌரவிப்பார்கள்.அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோர் தங்களைத் தாங்களே கௌரவித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு பின் வந்தவர்களால்தான் கௌரவிக்கப்பட்டனர்.விஷம் போல ஏறும் விலைவாசி, கடுமையான மின்வெட்டு, மந்தமான தொழில் மற்றும் விவசாய உற்பத்தி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கருணாநிதியின் படம் வைப்பது தேவையற்ற ஒன்றாகும்.கருணாநிதியின் இந்தச் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற மரபு மீறிய செயல்கள் மாற்றி அமைக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
By Ilakkuvanar Thiruvalluvan
3/10/2010 2:53:00 AM
By manoharan
3/10/2010 1:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*