Last Updated :
மக ளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதற்கு சோனியா காந்தியும், காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்தான் காரணம் என்பதுபோல ஒரு பிரமையைக் கிளப்ப முற்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இதே மசோதாவைத் தாக்கல் செய்ய முற்பட்டபோது, வெளியுலகுக்கு ஆதரவு தருவதாக அறிக்கைகள் விடுத்து, சமாஜவாதி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை மறைமுகமாகத் தூண்டிவிட்டு மசோதாவைத் தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததும் காங்கிரஸ் கட்சிதான் என்பது புத்திசாலித்தனமாக மறைக்கப்படுகிறது.பாரதிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும், இன்னபிற மாநிலக் கட்சிகளும் ஆதரவுக்கரம் நீட்டி இருக்காவிட்டால் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்காது என்பது உலகறிந்த உண்மை. ஒருபுறம், பிரதமர் மன்மோகன் சிங் எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார். இன்னொருபுறம், இது ஏதோ சோனியா காந்தியின் தனிப்பட்ட வெற்றி என்பதுபோல காங்கிரஸ் கட்சியினர் சித்திரிக்கிறார்கள். இந்த மோசடித்தனத்தை நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மகளிருக்குச் சம உரிமை வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதற்காக மகளிரின் பெயரால் அரங்கேற்றப்படும் அரசியல் அபத்தங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பதும், இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் ஏதோ ஆணாதிக்கவாதிகள் என்றும், மகளிர் நலத்தில் அக்கறையில்லாத பிற்போக்குவாதிகள் என்று கருதுவதுபோல முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றிய ஊடக விவாதங்களும் சரி, அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளும் சரி, நகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றன. பிரதமரில் தொடங்கிப் பலரும், முதலில் மசோதா நிறைவேறட்டும், பிறகு அதிலுள்ள குறைகளையும், தவறுகளையும் திருத்திக் கொள்ளலாம் என்று கூறுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத வாதமாகத் தெரிகிறது. இந்த மசோதா முதன்முதலில் ஐக்கிய முன்னணி அரசால் 1996-ல் முன்வைக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 14 ஆண்டுகளில் முழுமையான விவாதம் நடைபெற வழிவகுத்து, குறைகள் களையப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. 14 ஆண்டுகளில் செய்யாததை, செய்யத் தவறியதை மசோதாவைச் சட்டமாக்கிய பிறகு செய்கிறோம் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை.மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்பட்டால் ஏற்படும் சில நடைமுறைச் சிக்கல்கள் பற்றி நேற்றைய தலையங்கத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். வாக்காளருக்கு அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமையான தங்களுக்கு விருப்பமான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தோம். இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், நமது மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகள்கூடப் பெரிய அளவில் முடக்கப்படும் என்பதுதான் உண்மை.அவையில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் சுழற்சி முறையில் மகளிருக்காக ஒதுக்க வகை செய்வதுதான் இந்தச் சட்டம். 300 பேர் கொண்ட அவையாக இருந்தால், தேர்தலுக்குத் தேர்தல் 100 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். சுழற்சி முறையில் மூன்று தேர்தல்கள் நடந்து முடியும்போது 300 தொகுதிகளிலும் ஒரு மகளிர் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். இதுதான் இந்தச் சட்டத்தின் மூலம் ஏற்பட இருக்கும் பயன்.அவையில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள், அடுத்த தேர்தலில் ஒதுக்கீடு அகற்றப்பட்டு விடுவதால் மீண்டும் போட்டியிடக் கட்சியால் தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்பதும், அப்படியே கட்சி அவர்களை வேட்பாளர்களாக்கினால் வெற்றி பெறுவார்களா என்பதும் சந்தேகமே. இன்றைய நிலையிலேயே, பல தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் செயல்பாடுகள் மெச்சத் தகுந்ததாக இல்லை. மீண்டும் உறுப்பினராகப் போவதில்லை என்பதை உணர்ந்த பிறகு, அந்தப் பிரதிநிதி தனது நல்வாழ்வை உறுதி செய்து கொள்வாரா இல்லை தொகுதியின் நலனுக்குப் பாடுபடுவாரா?இன்னொரு மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள், அடுத்த தேர்தலில் தங்களது தொகுதி பெண் வேட்பாளருக்கான தொகுதியாகப் போவதை எதிர்கொள்ள இருப்பவர்கள். அடுத்தமுறை தான் போட்டியிடவே போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகு எந்த உறுப்பினராவது தனது தொகுதியின் நன்மையைக் கருதிச் செயல்படுவாரா? கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வளப்படுத்திக் கொள்ள முயற்சிக்க மாட்டாரா?எல்லா உறுப்பினர்களும் அப்படி இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். நமது பெருவாரியான சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் காந்திய வழியில் மக்கள் தொண்டாற்றுவதற்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகசீலர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், வரப்போகும் காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைகளில் மூன்றில் இரண்டு பகுதியினரில் பெரும்பான்மையினர் இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தொகுதியைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நல்லாட்சி நடைபெறும் என்று நாம் கருதவில்லை.இன் னொரு பேராபத்துக்கும் இது இடமளிக்க வாய்ப்புண்டு. அடுத்த தேர்தலில் தாங்கள் போட்டியிட முடியாது என்பது தீர்மானமாகத் தெரிந்த மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், அந்த அரசும் ஆட்சியும் எத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாலும் ஆட்சி கவிழாமலும் மீண்டும் தேர்தல் வராமலும் பார்த்துக் கொள்வார்கள். ஒரு மக்கள் விரோத அரசு 5 ஆண்டுகள் முழுமையாகத் தொடரும். ஆனால், ஜனநாயகம் காப்பாற்றப்படுமா?அப்படியா னால் மகளிருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கிடைக்க என்னதான் வழி? இருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்காகச் சட்டம் இயற்றுவதை விட்டுவிட்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எதுவாக இருந்தாலும், பூத் கமிட்டியிலிருந்து கட்சியின் செயற்குழு வளர மகளிருக்கு சரிபாதி இடங்களை ஒதுக்கியே தீர வேண்டும் என்பதுடன் வேட்பாளர் பட்டியலிலும் மகளிர் சம உரிமை பெற்று சரிபாதி இடங்களில் இடம் பெற வேண்டும்.இதுதான் மகளிரின் நியாயமான உரிமையும், மக்களாட்சித் தத்துவத்தின் உணர்வையும் உறுதி செய்யுமே தவிர, இப்போது நிறைவேற்றப்பட இருக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஊழலை அதிகரிக்கவும், மக்களாட்சித் தத்துவத்தைத் தடம் புரளச் செய்யவும், மகளிரை அரசியல் கட்சித் தலைவர்களின் கைப்பாவையாக மாற்றவும்தான் வழிகோலும். இதனால் பயனடையப் போவது மகளிரும், மக்களுமல்ல. ஆண் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் என்று எச்சரிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்!
By Ilakkuvanar Thiruvalluvan
3/11/2010 2:28:00 AM
By Babu, USA
3/11/2010 2:24:00 AM
By nelaa
3/11/2010 2:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்