திங்கள், 23 நவம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 174:டோக்கியோவில் நடைபெற இருந்த நிதியளிப்போர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏப்ரல் 14, 15 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம் குறித்தோ, போர்நிறுத்த உடன்பாட்டின்படி புலிகள் இயக்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நடைமுறை பற்றியோ அக்கறையில்லாமல் வாஷிங்டன் தேர்வு செய்யப்பட்டது. புலிகள் இயக்கத்தை தடை செய்த ஒரு நாட்டில் இந்த ஏற்பாடு என்பதே, புலிகள் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் திட்டமிடப்பட்டது. விடுதலைப் புலிகள் இடம்பெறாத வாஷிங்டன் ஆலோசனைக் கூட்டத்தில் 21 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மற்றும் 16 சர்வதேச அமைப்புகளும் பங்கேற்றன. ஆஸ்லோவில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்றாம் நிலை அதிகாரியை அனுப்பிய இந்தியா, வாஷிங்டன் கூட்டத்துக்கு அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரையே அனுப்பி வைத்தது. அந்தக் கூட்டத்தில் துவக்க உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புத் துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் பேசுகையில், "விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, செயலிலும் அவர்கள் நிரூபிக்கவேண்டும்' என்று குறிப்பிட்டார். ""போர் நிறுத்தத்தையொட்டிய நடவடிக்கைகளாகத்தான் நிதி கோரும் மாநாடுகள் நடைபெறுகின்றன. போர்நிறுத்தம் என்பது புலிகள்-இலங்கை அரசு இடையே, நார்வேயின் முயற்சியில் நடைபெற்ற ஒன்று என்பதை மறந்து ஆர்மிட்டேஜ் இவ்வாறு பேசியதைப் பிரதமர் ரணில் மறுக்கவுமில்லை; அதற்கான விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் இதுகுறித்து எங்களது கருத்தை தெரிவித்தால், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லேவில்ஸ், பேச்சுவார்த்தையிலிருந்து புலிகள் நழுவப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார். அதுமட்டுமன்றி, புலிகள் ஆயுதங்களைத் தூக்கியது மக்களுக்காக அல்ல-இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வராமல் இழுத்துக்கொண்டே போவதற்குத்தான் என்று அவர், ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளிக்கிறார்,'' என்று ஆண்டன் பாலசிங்கம் பதிவு செய்திருக்கிறார். எனவேதான் அவர், தமிழ்நெட் வலைதளத்துக்கு ஏப்ரல் 25 அன்று அளித்த பேட்டியில், "நாங்கள் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறவில்லை. தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். அதற்கான காரணங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். ஒப்பந்தப்படி செய்யக்கூடியவற்றைச் செய்யாமல் அரசுதான் இழுத்தடிக்கிறது. இதனைச் சரி செய்ய வேண்டியது அரசுதான். நாங்கள் ஆயுதம் ஏந்தியது எங்களது மக்களைக் காக்க-எங்களது தாய் மண்ணை மீட்க. நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவது சுலபம். ஆனால் எங்களது மக்களை சிங்கள ராணுவத்தின் அடக்குமுறையிலிருந்து காப்பது யார்? எந்த முடிவுக்கும் வராமல் எதையும் நடைமுறைப்படுத்தாமல் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது சரியல்ல. ஒப்பந்த காலத்தில் நாங்கள் ஆயுதங்களைத் தொடவில்லை என்பது தூதுவர் வில்ஸýக்கும் ஆர்மிட்டேஜுக்கும் நன்கு தெரியும்' என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.சந்திரிகா முப்படைகளின் தலைவர் என்ற முறையில் எதற்கும் தயாராக இருக்க உத்தரவிட்டார் (22, ஏப்ரல் 2003). அரசுத் தரப்பு, இடைக்கால அரசுக்குப் பதிலாக ஒரு சபையை புலிகளுக்கு அறிமுகம் செய்தது (4, ஜூன் 2003). அந்தத் திட்டத்தில், நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூல் செய்வது போன்ற எந்த அதிகாரமும் இடம்பெறவில்லை. அவை அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கும் என்று மறைமுகமாக உணர்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தை அறிமுக நிலையிலேயே புலிகள் ஏற்க மறுத்தனர்.இலங்கை அரசு அளித்த நிர்வாக சபைத் திட்டத்தை புலிகள் ஏற்க மறுத்த நிலையில், இந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்ய, அதிபர் சந்திரிகா குழுவொன்றினை அமைத்தார். அதேவேளையில் புலிகளும் அரசியல் சட்ட வல்லுநர்கள் கொண்ட குழுவினை அமைத்து மாற்று வரைவொன்றை வரைய முடிவு செய்தது. இக் குழுவில் பேராசிரியர் சொர்ணராஜா (சிங்கப்பூர் பல்கலை-சட்டம்), பேராசிரியர் சிவ. பசுபதி (இலங்கை முன்னாள் அட்டர்னி ஜெனரல்), புலிகளின் சட்ட ஆலோசகர் ருத்ர குமாரன், டாக்டர் மானுவல் பால் டொமினிக் (சிட்னி பல்கலை-சட்டம்), பேராசிரியர் பி. ராமசாமி (மலேசியா-அரசியல்) மற்றும் விஸ்வேந்திரன் (புலிகள் சட்டப்பிரிவு), டாக்டர் ஜெய் மகேஸ்வரன் (பொருளாதாரம்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு பாரிஸில் கூடி வரைவொன்றை அமைத்தது. அவ்வரைவு, 1976-ல் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஒரு சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற அரசை அமைக்குமாறு, தமிழ் மக்கள், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமது பிரதிநிதிகளுக்கு ஆணை வழங்கியிருந்தமை கவனத்தில் கொண்டும், 2000-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள பெரும்பான்மைத் தமிழ் மக்கள் தமது செயல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை தங்களது அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு வாக்களித்ததை கவனத்தில் கொண்டும், இலங்கை அரசாங்கம் (ரணில்) தனது 2000-ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் ஓர் இடைக்கால அதிகார சபைக்கான தேவையை அங்கீகரித்துள்ளமைக்கு மதிப்பளித்தும், போரால் சிதைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் மீள்குடி அமர்வு, மறுவாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான உடனடித் தேவைகளை நிறைவேற்றவும், செயல்படவும், அதற்கான வருமானத்தை ஈட்டவுமான இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான- அம்சங்களைக் கொண்டிருந்தது. அவ்வகையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையில், அதன் அமைப்பு, தேர்தல் மனித உரிமைகள், மதச்சார்பின்மை, பாகுபாட்டிற்கு எதிரான, லஞ்சத்தைத் தடுத்தல், சமூகங்களுக்கான அமைப்பு போன்றவை வலியுறுத்தப்பட்டு, அதற்குண்டான விதிகளும் வரையறுக்கப்பட்டிருந்தன. நிதி, அதிகாரம், வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கான பொதுவான நிதியம், மீள் கூட்டமைப்புக்கான நிதியம், சிறப்பு நிதி, வர்த்தக அதிகாரம் வரிவிதிப்பு, மாவட்டக் குழுக்கள் அதன் நிர்வாகம் நில விவகாரம்- ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தும் பணி, கடல் சார் வளங்கள், இயற்கை வளங்கள், நீர் பயன்பாடு, ஒப்பந்தம், குத்தகை பிரச்னைகளை தீர்க்கும் பகுதி, அமைப்புகள் செயல்படும் காலம் (இலங்கையில் சமாதானம் பேசுதல் பக். 544-556-ன் சுருக்கம்) ஆகியவற்றுக்கான விதிகளும், செயல்பாடுகளும் அதில் விளக்கப்பட்டிருந்தன. இவ் வரைவை 1-11-2003 அன்று, புலிகள் நார்வே நாட்டு தூதர் மூலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயிடம் ஒப்படைத்தனர். அடுத்த நான்காவது நாளில் (4-11-2003) ரணில் விக்கிரமசிங்கே அமெரிக்காவிலிருந்தபோது, அதிரடியாக, அதிபர் சந்திரிகா, பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரபோனே, உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இம்தியாஸ் பக்கீர் ஆகிய மூவரையும் பதவி நீக்கம் செய்ததுடன், அவ் விலாகாக்களை தன் வசமே வைத்துக் கொண்டார். அவசர நிலைப் பிரகடனம் அமல்படுத்தப்படுகிறது. இதன் பின்னர் நார்வேயின் சமாதான முயற்சிகளில் தேக்க நிலை ஏற்பட்டது. சிறிதும் தாமதமின்றி சந்திரிகாவின் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புலிகள் அளித்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான முன் வரைவை நிராகரித்தது. அதிபரின் ஆலோசகராக இருந்த லட்சுமணன் கதிர்காமர், இந்த வரைவுத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், நாளைய தனிநாட்டுக்கான சட்ட வரைவு என்றும் விளக்கம் தந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறு கருத்து தெரிவித்த போதிலும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று சந்திரிகா தெரிவித்தார். அதுமட்டுமன்றி சர்வதேச நாடுகளின் குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நெருக்குதலில் சமாதான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறிய சந்திரிகா ரணில் விக்கிரமசிங்கே இம்முயற்சிகளை மேற்கொள்வார் என்றும் அறிவித்தார் (14.11.2003). ஆனால் சந்திரிகா எப்படியாவது சமாதான முயற்சிகளை முறியடிப்பது என்பதில் குறியாக இருந்தார். ரணில் பிரதமர் பொறுப்பில் இருப்பது சமாதான முயற்சிகள் நடைபெறுவதை அனுமதிப்பதாக இருக்கும். உலக அளவில் ரணில் பல நெருக்குதலைக் கொடுக்கக் கூடும். எனவே, அவரை வீழ்த்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தைக் கலைப்பது ஒன்றே வழி. 7.2.2004 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.நாளை: புலிகளைத் தாக்கிய ஆழிப்பேரலைகள்!

Readers...Good to watch youtube.com/watch?v=R8Uz7a9iMmA

By Alphonse, USA
11/23/2009 2:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக