ஞாயிறு, 22 நவம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 173: பேச்சுவார்த்தை முறிந்தது!



ஜப்பானில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது...
பு லிகளின் சுயநிர்ணயப் பிரகடனமே நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவிலுள்ள ரேடிசன் ஹோட்டலில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருந்தது. டிசம்பர் 2,3,4,5 தேதிகளில் அடுத்தடுத்து நடந்த அமர்வுகளில் சுயாட்சிக்கான அதிகாரப் பகிர்வுக்கு அரசுத் தரப்பு ஒத்துக்கொண்டது.நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்து நாட்டின் நாக்கோன் பத்தோம் என்னும் நகரில் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 9-ஆம் தேதிவரை நடைபெற்றது. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் உலக நாடுகளிடமிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளின் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுக்காகப் பெறப்படும் நிதியினை யார் பெறுவது, எவர் பொறுப்பில் வைத்துக் கையாளுவது என்பதும், பாதுகாப்புவளையப் பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றம், குறித்தும் அவ்வாறு குடியேறும் மக்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருந்தால், அவர்கள் ஆயுதங்களைக் களையவேண்டும் என, ஏற்கெனவே ஜெனரல் சரத் ஃபொன்சேகா துணைக்குழு கூட்டத்தில் (டிசம்பர் 14, 2002) கூறியது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தின்போது, போர்நிறுத்தம் நடைபெறுவதைச் சீர்குலைக்கவே ராணுவத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என புலிகள் சுட்டிக்காட்டினர். இறுதித் தீர்மானமாக, உலக நிதியளிப்போரிடமிருந்து பெறப்படும் நிதியைக் காப்பது உலக வங்கியின் பொறுப்பில் விடுவது என்றும் முடிவானது.ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை, பாலசிங்கத்தின் உடல்நிலை மோசமானதன் காரணமாக, அவரால் அதிகதூரம் பயணம் செய்யமுடியாத நிலையில், ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள நார்வே தூதரக வளாகத்தில் நடைபெற்றது (7-8, பிப்ரவரி 2003). இந்தப் பேச்சுவார்த்தைத் தொடங்க இருந்த சிறிது நேரத்துக்கு முன்பாக கடற்படையானது, புலிகளின் படகொன்றை வழிமறித்தது என்றும், அதிலிருந்த 3 கடற்புலிகள் சயனைட் அருந்தத் தயாராக இருப்பதாகவும் கடற்பிரிவுத் தலைவர் சூசை, பாலசிங்கத்திடம் தெரிவித்தார். அங்கிருந்த அமைச்சர் மிலிண்டா மோரகோடாவிடம், விளைவுகள் மோசமாவதைத் தடுக்கவேண்டும் என்று பாலசிங்கம் கேட்டுக்கொண்டார். இந்தச் செய்திப் பரிமாற்றத்துக்கிடையே 3 கடற்புலிகளிடமிருந்தும், தகவல் தொடர்பு இல்லை என்று மீண்டும் சூசையைத் தொடர்புகொண்டு, தெரிவித்தார். போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஜெனரல் ஃபுருகோவ்ட், அந்த மூன்று கடற்புலிகளும் சயனைட் அருந்திய நிலையில் படகு தகர்க்கப்பட்டது என்றும் தகவல் தெரிவித்தார். இந்தச் சம்பவம், இந்தப் பேச்சுவார்த்தையைக் குலைப்பதற்காக நடத்தப்பட்ட ஒன்று என்று பாலசிங்கம் குற்றம் சாட்டினார். கடற்புலிகளின் அத்தியாவசியத் தேவைகளை இவ்வாறு தடுப்பது தவறு என்றும் கூறினார். இதற்கான வழிமுறைகள் உடனடியாக வகுக்கப்படும் என்று மிலிண்டா கூறினார். உலக நாடுகளிலிருந்து பெறப்படும் நிதியிலிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளின் புனரமைப்புக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என வலியுறுத்திய பின்னர், அவ்வாறு ஒதுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.பெர்லின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாலசிங்கத்தை வன்னிப் பகுதிக்கு பிரபாகரன் அழைத்தார். அவரும் மார்ச் 2-ஆம் தேதி பிரபாகரனைச் சந்தித்த அடுத்தநாள் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜெனரல் ஃபுருகோவ்டுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட ஜெனரல் ட்ரைகாஃப் டெலிப்சன் பிரபாகரனையும் மற்றவர்களையும் சந்தித்தார். அப்போது பிரபாகரன் கடலில் எங்களது நடமாட்டத்தைத் தடுக்கும் ராணுவம், போர்நிறுத்தக் காலத்திலும் ஏராளமான நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது; மாறாக எங்களை ஒடுக்குகிறது என்றும் முறையிட்டார். இந்த நேரத்தில் புலிகளின் கப்பல் என்று கருதி, வணிகக் கப்பல் ஒன்றை கடற்படை தாக்கி, மூழ்கடித்தது. அந்தக் கப்பலில் இருந்த 11 கடற்புலிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என நார்வே சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவினர் வற்புறுத்தினர்.ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஜப்பான் நாட்டின் ஹக்கோனே என்னும் இடத்தில் நடைபெற்றது (18-21, மார்ச் 2003). இந்தப் பேச்சுவார்த்தையின் தொடக்கமே சூடாக இருந்தது. கடற்படைத் தாக்குதல் மற்றும் 3 கடற்புலிகள் மரணம் நேர்ந்தது குறித்தும், வணிகக்கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏராளமான அளவில் ஆயுதங்களை ராணுவத்துக்காக வாங்கியது குறித்தும், மறுவாழ்வுத் திட்டங்களுக்குப் போதிய நிதியளிக்காமை, இடம்பெயர்ந்த தமிழர்களின் இடங்களில் குடியமர்த்த ராணுவம் விதிக்கும் தடைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அமைச்சர் பீரிஸ், ஆயுதம் வாங்கிக் குவிக்கப்படுவதை மறுத்தார். மற்ற புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 29-லிருந்து மே 2-ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் புலிகளுக்கு சாதகம் என்று பார்த்தால் அந்த அம்சம் குறைவு என்றும், பாதகமான அம்சங்களே அதிகம் என்றும் புலிகள் இயக்கத்தால் மதிப்பிடப்பட்டது. அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; வடக்கு-கிழக்கு புனரமைப்புப் பணிகளுக்கும் போதிய நிதியாதாரம் வழங்கப்படவில்லை; மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லமுடியவில்லை; போரில் இடப்பெயர்வு ஆனவர்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்த முடியவில்லை; பாதுகாப்புக் காரணங்கள் என்று ராணுவம் மறுக்கிறது என்றும் புலிகளால் புகார் கூறப்பட்டது. இதுகுறித்து பாலசிங்கம், "வார் அண்ட் பீஸ்' என்னும் தனது நூலில், ""யுத்தநிலையைக் குறைத்தல், இயல்பு நிலையை ஏற்படுத்துதல் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்ததாகும். இதன்மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை சாத்தியப்படுத்தப்படும். ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் மக்களின் உடைமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் அமைதி வாழ்வு பறிபோவதை நியாயப்படுத்தும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நிலைப்பாடு, அரசுத்தரப்பால் எடுத்துவைக்கப்படும் அரசியல் தத்துவக் கோட்பாடுகளுக்கு எதிரானது-முரணானது'' என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து புலிகள் தரப்பில் கூறப்பட்டதாவது- போர்நிறுத்த நடவடிக்கைகளுக்கு ராணுவம் இடையூறு செய்கிறது. கடற்புலிகள் கடலில் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. ராணுவத்துக்கு ஏராளமான ஆயுதங்களை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகளில்கூட ஒப்பந்த நடவடிக்கைகள் நடைபெறுகின்றனவா என்பதை ஆராய்வதை விட ஒவ்வொரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கும் முன்னதாகவும் அரசுத் தரப்பில் ஏதேனும் ஓர் அத்துமீறல் நடத்தப்பட்டு, அதன் காரணமாக எழும், விவாதங்களிலேயே நேரம் வீணாகிறது. இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு உடனடி மனிதாபிமானப் புனரமைப்புத் தேவைகள் மீதான குழு, உலக வங்கியின் பார்வைக்குண்டான வடக்கு-கிழக்கு புனரமைப்பு, கட்டமைப்புக்கான நிதிக்குழு போன்றவற்றின் செயல்பாடுகள் சுருக்கப்பட்டுவிட்டன. மொத்தத்தில், ""விடுதலைப்புலிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள். ஆகவே, பேச்சுவார்த்தைகளில் இடம்பெறப்போவதில்லை என்று 21 மார்ச் 2003 அன்று அறிவித்தபோதிலும், தொடர்ந்து யுத்தநிறுத்த உடன்படிக்கையை மதித்து நடக்கவும் சமாதானத்திற்காக புலிகள் உழைக்கப் போவதாகவும்'' பாலசிங்கம் கூறினார்.
கருத்துக்கள்

இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகளின் வெற்றியைத்தடுக்கவே அவர்களைப் பேச்சிற்கு அழைத்துள்ளனர். சிங்கள அரசிற்கு ஊறு நேரும் போதெல்லாம் தமிழர் தலைவர்களை அழைத்துச் சிங்கள ஆட்சியைக் காத்தனர். தமிழர் நலன் நாடி எந்தப் பேச்சையும் படை உதவியையும் இந்தியா அளித்ததில்லை. உண்மையிலேயே ஈழத்தமிழர் மீது பரிவு இருந்திருந்தால் சிங்கள ஆட்சியாளர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஈழத்தமிழர் படுகொலைகளுக்கும் தாயகப் பறிப்பிற்கும் முழுமுதற் காரணம் இந்திய ஆட்சியாளர்களே! ஈழத் தமிழர் நலனே இந்தியாவின் நலன் எனக் கருதி இந்தியா செயல்பட்டிரு்தால் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். இந்தியாவும் வலிவு பெற்றிருக்கும்.. மாறான நிலைப்பாட்டால் தீராப் பழிபாவத்திற்கு மக்களை ஆக்கியுள்ளதுடன் தென்னெல்லை நாடான தமிழ் ஈழத்தின் இறையாண்மையைச்சிதைத்து அந்நாட்டு மக்களையும் வஞ்சகமாக அழித்துள்ளது. பாவையின் தொடரைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது நன்றாகவே புரியும். இனியேனும் இந்தியா திருந்த வேண்டும். தமிழகக் காங்கிரசார் தம்மையும் திருத்திக் கொண்டு மத்திய அரசையும் திருத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/22/2009 3:22:00 AM

Dear vbdoss...India is a great country. It respects human values. My brothers in Srilanka should believe India and Indians (Not the politicians). Come out of terrorism.. enjoy the good life. I will pray for the peace in Srilanka

By Alphonse, USA
11/22/2009 2:30:00 AM

இந்த நேரத்தில் புலிகளின் கப்பல் என்று கருதி, வணிகக் கப்பல் ஒன்றை கடற்படை தாக்கி, மூழ்கடித்தது. அந்தக் கப்பலில் இருந்த 11 கடற்புலிகள் கொல்லப்பட்டனர்... பாவை சந்திரன்..(Published : 22 Nov)... be careful .. you are writing (unknowingly) against LTTE. Dinamani may stop your payment for this article.

By Alphonse, USA
11/22/2009 2:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக