சனி, 28 நவம்பர், 2009

Latest indian and world political news information

ஈரோடு: போலீஸ் எஸ்.பி., தன்னை ஒருமையில் பேசியதாக முதல்வரிடம், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் புகார் செய்துள்ளார்.பிரபாகரன் பிறந்த நாளை முன் னிட்டு, ஈரோட்டில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப் பட்ட விளம்பரத் தட்டிகளை முன் னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் நேற்று காலை அகற்றினர். "இளங் கோவன் உள்ளிட்ட 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தட்டி வைத்தவர்கள் கருங்கல் பாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, ஈரோடு மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரனை போனில் தொடர்பு கொண்டு பேசிய இளங்கோவனை, எஸ்.பி., ஒருமையில் பேசியதாக காங்கிரஸ் தொண்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. நேற்று மாலை மூலப்பட்டறையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன் தொண் டர்கள் திரண்டு, சாலை மறியலுக்கு தயாராயினர்.பின்னர், தொண்டர்கள் மத்தியில் இளங்கோவன் பேசியதாவது:சென்றாண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை நாம் மறக்க முடியாது. பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக, உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், பயங்கரவாதி பிரபாகரன் உருவப் படத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளில், அவரது ஆதரவாளர்கள் விளம்பர தட்டிகள் வைத்துள்ளனர்.ஈரோட்டிலும் இதுபோன்ற தட்டிகள் இருப்பதை அறிந்து இன்று காலை அவற்றை அகற்றினோம். அதற்காக, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர். "பயங்கரவாதி பிரபாகரன் படம் இடம்பெற்ற தட்டிகளை வைத்தது நாங்கள் தான்' என்று தைரியமாக கூறியவர்களை, போலீசார் கைது செய்யவில்லை.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி.,யை போனில் தொடர்பு கொண்ட மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., பழனிச்சாமி, "அண்ணன் பேசுகிறார்' என்று எஸ்.பி.,யிடம் கூறிவிட்டு, என்னிடம் போனை கொடுத்தார்."பிரபாகரன் படத்தை வைத்தவர்களே ஒப்புக் கொண்டு ஸ்டேஷனில் என் மீது புகார் கொடுத்துள்ளனர். அவர்களை ஏன் கைது செய்யவில்லை' என்று, எஸ்.பி.,யிடம் கேட்டேன்.அதற்கு அவர், "உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்றார்."அப்படியானால், நீங்கள் பயங் கரவாதிகளுக்கு துணை போகிறீர்களா?' என்று கேட்டேன்.அவர், "யோவ் உனக்கு என்ன தெரியும்?' என்று என்னை ஒருமையில் பேசினார்."என்னைப் பற்றி தெரிந்து கொண்டே ஒருமையில் பேசுகிறாயா? மரியாதையாக பேசு' என்று நானும் ஒருமையில் பேசினேன்.பின், என்னிடமிருந்து போனை வாங்கிய பழனிச்சாமி எம்.எல்.ஏ., "இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர்; முன்னாள் மத்திய அமைச்சர்; பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று உனக்கு தெரியாதா? உன்னை எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசிக் கொள்கிறோம்' என்று கூறி போனை வைத்துவிட்டார்.இதுபற்றி, முதல்வர் கருணாநிதியிடம் கூறினேன். அவர், அதிகாரியின் பெயரை கேட்டுவிட்டு, "நான் பார்த்துக் கொள்கிறேன்; சென்னை வரும்போது என்னை வந்து பார்' என்றார்.கோவை டி.ஐ.ஜி., பாலநாகதேவி, "அவருக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என்றார். எஸ்.பி., என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. பிரபாகரன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.இதுகுறித்து எஸ்.பி., ஜெயச்சந்திரனை தொடர்பு கொண்ட போது, ""நான் வெளியில் இருக்கிறேன்; பிறகு பேசுகிறேன்,'' என்றார்.

போலீஸ் காவலை மீறி மாவீரர் தினத்துக்கு ஆதரவு :திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில், விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டியதாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர் அச்சடித்து கொடுத்ததாக, அச்சக உரிமையாளர் குமார்(48), மேனேஜர் மோகன்(46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு, நேற்று (27ம் தேதி) திருச்சி நீதிமன்ற நுழைவு வாயிலில், திருச்சி வக்கீல்கள் பேரவை சார்பில், வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. வக்கீல்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்ததால், அவற்றை அகற்ற முன்வராத போலீசார், அதை வீடியோவில் பதிவு செய்தனர்.மண்டபம் அகதிகள் முகாமில், மாவீரர் தினத்திற்கு வணக்கம் செலுத்தியும், ஆதரவு தெரிவித்தும், கரியால் சுவர்களில் எழுதப்பட்டிருந்தது. இதை நேற்று காலை கவனித்த போலீசார், சுவரில் எழுதியதை அழித்தனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்களால் புறக்கணிக்கப்பட்ட கோவன் மட்டமான நடவடிக்ககையில் ஈடுபட்டு ஊடகங்களில் தன் பெயர் வரவேண்டும் எனத் துடிக்கிறார். தாயாலேயே கைவிடப்பட்ட இவரை குடும்பப் பரம்பரை உடையவர் எனக் கூறுவது முறையாகாது. உயிர் நீத்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவது நம் பண்பாடே! அந்தப் பண்பாட்டிற்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அனைவரையும் தண்டிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக