புதன், 25 நவம்பர், 2009

ஆட்சியில் பங்கு பெறாதது தவறுதான்: பீட்டர் அல்போன்ஸ்



திருவொற்றியூர், நவ. 24: தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு பெறாமல் போனது தவறுதான் என எஸ்.பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் மறைந்த இந்திரா காந்தி பிறந்த தினத்தையொட்டி காங்கிரஸ் வடசென்னை பிரிவு சார்பில் தண்டையார்பேட்டையில் செவ்வாய்க்கிழமை, 100 பேச்சாளர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது. பயிற்சி முகாமை துவக்கி வைத்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. பேசியது: காங்கிரஸ் கட்சியைவிட வேறு எந்த கட்சியும் நாட்டிற்கு சேவை செய்திடவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, ஆலய பிரவேசம், எழுத்துரிமை, பேச்சுரிமைக்காக வாழக்கையை அர்ப்பணித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். சோனியாவை கைநீட்டி குற்றச்சாட்டியவர்கள் எல்லாம் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். மதவெறியை ஒழிக்க முன்னுரையை காந்தியடிகள் எழுதினார். முடிவுரையை சோனியாகாந்தி எழுதிவிட்டார். பிற கட்சிகள் தோற்றுப்போனால் அக்கட்சியின் தலைவருக்கும், தொண்டர்களுக்கும்தான் இழப்பு ஏற்படும். ஆனால் காங்கிரஸ் கட்சி தோற்றால் அது நாட்டிற்கே இழப்பாகும். 1947-ல் இருந்த சிந்தனை தற்போது இல்லை. தற்போது மாநில, பிராந்திய உணர்வுகள் தலைதூக்கியுள்ளன. தேசிய கட்சியான நாம் தேசத்தை எப்படி காக்க போகிறோம் என்பதை விளக்கி கூறத்தான் இது போன்ற பயிற்சி முகாம்களை நடத்துகிறோம். தமிழ்நாட்டில் தமிழின உணர்வு கொண்டவர்களை எதிர்ப்பதா, அல்லது அவர்களையும் அரவணைத்து செல்லப்போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டும். 40 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் 18 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை நம்மால் சேர்க்க முடிந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது என்பதை இதன்மூலம் அறிய முடியும். மற்ற மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடிந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியாததற்கு தொண்டர்கள் காரணமல்ல. கட்சியின் தலைவர்கள்தான் காரணம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை ஏன் ஏற்படுத்தவில்லை என குறித்து தொண்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நான் இது குறித்து பல முறை நம் தலைவர்களிடம் பேசி உள்ளேன். ஒரு கட்டத்தில் எனக்கு மந்திரி பதவி தேவை இல்லை. ஆனால் காங்கிரஸ் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனாலும் பயன்னில்லை. இது போன்ற சூழல் அடுத்த முறை அமையுமா என தெரியவில்லை. இன்னும் ஓராண்டுதான் பதவி காலம் உள்ள நிலையில் ஆட்சியில் பங்கேற்று என்ன செய்யப்போகிறோம்?. இப்போது ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலைதான் மீதம் இருக்கும் என்றார் பீட்டர் அல்போன்ஸ். இதில் வடசென்னை காங்கிரஸ் தலைவர் ராயபுரம் ஆர்.மனோ, ஜனார்த்தனன், எர்ணாஸ்ட் பால், இறைமுதல்வன், கவுன்சிலர்கள் பாபு சுந்தரம், பத்மா பூபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

தமிழின உணர்வாளர்களை எதிர்ப்பதா என்ற கேள்வி எழும் நிலையில் உள்ளதே காங்கிரசு கட்சி அடியோடு துரததியடிக்கப்பட வேண்டிய கட்சி என்பதை உணர்த்தும். நாடு நன்னிலை அடைய காங்கிரசு என்னும கட்சி இருந்த சுவடே தெரியாமல் மறைய வேண்டும். கலைஞரும் சோனியாவும் செய்த நல்ல செயல், தமிழக ஆட்சியில் காங்கிரசைப் பங்கேற்கச் செய்யாததுதான். காங்கிரசு ஆட்சி செய்தால் என்ன? அதன் அடிமை ஆட்சி செய்தால என்ன? என அமைதியாக இருப்பதை விடடு விட்டு ஆட்சிக் கனவு ஏன் வருகிறது என்று தெரியவில்லை. ஒழியட்டும் காங்கிரசு! உருப்படட்டும் நாடு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/25/2009 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக