செவ்வாய், 24 நவம்பர், 2009

புரட்சியாளர் பிரபாகரனை வணிகச்சின்னமாக்காதீர்…

எழுதியவர்கனி on November 19, 2009
பிரிவு: சிறப்புக்கட்டுரைகள்

leader_16102009_sவாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

“என் தந்தையின் பெயரையும் படத்தையும் வணிக முத்திரையாக்காதீர்கள். பிரிட்டானிகா வோட்காவிற்கும் ஃபிஸ்ஸி பானத்திற்கும் ஸ்விஸ் கைபேசிக்கும் என் தந்தையின் படத்தை விளம்பரச்சின்னமாகப் பயன்படுத்துவது அவரை அவமதிக்கும் செயலாகும்.

“நிகரமைப் பொருளியலுக்காகப் போராடியவரை மிகைத்துய்ப்பு வாதத்திற்குப் பயன்படுத்துவது முரண்பட்ட செயல். எங்களுக்குப்பணம் தேவை இல்லை. மரியாதைதான் தேவை”.

சேகுவேராவின் புகழ், வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை அருவருத்தார் அவர் மகள்.

காமத்திற்கு கண் இல்லை என்பதுபோல் முதலாளியப் பண மோகத்திற்கு முறை கிடையாது. சேகுவேராவை வேட்டையாடியது முதலாளியம்; அவரது புகழ், அவரது பெயர் உலகெங்குமுள்ள இளைஞர்களின் உணர்வுகளில் மின்சாரம் பாய்ச்சுகிறது என்பதைத் தெரிந்துகொண்டபின், அவரைப் பண்டங்களின் விற்பனைச் சின்னமாக மாற்றுகிறது அதே முதலாளியம்.

கொடிய நஞ்சாக சித்தரித்த ஒருவரையே, கொன்றபின் சிறந்த குளிர்பானமாக சித்தரிக்கிறது. இந்த இரண்டுவகை ஹிμம்முறையிலும் தனது லாபம் தான் முதலாளியத்திற்கு முதன்மை நோக்கு.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகத் தமிழ் நாட்டு இதழ்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அட்டையில் அவர் படம் போட்டால் அமோக விற்பனை. அவர் பற்றிக்கட்டுரை வெளியிட்டால் கடைகளில் இதழ்கள் தீர்ந்து விடுகின்றன.

இந்தப்பின்னணியில் தான் அவர் பற்றிக் கட்டுக்கதைகள் எழுதத் தொடங்கினர் எழுத்தாளர்களும் உளவுத்துறை ஒட்டுண்ணிகளும்.

வாரம் ஒருமுறை வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் பிஸ்கட்டும் தேநீரும் அருந்திவிட்டுத் திரும்பியவர்கள் போன்ற தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இவர்களைக் கேட்டுக்கொண்டு தான் பிரபாகரன் அரசியல் உத்திகள் வகுத்தது போலவும், பிரபாகரன் சொற்படிதான் இவர்கள் இங்கே இயங்கியது போலவும் எழுதிக் கவர்ச்சி காட்டுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓடிப்போய்; சிங்கள அரசுக்குக் கைக் கூலிகளாக செயல்படும் சிலர், பிரபாகரன் பற்றி புத்தகம் போடுகிறார்கள்; ஏடுகளில் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.இலக்கியக் குத்தகைக்காரர்கள் நடத்தும் ஏடுகள் சில, புலம்பெயர்ந்த சிங்களக் கைக் கூலிகளின் புலம்பல்களை “நடுநிலையோடு” வெளியிடுகின்றன.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போல் தொடங்கி பின்னர் தூற்றி எழுதுவது அல்லது கழிவிரக்கம் காட்டுவதுபோல் நடித்துப் பின்னர் கடிப்பது அவர்கள் உத்தி. எல்லாம் சந்தை மயம்! சிங்களத்தின் சின்னத் தூதுவர் அம்சாவிடம் ஊதியம் பெற்ற ஊடகத்துறையினர் பற்றி செய்திகள் அம்பலமாகி வருகின்றன. புலனாய்வு வாரமிருமுறை ஏடொன்றின் செய்தி ஆசிரியர் ஒருவர் கைக்கூலி வாங்கியே கோடீஸ்வரன் ஆகிவிட்டாராம். அதனால் அந்த ஏடும் அவரை நீக்கிவிட்டதாம்.

இன்னொரு பக்க வேதனை, தமிழக அரசியலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகப் பயன்படுத்துவது இன்னொருபக்க வேதனையாகும். பிரபாகரன் சொல்லியதால்தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரசை ஆதரித்தேன் என்று ஒரு தலைவர் கூறுகிறார். இன்னொருவரோ பிரபாகரன் கட்டளைக்கேற்ப என் அரசியலை வகுத்துக்கொண்டேன் என்கிறார்.

தமிழ்நாட்டில் அவரவர் எடுக்கும் அரசியல் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை ஞாயப்படுத்த பிரபாகரன் பெயரைப் பயன்படுத்துவதும், அவர் சொல்லித்தான் செய்தேன் என்பதும் அவர் பெயருக்குக் களங்கம் சேர்ப்பதாகும்.

பிரபாகரன் நிகழ்காலத்தின் ஈடு இணையற்ற விடுதலைப் புரட்சியாளர். விடுதலை இயக்கத் தலைவர். போர் முறையில் தேர்ந்த திறனும், அரசியலில் ஆழ்ந்த அறிவும் பெற்றவர். அவருடைய ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடையே அவர்க்குப் பெரும் புகழை ஈட்டித்தந்துள்ளன. தமிழகத் தமிழர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி நிறைய இருக்கிறது. தமிழ்த் தேச விடுதலைக்கு, தமிழ்மொழி விடுதலைக்கு, சாதி ஒழிப்பிற்கு, பெண் விடுதலைக்கு, சமத்துவப் பொருளியல் வளர்ச்சிக்கு என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம், ஏராளம்.

அதேபோல் போலிப்பட்டங்களைப் புனைந்து கொள்ளாத அவரது எளிமையும் தன்னடக்கமும் தமிழ்நாட்டிற்குத் தேவையான பாடங்கள். குடும்பப் பதவி அரசியல் கொடி கட்டிப் பறக்கும் இந்நாட்டில், குடும்பத்தையே போர்க்களத்தில் போராளிகளாக இறக்கிவிட்ட அவரது ஈகம் நாம் பின்பற்ற வேண்டிய அரியசெயல்.

“கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை”

என்ற வள்ளுவப் பெருந் தகையின் போர் வரிகளுக்கேற்ப புலிப்படையை மட்டுமின்றி தம் குடும்பத்தையே பகைப்படையை எதிர்த்துக் போர்க்களத்தில் நிறுத்தியவர் பிரபாகரன்.

இத்தனைச் சிறப்புகள் கொண்ட அரிய தலைமை தமிழினத்தில் தோன்றியதால் தமிழினத்தின் பெருமை உலகு தழுவி விரிந்தது. ஆனால் அத்தகு தலைமையைத் தமிழ்நாட்டில் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவரை மலினப்படுத்துதல் கூடாது. தமிழின உணர்வாளர்களில் சிலர் ரசனை உணர்வுகளில் மூழ்கி விடுகின்றனர். வீரத்தின் வர்ணனையையும் ரசிப்பது, சோகத்தின் வர்ணனையையும் ரசிப்பது என்ற நிலையில் இருக்கின்றனர்.

“பிரபாகரனோடு பேசி விட்டு வந்தேன்”

“பிரபாகரன் எனக்குக் கட்டளை இட்டார்”

என்று ஒருவர் சொன்னால் அச் சொற்களில் மயங்கிவிடுகின்றனர்.

யாராக இருந்தாலும் பின்வருமாறு கேளுங்கள்:

“பிரபாகரன் பெருமைகளைப் பேசுங்கள்; விடுதலைப்புலிகளின் சாதனைகளைப் போற்றுங்கள். ஆனால் ஈழ விடுதலைக்கும், தமிழ்நாட்டு விடுதலைக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? உங்கள் வேலைத்திட்டம் என்ன? உங்கள் புரட்சிப்பணி என்ன?”

இப்படிப்பட்ட வினாக்கள் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலை செம்மைப்படுத்த உதவும். மேனாமினுக்கி அரசியலைத் தடுக்கும்.

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

(Visited 522 times, 21 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக