புதன், 25 நவம்பர், 2009

மாணவர்களுக்கு இணையதளம் மூலம் கல்வி உதவித் தொகை



உதவித் தொகையை இணையதளம் மூலம் வழங்கும் சேவையை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
சென்னை, நவ. 24: மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் சேவை இணையதளம் (edistrict.tn.gov.in) மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் மாணவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் கல்லூரி முதல்வர்களால் பதிவு செய்யப்படும். இதன்பின், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் செய்யப்படும். பின்னர், இணையதளத்தின் மூலம் விவரங்கள் அறிந்து அதற்கேற்ப கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதன் காரணமாக தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும். மாணவர்கள் தங்களது விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளது; யாரிடம் உள்ளது; எப்போது கிடைக்கும்; எவ்வளவு உதவித் தொகை கிடைக்கும் என்ற விவரங்களை தாங்களாகவே இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகையும் இந்த முறையில் வழங்கப்படும் என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

பாராட்டிற்குரிய முயற்சி. பொதுவாக உதவித் தொகைகள் கல்வி ஆண்டின் இறுதியில் வழங்கப்படுகிறது.இதன் மூலம் காலத்தாழ்ச்சியைத் தவிர்த்து கல்வியாண்டு தொடக்கத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்கலாம். கல்வி நிலையங்கள் தாங்களாகவே எடுத்துக் கொள்ளும கையூட்டும் இருக்காது. பள்ளிக்கூடங்களில் பெற்றோர்க்குத் தெரியாமல் மாணவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பொய்க் கையொப்பம் இட்டு மோசடி செய்வதும் நிறுத்தப்படும். பொதுவாக இதுபோன்ற இணை தளங்களில் விவரம் தரப்படும் என்று தெரிவிப்பார்களே தவிர, பரிசீலனையில் உள்ளது என்ற பொது விவரம்தான் வழங்கப்பட்ட பின்னரும் இருக்கும். அவ்வாறில்லாமல் உடனுக்குடன் விவரங்களைப் பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவித் தொகை தரும் பிற துறைகளும் இதனைப் பின்பற்ற ‌வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/25/2009 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக