சனி, 28 நவம்பர், 2009

தவறிழைத்தது யார்: பிரபாகரனா? கருணாநிதியா?

எழுதியவர்சோழன் on November 24, 2009
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்

karunanidhiஇலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதுதான் சென்ற வாரத்தின் பில்லியன் டாலர் கேள்வி.

இந்தக் கேள்விக்கான பதிலில், இந்தியாவின் மானம் மரியாதையெல்லாம் அடங்கியிருக்கிறது. இதே கேள்வியை பழ.நெடுமாறனோ வை.கோவோ மணியரசனோ கொளத்தூர் மணியோ சீமானோ எழுப்பியிருந்தால் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போதுதான் இதன் முக்கியத்துவம் புரியும். இந்தமுறை அவர்கள் எழுப்பவில்லை பிரச்சினையை. ஆசியாவின் நம்பர் ஒன் ராணுவத் தளபதி என்று இந்தியாவாலேயே புகழப்பட்ட சரத் பொன்சேகா இந்தப் புகாரை எழுப்ப, நொந்துபோன இந்தியா பேய்முழி முழிக்கிறது.

இஞ்சி தின்ற குரங்கின் நிலையில் இருக்கிறதா? ஆப்பசைத்த குரங்கின் நிலையில் இருக்கிறதா? என்று இந்தியாவைப்பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல், அலறவும் முடியாமல் அசையவும் முடியாமல் அவஸ்தைப் படுகிறது. எப்போதும்போல், உளறலுக்குமட்டும் குறைச்சலில்லை. ராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கவில்லை என்கிறது. யூகத்தின் அடிப்படையில் பொன்சேகா இப்படிப் பேசியிருக்கக்கூடாது என்கிறது. இலங்கையில் ராணுவப் புரட்சி வர வாய்ப்பில்லை என்கிறது. இவ்வளவும் சொல்லிவிட்டு, ஜெகதலப் பிரதாபன் பிரணாப் முகர்ஜியை அவசர அவசரமாக கொழும்புக்கு அனுப்புகிறது.

பக்கத்துவீட்டுக் கோழியை அடித்துக் குழம்புவைத்தால் ஊருக்குத் தெரியாமல் போய்விடுமா? பொன்சேகா பேசியவுடன் பிரணாப் கொழும்புக்குப் பறந்தது ஏன் என்பது ஊருக்கே தெரிந்திருக்க, இலங்கை போய்த் திரும்பியவுடன் தமிழர் நிலை தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் தகவல் சொல்வார் என்று நம் காதுகளில் பூக்கடையையே தூக்கிவைக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் வேண்டுமானால் அங்கே என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாதவர்களாய் இருக்கலாம். ஏழுகோடி தமிழர்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று இன்னுமா நினைக்கிறார்கள்? சரத் பொன்சேகா ஒரு தனி நபரல்ல. இலங்கையின் ராணுவத் தளபதியாக இருந்து, கூட்டுப் படைத் தலைமை அதிகாரி லெவலுக்குப் போனவர். ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்ற ஆற்றலுக்காக, இலங்கை ராணுவத்தின் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்.

‘பேஷ் பேஷ்…. ராணுவத் தளபதின்னா சரத்பொன்சேகாதான்’ என்று எம்.கே.நாராயணன் போன்ற பொறுப்புமிக்க இந்திய உயரதிகாரிகளால் குளிப்பாட்டப்பட்டவர். இந்த அடிப்படையில்தான் அவர் சொல்லும் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. ராணுவப் புரட்சி அபாயத்திலிருந்து ராஜபட்சேவைக் காப்பாற்ற இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது = என்பது பொன்சேகாவின் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டின் நேரடி அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தவறினோமென்றால், கடவுளால்கூட நாட்டைக் காப்பாற்றமுடியாது. அதைப் புரிந்துகொள்ள, கோனார் நோட்ஸெல்லாம் தேவையில்லை. ராஜபட்சே இந்தியாவின் அதிபரல்ல. இன்னொரு நாட்டின் அதிபர். அவரைக் காப்பாற்ற இந்திய ராணுவம் தயாராயிருந்தது என்கிறார் பொன்சேகா. ராஜபட்சேவின் கூலிப்படையாக களமிறங்க இந்திய ராணுவம் தயாராயிருந்தது என்பதைத் தவிர இதற்கு வேறென்ன பொருள்?

எவ்வளவு கேவலமான குற்றச்சாட்டு இது! இந்திய ராணுவம் கூலிப்படையாகச் செயல்பட இருந்தது என்று சர்வதேச அரங்கில் பொன்சேகா பறைசாற்றியிருப்பதை வெறும் குற்றச்சாட்டாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியுமா? இது, மிக மிகக் கடுமையான அவதூறு. இதைக்கேட்டு, கம்புக்கூட்டுக்குள் கம்பளிப்பூச்சி நுழைந்துவிட்டதைப்போல் நாம் நெளிகிறோம். இறையாண்மை இந்தியா கண்டும் காணாததைப்போல் சிரித்து மழுப்பப் பார்க்கிறது. அளவுக்கதிகமாக அதனுடைய தோல் தடித்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நாட்டுக்கே இப்படியொரு அவப்பெயர் ஏற்படுத்தப் பட்டிருக்கிறதே என்று காங்கிரஸ் மட்டுமல்ல, கருணாநிதியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ரத்தக் கறை படிந்த ‘கை’யுடன் கை கோத்து, சொக்கத் தங்கத்தின் சோதியில் கலந்தவர் அவர்.

இந்த வயதிலும், மணிவிழாக்கள், மணவிழாக்கள், நட்சத்திரக் கலைவிழாக்கள் என்று மனிதர் 24 மணி நேரமும் பிஸி. ஆனால் இதைத் தவிர மற்ற விஷயங்களையெல்லாம் பேசுகிறார். இத்தனைக்கும் ராஜபட்சேவைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழகக் கடலோரத்தில்தான் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருந்திருக்கவேண்டும். ஒருவேளை, கருணாநிதிக்குத் தெரியாமலேயே ராணுவம் நிறுத்தப்பட்டிருந்ததோ என்னவோ! பொன்சேகாவிடம்தான் கேட்கவேண்டும். இதையெல்லாம் தெரிந்துகொள்ளும் விருப்பம் கருணாநிதிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டுகள் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி நீடிக்கவேண்டும் என்பதுதான் அவரது அதிகபட்ச விருப்பமாயிருக்கிறது. அத்தனை ஆண்டுகளும் தி.மு.க. ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியிலிருந்தே தான் ஆதரவு தரவேண்டுமா என்பதுபற்றி மட்டும் அவர் பேசுவதேயில்லை.

இப்படிப்பட்ட ராஜதந்திரி, பொன்சேகா விஷயத்தில் அவசரப்பட்டு மூச்சு விடுவாரா? இன்றையதேதிக்கு, கருணாநிதி, அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட அசல் இந்தியர். இந்தியாவின் நண்பனான இலங்கை, அவருக்கும் நண்பன். நட்புபாராட்டியே ஆக வேண்டிய நிலை. இல்லாவிட்டால் சோனியா அம்மா கோபித்துக் கொள்ளக்கூடும். அவரது மௌனத்துக்கு இதுதான் காரணம். தாய்மண்ணுக்காகப் போராடிய இமாலயக் குற்றத்துக்காக, இலங்கையின் அதிதீவிர வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றி அவர் பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இனியும் கேட்க மாட்டீர்கள்.அந்த முகாமிலிருக்கும் இளம்பெண்கள் இரவுநேரங்களில் வேறு இடங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டாலென்ன? அவர்களில் பலர் அதன்பிறகு திரும்பாமலேயே போனாலென்ன?

பொன்சேகா இந்திய ராணுவத்தைக் கூலிப்படை என்று சொல்வது உண்மையாயிருந்தாலென்ன, பொய்யாயிருந்தாலென்ன? இதைப்பற்றியெல்லாம் எக்குத்தப்பாகப்பேசி, அதன்விளைவாக மைனாரிட்டி அரசு பற்றி கவலைப்படவேண்டிய அவல நிலையைச் சந்திக்க நமக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது! சந்தர்ப்பம் பார்த்து, ‘நம்முடைய மவுனவலி யாருக்குத் தெரியப்போகிறது’ என்று, எழுதுகோலைக் கண்ணீரில் தோய்த்து அழுதுபுலம்புகிறார் கருணாநிதி. இவரது ஆறுமாத கால மவுனம்தான், கொத்துக்குண்டுகளால் செத்துமடிந்த ஒருலட்சம் அப்பாவித் தமிழர்களின் மரணவலிக்குக் காரணமாயிருந்தது என்பதை நாம் மட்டுமே சுட்டிக்காட்டவில்லை. தோழர் திருமாவளவன் போன்றவர்களெல்லாம் சுட்டிக்காட்டிய உண்மை இது.

கருணாநிதியின் மவுன வலியைக் காட்டிலும், அவரது மவுனத்தால் ஏற்பட்ட மரணவலி தான், தாங்க இயலாத சோகத்தில் தமிழனை ஆழ்த்தியது. அந்த மவுனம் பல்லாயிரம் குடும்பங்களை மரணத்தின் மடியில் வீழ்த்திவிட்டு, ஒரே ஒரு குடும்பத்தை மட்டும் பதவி நாற்காலியில் ஏற்றியது என்பது, தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிற விஷயம்தானா? தமிழர் தலைவர் என்று அறிவாலயத்தாலேயே விளிக்கப்படும் கி.வீ.தான் பதில்சொல்லவேண்டும். இன்றுவரை, கருணாநிதியின் மவுனம் முடிவுக்கு வரவில்லை. இனப்படுகொலை புரிந்த ராஜபட்சேக்களைப் போர்க்குற்றவாளி என்று அறிவித்து கழுத்தில் சுருக்குபோட்டு முறுக்க உலகநாடுளெல்லாம் தயாராகின்றன. கருணாநிதியோ, கட்சிச் செலவில் கூலிங்கிளாஸ் எம்.பி.க்களை இலங்கைக்கு அனுப்பி ராஜபட்சேவுக்கு சால்வை போட்டு சந்தோஷப்படுகிறார்.

இனப்படுகொலை புரிந்த அந்த அரக்கனைப் பற்றி ஒரு வார்த்தை விமர்சிக்கவேண்டுமே….! முடியவே முடியாது என்று வாயைப் பொத்திக்கொள்கிறார். பிரபாகரனை விமர்சிக்கவேண்டுமானால், தமிழிலிருக்கிற அத்தனை வார்த்தைகளையும் பாசத்தோடு பொறுக்கியெடுத்துப் பயன்படுத்துகிற முத்தமிழறிஞர், ராஜபட்சே பற்றிப் பேச வேண்டிய நேரங்களில் மட்டும் சத்தமில்லாமல் பதுங்கிவிடுகிறார். பிரபாகரன் என்றால் பாய்வது, ராஜபட்சே என்றால் பதுங்குவது என்கிற இந்த ராஜதந்திரத்தைப் பாராட்டி, வள்ளுவர்கோட்டத்தில் விழாவே எடுக்கலாம். இந்தியாவின் முட்டாள்தனத்தையும்- சீனாவின் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி, எங்கள் சொந்தங்களை நசுக்கி நாசமாக்கிவிட்டு, தமிழர் ரத்தத்தைக் குடித்துக் கூத்தாடுகிறது ராஜபட்சே கும்பல்.

சரத் பொன்சேகா என்கிற ஒற்றைத் தலைவலி மட்டும் இல்லையென்றால், அத்தனை முகாம்களையும் இந்நேரம் மரணமுகாம் ஆக்கியிருப்பார்கள், பொன்சேகாவுடன் சேர்ந்து. இத்தனைக்கும் காரணம், சிங்கள இனவெறி. அதைத்தவிர வேறெதுவும் இந்த பச்சைப் படுகொலைக்குக் காரணமில்லை. இந்த முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்காக, இவ்வளவுக்கும் பிரபாகரன்தான் காரணம் என்று ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி உளறுபவர்களை, பாசத்துக்குரிய அண்ணன் சுப.வீரபாண்டியனும் அன்புத் தோழர் திருமாவளவனும் கூட தனிமைப்படுத்திவிடக் கூடும். ஒரு லட்சம் தமிழரின் படுகொலைக்கும் பிரபாகரன்தான் காரணமென்று கூசாமல் பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்…

பிரபாகரன் என்ற ஒருவன் இல்லாமலேயே போயிருந்தால் ஜே.ஆர்.ஜெயவர்தனேக்களும் மகிந்த ராஜபட்சேக்களும் வடலூருக்கு வந்து வள்ளலாராகியிருப்பார்கள் என்று நினைக்கும் அளவுக்கா புத்தி பேதலித்துவிட்டது உங்களுக்கு!தமிழ் ஈழம் என்கிற கனவு பிரபாகரன் கனவா? இல்லை, அது ஈழத்து காந்தி தந்தை செல்வாவின் கனவு. அகிம்சை வழிகளில் போராடியபோதெல்லாம் அடி உதை பட்டபிறகுதான், நீயும் நானும் சேர்ந்து வாழவே முடியாது என்று முடிவு செய்கிறார் அவர். ‘தனி ஈழம் தான் ஒரே தீர்வு, அதை ஆதரிப்பவர்கள் மட்டுமே எனக்கு வாக்களியுங்கள்’ என்று ஆண்மையுடன் அறிவித்து, காங்கேசன்துறை இடைத்தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெறுகிறார்.

அந்த உண்மையான தமிழனின் கனவுக்கு, செயல் வடிவம் கொடுத்த இன்னொரு உண்மையான தமிழன் பிரபாகரன். செல்வாவின் கனவுக்கு சமாதிகட்டுவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத ராஜீவ் திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்களா, கொள்கைத் தெளிவுடனும் தொலையாத் துணிவுடனும் அந்த சதித் திட்டத்தை எதிர்த்த பிரபாகரன் தமிழனா என்பதை உலகெங்கிலுமுள்ள தமிழ்ச் சொந்தங்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் நிலையில் கோபாலபுரங்கள் புகுந்து குழப்ப முயற்சிப்பது, வகிக்கிற பதவிக்கும் அழகல்ல, கனிகிற வயதுக்கும் அழகல்ல!அடிவாங்கி அடிவாங்கி ரத்தம் சொட்டச் சொட்ட வந்து முறையிடும் எங்கள் சொந்தங்களிடம், அடித்தவனுடன் சமாதானமாய்ப் போய்விடு என்று அறிவுரை சொல்ல இவர்களுக்கு வெட்கமாயில்லையா?

சுயநல அரசியல்வாதிகளாலும், ராஜீவ்காந்தியின் ரா-வாலும் தான் சகோதர யுத்தம் தூண்டப்பட்டது என்பதை இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இவர்கள் மூடி மறைக்கமுடியும்! முறையாகத் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள புலிகள் தவறிவிட்டதாக, குற்றப்பத்திரிகை வாசிக்கும் பெரியவரைப் பார்த்து நேரடியாகவே கேட்கவேண்டியிருக்கிறது… இப்படிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நீங்கள் முறையாகத் திட்டமிடுவீர்கள்…. சந்தர்ப்பம்பார்த்துத் திட்டமிடுவீர்கள்… மருமகனுக்காக பி.ஜே.பி.கூட்டணி, மகன்களுக்காக காங்கிரஸ் கூட்டணி என்று திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கலியுக சாணக்கியர் நீங்கள்.

எங்கள் இனத்தின் அடையாளமாகவே திகழும் எங்கள் பெருமைக்குரிய தோழர்களுக்கு இந்த சாமர்த்தியம் இல்லைதான். அவர்கள், பதவிக்காகக் கொள்கைகளை விடுத்துப் போராடவில்லை பெரியவரே… தங்கள் தாய் மண்ணுக்காக உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள். எதிரிகளுடன் மட்டுமல்ல, இங்கேயிருந்து எழும்பும் துரோகத்துடனும் போராடுகிறார்கள்… பாவம், அவர்களை விட்டுவிடுங்கள். பிரபாகரனின் மனைவி, மக்கள், குடும்பத்தின் கதிதான் என்ன என்று கண்ணீர் சிந்தக்கூட ஒரு தகுதி வேண்டும். ஒரு லட்சம் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பதவி நாற்காலியில் பிசின் போட்டு உட்கார்ந்திருந்தவர்களுக்கு இப்படியெல்லாம் நீலிக்கண்ணீர் சிந்தும் தகுதி இருக்கிறதா? தன்னுடைய மக்களுக்கான போராட்டத்தில் தன் குடும்பத்தோடு பங்கேற்ற அந்த மெய்யான மனிதனைப் பற்றிப் பேசுபவர்கள், குறைந்தபட்சம் மனிதர்களாகவாவது இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பது நியாயமா இல்லையா?

ராஜபட்சேவின் போர்க்குற்றத்தையும் கண்டிக்கமாட்டீர்கள், கூலிப்படை என்று இந்தியாவைச் சிறுமைப்படுத்தும் பொன்சேகாவையும் கண்டிக்கமாட்டீர்கள், பிரபாகரனை மட்டும் தான் கண்டிப்பீர்கள் என்றால் நீங்கள் யார்? உங்களுடைய உண்மையான நோக்கம் என்ன? ஒரு இனத்தின் தன்மானத்தைக் காக்க உண்மையாகவே போராடினால் செத்துச் சுண்ணாம்பாகிவிடுவாய் என்று எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறீர்களே, ஏன்? உங்களுடைய குரலின் எஜமானர் யார்? சம்பந்தப்பட்டவர்களிடம் இந்தக் கேள்விகளுக்கு பதிலிருந்தால், அதை வெளியிடும் துணிவிருந்தால் பேசட்டும். இந்தியாவின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை எழுப்ப பொன்சேகாவால் முடிகிறது, அதற்கு பதில் சொல்ல இந்தியாவால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் தான் நமது இந்த தார்மீகக் கோபத்துக்குக் காரணம்.

இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டை எவ்வளவு உறுதியுடன் எதிர்கொண்டிருக்க வேண்டும்…. எப்படித் திருப்பி அடித்திருக்கவேண்டும்! இதுகூடத் தெரியாதவர்களா நம்மையும் நம் ராணுவத்தையும் வழிநடத்துகிறார்கள்! மானம் ரோஷம் சூடு சொரணை எதுவுமே இல்லாத நாடா என்னுடைய தாய்நாடு! இந்தத் தன்னிரக்கத்தில், மெட்ரோ வாட்டர் லாரியில் சிக்கி நசுங்கிய பூனைக்குட்டியாய்த் துடிக்கிறது மனசு. தன்னுடைய போர்க்குற்றங்களுக்காக, தான் செய்த இனப் படுகொலைக்காக, தூக்குமேடைக்குச் செல்லும் பாதையில் நின்று கொண்டிருக்கிற ஒரு கொடுங்கோலனைக் காப்பாற்றுவதற்காகவா மனைவி மக்களைப் பிரிந்து, தாம்பத்ய சுகம் மறந்து, கொட்டுகிற மழையிலும் உறைகிற குளிரிலும் இந்திய வீரர்கள் பயிற்சி எடுத்தார்கள்? தாய் மண்ணைக் காக்கத் தங்கள் உயிரையும் தத்தம் செய்யத் தயாராயிருக்கும் இந்த வீரர்களைக் கூலிப் படையாக்கி கேவலப்படுத்த முயன்றது யார்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய கடமை மவுன சாமியார் மன்மோகனுக்கு இருக்கிறது. இரண்டே வழிகள்தான் இருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு. கொலைகார ராஜபட்சேவைக் காப்பாற்றும் கூலிப்படையாக எங்கள் சகோதரர்களைப் பயன்படுத்த இந்தியா முன்வந்திருந்தால், எவருடைய கட்டாயத்தின்பேரில் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய் என்று கூறினால், இப்படியொரு அபாண்டமான பழியை இந்தியாவின் மீது சுமத்தும் சரத் பொன்சேகா மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த இரண்டையும் செய்யாமல், கருணாநிதியைப்போல் அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருந்தால், இந்தியா ஆடுவது கபட நாடகம் என்பது அம்பலமாகிவிடும். நாலைந்து மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறியதற்கு என்ன காரணம்? வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை ஒரு லட்சம் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்ற பெருமை தன்னையே சாரும் என்கிறார் பொன்சேகா. ‘நான் மட்டும் அனுமதி கொடுத்திராவிட்டால் உன்னால் எப்படிக் கொன்று குவித்திருக்கமுடியும்’ என்கிறார் ராஜபட்சே. எவன் உண்மையான கொலைகாரன் என்று எடைபோட்டுப் பார்த்து அவனை அரியணையில் அமர்த்தக் காத்திருக்கிறார்கள், புததனின் தோழர்கள்..

இத்தனைக்கும் போரில் இலங்கை பெற்றதாகச் சொல்லப்படும் வெற்றி, இந்தியா முதலான 20 நாடுகள் போட்ட பிச்சை. வீரமோ லட்சியமோ அங்கே வெற்றிபெறவில்லை. ஆயுதங்கள் வெற்றிபெற்றன. ஒருதரப்புக்கு ஆயுதம் வருவதைத் தடுத்து, இன்னொரு தரப்புக்கு ஆயுதங்களை வாரி வழங்கி, அடாவடியாக அதர்மமாக 20 நாடுகள் உருவாக்கிய வெற்றி. அதைத் தான் தன் வெற்றி என்றது இலங்கை. அடுத்தவனின் குழந்தைக்குத் தன் இனிஷியலைப் போட முயலுகிற ஏதோ ஒன்றின் நிலையில் இருந்து அப்படிப் பேசியது. இப்போது இன்னும் ஒருபடி மேலேபோய், என் இனிஷியலைத் தான் போடவேண்டும் என்கிறான் பொன்சேகா. இல்லை, இல்லை, என் இனிஷியல்தான் என்கிறான் ராஜபட்சே. வெட்கக்கேடு! ராஜபட்சேவுக்கும் பொன்சேகாவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன?

இந்த இரண்டு மிருகத்தில் எந்த மிருகம் பதவிக்கு வரலாம் என்று பிரணாபை அனுப்பி பல்ஸ் பார்க்கிறது இந்தியா. இந்தியாவின் துணையுடன் தனது ரத்தவெறியைத் தணித்துக்கொண்ட மகிந்த, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கிண்டலடிப்பதைக் கூட இந்தியா பொருட்படுத்தவில்லை. 110 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் நிதியமைச்சர், ஒரு சுண்டைக்காய் நாட்டு அதிபரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தாராம். இந்தியாவுக்கு கடுகளவாவது சுயமரியாதை இருக்கிறதா இல்லையா? சுயமரியாதை என்று ஒன்று இல்லாததால்தான், இருபத்தாறாவது மைலில் நமது தொப்புள்கொடி உறவுகள் கொன்று குவிக்கப்பட்டபோது, பெட்டைப் புலம்பலோடு நம்முடைய முனகல்கள் முற்றுப்பெற்றன. இன்றைக்கு, கூலிப்படை என்று நம்மைச் சொல்வதைப் பார்த்து ஆத்திரப்பட முடியவில்லை. இந்த அளவுக்கு நாம் சுயமரியாதை இழந்தது, 1987க்குப் பிறகுதான். இந்திய ராணுவத்தைக் கூலிப்படையாக்கிக் கேவலப்படுத்தும் அத்தியாயம் அதற்கு சில ஆண்டுகளுக்குமுன்பே ஆரம்பித்துவிட்டது என்றாலும், அப்போதுதான் அது ஆடி அடங்கியது. அந்த வெட்கங்கெட்ட வரலாற்றை அடுத்தவாரம் பார்ப்போம்.

-புகழேந்தி தங்கராஜ்

(தமிழக அரசியல்- வாரஇதழில் 20.11.09 வெள்ளிக்கிழமை வெளியான கட்டுரை)

(Visited 324 times, 11 visits today)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக