நாமக்கல்:நாமக்கல் அருகே, தனக்கு உணவு கொடுத்தவரின் கடையில், குரங்கு வேலை செய்வது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகே, பிரசித்தி பெற்ற நைனாமலை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் நைனாமலையை சேர்ந்த தனம் என்ற பெண், கட்டிலில் கடை விரித்து பூஜை பொருள் விற்கிறார்.
இந்நிலையில், ஒரு குரங்கு தனம் கடையை அடிக்கடி சுற்றி வந்தது. அந்த குரங்கிற்கு, பழம், பொரி போன்றவற்றை தனம் தொடர்ந்து கொடுத்து வந்தார்.இதற்கு, கைமாறு செய்ய நினைத்த குரங்கு, தனத்துக்கு உதவியாக அவரது கடையை பார்த்துக் கொள்கிறது. தனம் சொல்லும் வேலையையும் செய்கிறது. குரங்கு பற்றி தனம் கூறியதாவது:நைனாமலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கில் குரங்குகள் உள்ளன.
மலையில் எந்த உணவும் கிடைக்காததால், இக்குரங்குகள் மலையடிவாரத்தில் சுற்றித்திரிகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், குரங்குகளுக்கு பழம் உள்ளிட்ட தின்பண்டங்களை வழங்குவர். எனது கடைக்கு, சில ஆண்டுக்கு முன், பெண் குரங்கு ஒன்று வந்தது. அதற்கு நான் பழம், பொரி வழங்குவேன்.
அதை சாப்பிட்ட குரங்கு, கடையை கவனமுடன் பார்த்துக் கொள்ளும். கட்டில் மேல் அமர்ந்து கொண்டு, மற்ற குரங்குகள், பொருட்களை எடுக்காதவாறு பாதுகாக்கும் . கடைக்கு பொருள் வாங்க வருபவர்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாது. அவர்களுக்கு தேவையான பொருளை எடுத்துக் கொடுக்கும்.
இந்த குரங்குக்கு லட்சுமி என பெயர் வைத்துள்ளேன். லட்சுமி அவ்வப்போது, அருகே உள்ள எனது வீட்டிற்கும் வரும். வெளியூர் சென்றுவிட்டு இரண்டு, மூன்று தினங்கள் கழித்து வந்தால், பாசமுடன் என் மீது தாவி கொஞ்சும். நாய் ஒன்றையும் வளர்க்கிறேன். நாயும், குரங்கும் நட்புடன் பழகுகின்றன. மாலை வரை இங்கு கடை வைத்திருப்பேன். அதுவரை, லட்சுமி என்னுடன் இருக்கும்; பின், அதன் இனங்களோடு சென்றுவிடும். இங்கு நூற்றுக்கணக்கில் குரங்குகள் இருந்தபோதிலும், "லட்சுமியை' நான் சரியாக அடையாளம் கண்டுவிடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக