உதகை, அக். 25: இலங்கையில் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களில் வாழவே முடியாத சூழல் உள்ளதாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். பெண்களுக்கான அரசியல் பயிலரங்க நிறைவு விழா உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கனிமொழி, செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னமும் பிரச்னைகளுக்கு மத்தியிலேயே உள்ளனர். இதை முதலில் சீர் செய்ய வேண்டும். அவர்கள் அந்த முகாம்களில் வாழவே முடியாத சூழல் உள்ளது. அவர்கள் நாட்டிலேயே அகதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டுள்ளனர். இம்மக்களுக்கு ஏராளமான உதவிகள் தேவைப்படுகின்றன. அவற்றை இப்போதே செய்வதைவிட அவர்களை அங்கிருந்து வெளியேற்றி வெளியில் குடியேற்றம் செய்த பின்னர் தேவையான உதவிகளை வழங்கலாம். குறிப்பாக விவசாயம் போன்றவற்றிற்கு அதிகளவில் உதவிகள் தேவைப்படுகின்றன. இதுவரை 58 ஆயிரம் பேர் முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளோரையும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் டிசம்பர் மாதத்திற்குள் குடியேற்றம் செய்துவிட வேண்டும். அவர்களது சொந்தப் பகுதிகளில் மருத்துவ வசதிகள், தொழில் வாய்ப்புகள் போன்றவற்றிற்கும் உதவ வேண்டும். இந்திய எம்பிக்கள் குழுவினர் பார்வையிட்ட முகாம்களோடு அங்கு தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள எந்த முகாமும் சிறப்பாக இல்லை என்றார்.
கருத்துக்கள்
இதை இராசபக்சேவிடம் தெரிவித்தாரா? அறிக்கையில் இவ்விவரம் சேர்க்கப்பட்டுள்ளதா? இந்த நிலைக்குக் காரணமான காங்கிரசு அதன் கூட்டாளிகள், அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுகிறார்? இரக்கப்படுவதுபோல் தொடர்பில்லாத இடத்தில் கூறிச் செய்தித்தாளி்ல் இக்கருத்து வந்து விட்டால் மட்டும் போதுமா? பார்த்து வந்த உண்மையான அவலங்களை உலகிற்கு உரைத்து, போலியான அறிக்கை மூலம் சிங்கள அரசிற்குப் பன்னாட்டு உதவிகள் கிடைக்க இருப்பதைத் தடுத்து, உடனே போர்க்குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினால் பாராட்டலாம். இல்லையேல் பயனில்லை. இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/26/2009 3:16:00 AM
10/26/2009 3:16:00 AM