செவ்வாய், 27 அக்டோபர், 2009

இன்னும் ஏன் மௌனம்...?



கச்சத்தீவு பாக்நீரிணைப்பில் பாம்பன் தீவுக்கு அருகில் உள்ளது. இத் தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசி விக்டோரியா மகாராணி ஆட்சியின் ஆணவமும் இதை உறுதிப்படுத்துகிறது. இந்திய நாடு விடுதலை பெற்றதும் 1949-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதும், ராமேஸ்வரம் கிராம வருவாய்த்துறை அடங்கலில் 285 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சத்தீவு பயிர் செய்யப்படாத அரசுப்புறம்போக்கு நிலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை 1948-ல் தான் சுதந்திரம் பெற்றது. இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை, நம்மிடம் அனுமதி பெறாமலேயே, இலங்கை அரசு ராணுவப் பயிற்சித் தளமாகப் பயன்படுத்தத் துவங்கியது. இலங்கை அரசின் அத்துமீறலைக் கண்டித்து 1956-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே. அனந்த நம்பியார் பேசினார். பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு தலையிட்டு, சின்னஞ்சிறு தீவுப் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதாகவும் பெருந்தன்மையுடன் தெரிவித்தார். கச்சத்தீவு பற்றி இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து முடிவில் ஜூன் 26-ம் தேதி 1974-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்களும், அந்தோணியார் கோவில் வழிபாட்டுக்குச் சென்று வருபவர்களும் கச்சத்தீவுக்குச் சென்றுவர முழு உரிமை உண்டு. இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதியோ பெற வேண்டிய தேவையில்லை. கச்சத்தீவுக்கு குறிப்பிட்ட எல்லை வகுத்து இலங்கை அரசுக்கு உரிமை வழங்கப்பட்டது. 1974-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் பி.கே. மூக்கையாத் தேவர், இரா. செழியன், நாஞ்சில் மனோகரன், எம். கல்யாணசுந்தரம், பழனியாண்டி, ஷெரீஃப் ஆகிய அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டித்துப் பேசியுள்ளனர். சிலர் வெளிநடப்பும் செய்தார்கள். பி.கே. மூக்கையாத் தேவர் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்தில் பேசியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஜூலை 22-ல் பிரதமர் இந்திரா காந்திக்குப் பகிரங்கக் கடிதமும் எழுதினார். 1. இராமேஸ்வரம், 2. குத்துக்கல், 3. புள்ளிவாசல், 4. முசல்தீவு, 5. பூமறிச்சான், 6. முல்லித்தீவு, 7. மணலித்தீவு, 8. வாலித்தீவு (கச்சத்தீவு), 9. அப்பாத்தீவு, 10. நல்லதண்ணீர்தீவு, 11. உப்புத் தண்ணீர்தீவு - இத்தனை தீவுகளும் ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானவை (இராமநாதபுரம் மானுவல் 1891). இந்தியாவுக்கு எதிரான உலகப் பெரிய நாடுகள் திட்டமிட்டிருக்கும் சதிகளைக் குறிப்பிட்டு எச்சரித்திருக்கிறார். இந்தியாவைச் சுற்றிவளைத்து இந்துமகா சமுத்திரத்தில் டியூகோ - கார்ஷியா தீவில் அமெரிக்க ராணுவ முகாம் இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இறுதி வேண்டுகோளில், இந்திய நாடு தனது எல்லையை விரிவுபடுத்தும் நாடு அல்ல. அதே நேரத்தில் அண்டை நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து திருப்திப்படுத்தும் கொள்கை எந்த வகையிலும் நாம் செயல்பட வேண்டும். நீண்டகால நலன் கருதி ஸ்ரீலங்கா அரசுடன் செய்து கொண்டுள்ள கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் எழுதி இருக்கிறார். India is not expansionist. At the same time, the policy of appeasement won’t help us in anyway. We should act like a mature nation. பி.கே. மூக்கையாத் தேவர், பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் கொடுத்திருக்கும் எச்சரிக்கை இன்றும் பொருத்தமாக உள்ளது. 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இந்திரா காந்தியும், ஸ்ரீமாவோ பண்டார நாயகாவும் கையெழுத்திட்டார்கள். தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததைக் கண்டித்து எல்லாக் கட்சிகளும் எதிர்த்தன. மீனவர்களின் உரிமை பாதுகாப்பதற்கு உத்தரவாதம் வேண்டுமென்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக இந்திய, இலங்கை அரசுகளின் வெளியுறவுத்துறைச் செயலாளர்கள் கையெழுத்திட்டு 1976-ல் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதல் ஒப்பந்தத்தில் மீனவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகளெல்லாம் மறுக்கப்பட்டிருந்தன. அவசர நிலை அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததால், எதிர்ப்பு வலுப்பெறவில்லை. சாமி வழங்கிய வரத்தைப் பூசாரி மறுத்துவிட்ட பழமொழியைப் போல் இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் ஒப்பந்தத்தை வெளியுறவுத்துறை அதிகாரிகள் மறுதலித்து விட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தாலும் கடற்படை அதிகாரிகளாலும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக 1983-ல் துவங்கி இன்றுவரை நாள்தோறும் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. * 400-க்கு மேல் மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். காணாமல் போனவர்கள் 95 பேர். * 12,000-க்கும் அதிகமான மீனவர்கள் காயமடைந்தார்கள். * ஏறத்தாழ 3,000-க்கு மேலாக செயல்பட முடியாதவாறு ஊனமடைந்தார்கள். * ஆயிரம் முறைக்கும் அதிகமாகத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டன. * ரூ. 300 கோடி மதிப்புள்ள மீன்வலைகள், படகுகள், மீன்பிடி கருவிகள் அழிக்கப்பட்டன. இலங்கை ராணுவத் தாக்குதலுக்குப் பயந்து மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த நாள்களில் ஏற்பட்ட இழப்புகள் பெரும் இழப்பாக உள்ளது. எல்லா வழிகளிலும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி. ராஜா, கச்சத்தீவு பற்றி பலமுறை மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போதெல்லாம், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குள் அனுமதிக்கப்படுவார் என்று அமைச்சர் பதில் கொடுத்தார். ஆனால், நடைபெறவில்லை. விடுதலைப் புலிகளுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருள்கள் இந்திய மீனவர்களால் கடத்தப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்கள். இலங்கை, இந்தியக் கடற்படையினர் கூட்டாகச் சேர்ந்து இந்திய மீனவர்களை வழிமறித்துச் சோதனையிட்டார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக வெற்றி வீராப்போடு உலக மனித உரிமை அமைப்புகளுக்கு பதில் கூறும் ராஜபட்ச. தமிழ் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்திய அரசும் கவலைப்படுவதாக இல்லை. நாள் தவறாமல் இலங்கை ராணுவம் தமிழ் மீனவர்களைத் தாக்கும் செய்தி வந்துகொண்டே இருக்கிறது. மீனவர்களின் வலைகள் கிழித்தெறியப்படுகின்றன. தனுஷ்கோடி, தொண்டி, கோட்டைப்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய 500 கடற்கரை கிராமங்களிலும் பதற்ற நிலை நீடித்துத் தொடர்கிறது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பதாகத் தமிழக மீனவர்கள் கண்காணிக்கப்பட்டார்கள். இப்போது கச்சத்தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதாகத் தாக்கப்படுகிறார்கள். இந்தியக் கடற்கரைப் பாதுகாப்புப் படையினர் இந்தியத் தமிழ் மீனவர்களைப் பாதுகாக்க வராமல் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கண்டன அறிக்கை விடுகின்றன. தமிழக முதல்வரும் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். மத்திய அரசு மனமிறங்குவதாகத் தெரியவில்லை. மாறாக இலங்கையின் மறுசீரமைப்புக்கும், ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் ஈழமண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளைத் தோண்டி எடுப்பதற்கான கருவிகளை வழங்குவதிலும் ஓடோடி உதவி செய்து வருகிறது இந்தியா. இந்திய அரசின் உதவிகள் ஈழத்தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க எந்த உத்தரவாதமும் இல்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை? கச்சத்தீவு பிரச்னைக்கு இறுதித்தீர்வு காணப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான வாழ்வுரிமை வழங்கப்பட வேண்டும். கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இல்லையேல் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவது சர்வதேச விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று சிலரால் வாதிக்கப்படுகிறது. ஆனால், ஜெயவர்த்தனே - ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தை இலங்கை மீறிவிட்டது. சாஸ்திரி ஒப்பந்தம் சரியாக அமலாக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் இன்னும் நாடற்றவர்களாக நீடிக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைகளையும் ராஜபட்ச துச்சமாகக் கருதுகிறார். செஞ்சிலுவைச் சங்கத்தின் விதிகளையும் புறக்கணித்து வருகிறார். 21-ம் நூற்றாண்டின் ஹிட்லராக ராஜபட்ச மறுபிறவி எடுத்திருக்கிறார். கச்சச்தீவுப் பிரச்னை மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும், இலங்கைத் தீவில் நடக்கும் தமிழின ஒழிப்பும், மனித உரிமை மீறலும், மனித குலத்துக்கே சவாலாகவும் உள்ளவை அல்லவா? இலங்கைக்கும், இந்தியாவின் தென்கோடி கடற்கரைக்கும் 18 கிலோ மீட்டர் தொலைவுதான். கூப்பிடும் தூரம்தான். அக்கரையில் வாழும் மக்களுக்கு ஆறுதல் கூறக்கூட நமக்குத் துணிச்சல் வரவில்லை. கழிவிரக்கம் போதாது. காந்தியடிகளின் அமெரிக்க சீடர் மார்ட்டின் லூதர்கிங் வேதனையோடு கூறிய பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது. பெரும்பான்மை மக்களின் மௌனமே சிலரின் காட்டுமிராண்டித்தனமான கொடுமையைவிட மிகமோசமான மானிடப் பேரவலமாகும். (The ultimate tragedy of mankind is nor the brutality of the few but the absence of many).
கருத்துக்கள்

அருமையான கட்டுரை. ஆனால் தெரிந்தே அவலங்களை உண்டாக்கும் அறவழி யற்ற மத்திய அரசு ஒன்றும் செய்யாது. இங்குள்ள கட்சிகள் எக்காரணங் கொண்டும் காங்கிரசுடன் சேருவதில்லை என்ற உறுதிப்பாட்டை எடுத்தால் சிந்திக்கத் தொடங்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பும் இல்லை. அண்ணன் எப்பொழுது தொலைவான்? திண்ணை எப்பொழுது காலியாகும்? என்ற எதிர்பார்ப்பிலேயே கட்சிகள் உள்ளமையால் காங்கிரசு தான்தோன்றித்தனமாகத்தான் நடக்கும். எனவே, மக்களை ஒன்று திரட்டி மக்களுக்கு எதிரான போக்கையே கையாளும் காங்கிரசைத் தமிழ் நாட்டில் இருந்தே ஓட ஓட விரட்டினால்தான் அதற்கும் புத்தி வரும். அடுத்து வருபவர்க்கும் அறிவு வரும். கச்சத் தீவும் நமக்கு வரும். தமிழக மீனவர்களுக்கும் பாதுகாப்பு வரும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2009 6:31:00 AM

Aiya Nalla Kannu, India does not consider Tamils as Indians, but Tamils. Good lucky with your plea.

By Suresh M
10/27/2009 2:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக