அரியலூர், அக். 24: மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியிருப்பது, கூட்டணி நாகரிகத்துக்கு முரணான செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். அரியலூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசில், முக்கியமான அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி திமுக. இந்நிலையில், மத்திய அமைச்சர் ராசா அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்குத் தெரியாமல் இந்த சோதனைகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. இந்தச் செயலை கூட்டணி நாகரிகத்துக்கு முரணான செயலாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. இது ஊழல் தொடர்பான விசாரணைக்கு எதிரான கருத்தல்ல. அரசியல் உள் நோக்கத்தோடு, செயல்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த விமர்சனத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன் வைக்கிறது. இலங்கையில் ஈழத் தமிழர்களின் நிலையை கண்டறிவதற்காக இலங்கை சென்று வந்த எம்.பி.க்கள் குழு, தனது ஆய்வறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், சோனியா காந்தியிடமும் அளிக்கச் சென்றபோது, என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளி காரணமாகவே என்னை, டி.ஆர். பாலு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கனிமொழி தெரிவித்தார். திட்டமிட்டு, என்னைத் தவிர்த்ததாக நான் கருதவில்லை. தங்கக் கூண்டாக இருந்தாலும், கிளியை அடைத்து வைக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். எத்தனை வசதிகள் இருந்தாலும், ஈழத் தமிழர்களை முகாமில் அடைத்து வைத்திருக்கக் கூடாது. அடைத்து வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். ராஜபக்ஷவை போர் குற்றவாளியாக, அறிவிக்க வேண்டும் என்பது, விடுதலைச் சிறுத்தைகளின் தனிப்பட்ட கருத்தாக வலியுறுத்துகிறோம். இதுதொடர்பாக, சர்வதேச நாடுகள் மௌனம் கலைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் செயல்பாடு வேதனை அளிக்கிறது. இதைக் கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. ஆளும் கட்சியோடு, எந்த விதத்திலும் மாநில உரிமைகளை மீட்பதற்கு ஒத்துழைக்காமல் அதிமுக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து அவதூறு பரப்புவது தமிழர் விரோத நடவடிக்கையாகும் என்றார் திருமாவளவன்.
கருத்துக்கள்
பூ! இவ்வளவுதானா? ஏதோ திமுக குழுவினர் தில்லிச் சந்திப்பில் தன்னைப் புறக்கணித்தமையைத்தான் கூறுகிறாரோ என நினைத்தேன். சரி! சரி! பெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? தன்மானத் தமிழனைக்காண முடியா வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2009 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/25/2009 3:06:00 AM