செவ்வாய், 27 அக்டோபர், 2009

கப்பல் துறை மீது ஜி.கே வாசன் பாராமுகம்?



நமது நிருபர்திருவொற்றியூர், அக். 26: கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பதவி ஏற்றதிலிருந்து துறை ரீதியாக எவ்வித ஈடுபாடும் இன்றி இருப்பதாக பல்வேறு தரப்பிலும் தெரிவிக்கின்றனர். கப்பல்துறை மத்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றாகவும், கோடிக் கணக்கில் "பணம்' புரளும் துறையாகவும் இருப்பதால் இத்துறைக்கு அமைச்சராக வர கட்சிகளிடையே போட்டி இருந்து வந்தன. 2004-ல் டி.ஆர்.பாலுவுக்கு கப்பல்துறை ஒதுக்கப்படவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என திமுக தலைமை அறிவித்தது. பின்னர் இத்துறை தி.மு.க.வுக்கு அளிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க தரப்பில் பல காரணங்கள் கூறப்பட்டாலும் 'பணம்' கொழிக்கும் துறை என்பதால்தான் தி.மு.க பிடிவாதம் செய்தது என அரசியல் பார்வையாளர்கள் கூறினர். இதே போல் மே 2009-ல் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மீண்டும் கப்பல் துறையை திமுக கோரியது. ஆனால் காங்கிரஸ் விடாப்பிடியாக மறுத்துவிட்டது. பின்னர் கப்பல் துறை அமைச்சராக ஜி.கே.வாசன் நியமிக்கப்பட்டார். வாசன் இத்துறையைக் கேட்காவிட்டாலும் அவரின் முக்கியத்துவம் கருதி கப்பல்துறை அவருக்கு வழங்கப்பட்டதாக கருத்து எழுந்தது. இதில் வாசன் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆதரவாளர்கள் ஏமாற்றம்: 7,517 கி.மீ தூரம் கடற்கரையைக் கொண்ட இந்தியாவில் மும்பை, கோல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி, காண்ட்லா, மங்களூர், கொச்சி உள்ளிட்ட 12 பெரிய துறைமுகங்கள் கப்பல் துறையின் ஆளுகையில் உள்ளன. இந்திய கப்பல் கழகம், கடல்சார் பல்கலைக் கழகம், சேது சமுத்திர திட்ட கழகம், கப்பல் கட்டும் நிறுவனங்கள் என பத்துக்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்களும் உள்ளன. இவைகளில் அறங்காவலர்களாக அல்லது உறுப்பினர்களாக தாங்கள் நியமிக்கப்படலாம் என வாசன் ஆதரவாளர்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால் வாசன் பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரை ஒருவரையும் இதுபோன்ற பதவிகளில் நியமிக்கவில்லை. சென்னை துறைமுக டிரஸ்டிகளாக தி.மு.க.வைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர். இவர்களை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. 'அதிகாரம்' மூலம் பெற்ற பல ஒப்பந்தங்களையும் வாசனால் ரத்து செய்யமுடியவில்லை என்கிறார் காங்கிரஸ் முக்கியப் பிரமுகர் ஒருவர். பாராமுகத்தில் வாசன்: அமைச்சராகப் பதவி ஏற்ற வாசன், கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு தலா ஒரு முறை சென்றுள்ளார். இது தவிர நாட்டின் எந்த ஒரு துறைமுகத்துக்கும் பதவி ஏற்றதிலிருந்து செல்லவில்லை. சென்னைத் துறைமுகத்துக்கு வருமாறு அழைத்தும் இதுவரை ஒருமுறைகூட வரவில்லை. எந்த ஒரு உயர் அதிகாரியும் வீட்டுக்கு வரக் கூடாது, துறைமுகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட எவரும் தனது சொந்த வேலைக்கு உபயோகப்படுத்தக் கூடாது என வாசன் கூறிவிட்டாராம். துறைமுக வாகனங்கள், விருந்தினர் விடுதிகள் உள்ளிட்டவற்றையும் வாசன் உபயோகிப்பது இல்லை எனத் துறைமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கப்பல் துறையில் தவறுகளைக் களைந்து, சீர்படுத்தி சிறந்த நிர்வாகத்தை இளைஞரான வாசன் தர வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாகும். பின்னணி காரணங்கள் இது குறித்து கப்பல் துறை வட்டாரம், அமைச்சர் ஆதரவாளர்களிடையே கிடைத்த தகவல்கள்: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வணிகம் 95 சதவீதம் துறைமுகங்கள் மூலம்தான் நடைபெறுகிறுது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் துறையில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற ஆர்வம் அமைச்சர் வாசனுக்கு முதலில் இருந்தது உண்மை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான துறைமுகங்களில் 'அதிகார மையங்கள்' செய்துள்ள பதவி நியமனங்கள், முறைகேடான ஒதுக்கீடுகள் என எங்கு பார்த்தாலும் 'கோடிகளாக'வே புரளுவதை பின்னர்தான் அவர் தெரிந்து கொண்டார். இதேபோல் சென்னைத் துறைமுக தலைவர் பதவியை நியமிப்பதில் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்ட போட்டியால் இப்பதவி இதுவரை நிரப்பப்படவில்லை. தனது தந்தை ஜி.கே.மூப்பனாரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த வாசன் எவ்வித புகாருக்கும் ஆளாகக்கூடாது, குடும்ப பாரம்பரியத்திற்கு பங்கம் ஏற்படக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். ஆனால் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என புரையோடிப்போனது கப்பல் துறை. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் கப்பல்துறையைத் தந்துவிட்டு எளிய துறையைப் பெற்றுக்கொண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்று கட்சியில் தனது செல்வாக்கினை தக்க வைத்துக்கொள்வதுதான் வாசனின் விருப்பம் என்று அவருக்கு நெருக்கமாக உள்ள சிலர் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

எந்த ஓர் உயர் அதிகாரியும் வீட்டுக்கு வரக் கூடாது, துறைமுகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட எவரும் தனது சொந்த வேலைக்கு உபயோகப்படுத்தக் கூடாது என வாசன் கூறிவிட்டாராம். துறைமுக வாகனங்கள், விருந்தினர் விடுதிகள் உள்ளிட்டவற்றையும் வாசன் உபயோகிப்பது இல்லை எனத் துறைமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்;எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது உண்மையெனில் வாசனைப் பாராட்டுவோம். மேலும் ஒரு துறை பணம் கொழிக்கும் துறையா இலலையா என்பது பொறுப்பில் உள்ளவர்களின் செயல்பாட்டைப் பொறுத்ததே என்னும் உண்மையை இச் செய்தி உணர்த்துகின்றது. கல்லில் நார் உரிப்பவர்கள் எத்துறை யிலும் பணத்தைக் கறந்துவிடுவர். அவ்வாறு இல்லாமல் ஒதுங்கிப் போகும் வாசனைப் பாராட்டுவோம். ஆனால், தமிழர் நலனில் ஒதுங்கிப் போகும் போக்கைக் கைவிட வேண்டும். ஈழத் தமிழர்கள் விடியலைக் காண உதவ வேண்டும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு உடந்தையாய் இருப்பதும் ஊழல்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓங்குக நேர்மை! வெல்க தமிழ் ஈழம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2009 5:27:00 AM

என்ன கொடும சார் இது, இந்த மாதிரி தண்ட தீவட்டிகளுக்கெல்லாம் மத்திய அமைச்சர் பதவி.

By Giridharan
10/27/2009 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக