சனி, 31 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 151: பிரித்தாளும் சூழ்ச்சி!



பிரபாகரன் தனது தளபதிகளுடன்...
கிட்டுவும், மொகைதீனும் கையெழுத்திட்டு உருவான உடன்படிக்கை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. ஆளும் தரப்பினர், தமிழர்-முஸ்லிம் இடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடிக்க ஆரம்பித்தனர். அமைதிப்படையும், விடுதலைப் புலிகளும் நேரடியாக மோதிய சூழ்நிலையில், தமிழர்கள்-முஸ்லிம்கள் இடையே முரண்பாடுகளும் வளர்த்து விடப்பட்டன. இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில், "முஸ்லிம் காங்கிரஸ், ஜிகாத் அமைப்பினருக்கு அமைதிப் படை ஆயுதங்களை வழங்கி புலிகளுக்கு எதிராகப் போராடும்படி தூண்டியது. ஆனாலும், புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்கள் நடைபெற அனுமதிக்கவில்லை' (தமிழீழம் சிவக்கிறது பக். 345) என்றும் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியபோது, பிற போராளி குழுக்களுக்கும், மறுபுறம் ஜிகாத் இளைஞர்களுக்கும் ஏராளமான ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கி விட்டுத்தான் சென்றது' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் நோக்கம் இவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினாலும், புலிகள் தொடர்ந்து நெருக்கடியைச் சந்திக்க வேண்டும் என்பதே ஆகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதே நிலையைத்தான் பிரேமதாசா அரசும் விரும்பியது. பிரேமதாசா-புலிகள் பேச்சு முறிவடைந்து யுத்தம் பெருமளவில் மூண்ட நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் "பொத்துவில்' என்கிற இடத்தில் தமிழர்-முஸ்லிம்களிடையே பெரும் மோதல் எழுந்தது. இதில் தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. பொத்துவிலில் தொடங்கிய மோதல் அம்பாறை மாவட்டம் முழுவதும் விரிவடைந்தது. இதனால் தமிழர்கள் அந்தப் பகுதியிலிருந்து விரட்டப்பட்டார்கள். இவ்வாறாக 75 ஆயிரம் தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர நேர்ந்தது. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்ததாகவும் தகவல் உள்ளது. "நூற்றுக்கும் மேற்பட்ட பழந்தமிழ்க் கிராமங்கள் பல அடியோடு அழிக்கப்பட்ட நிலையில், பாண்டிருப்பு, காரைத்தீவு, கோமாரி, தம்பிலுவில், திருக்கோவில் கிராமங்களில் மட்டுமே தமிழ் மக்கள் வசிக்கிறார்கள்' (தமிழீழம் சிவக்கிறது-பழ.நெடுமாறன்-பக். 352). இதன் தொடர் நிகழ்வாக, முஸ்லிம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து, "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலில் சி.புஷ்பராஜா வெளியிட்டுள்ளார். அந்தத் தகவலின்படி 1990-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி குருக்கள் மடத்திலும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி காத்தான்குடி பள்ளிவாசலிலும், அதே ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஏறாவூரிலும் ஆக மொத்தம் 271 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அவர் எழுதியுள்ளார். "ஈழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் மாபெரும் தவறுதான்' என்று குறித்துள்ள புஷ்பராஜா, தான் அங்கம் வகித்த ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர் அமைதிப்படையினருடன் சேர்ந்து 1987-இல் கல்முனையிலும், 1989-இல் சம்மாந்துறையிலும் முஸ்லிம் மக்களுக்குச் செய்த கொடுமைகளையும் குறிப்பிட்டிருக்கிறார் (பக்.502). யாழ்ப்பாணக் குடா நாட்டிற்குள், புலிகளின் அரண்களையும் கொரில்லா நடவடிக்கைகளையும் ஜிகாதி இளைஞர்களில் சிலர் சிங்களப்படைக்குக் காட்டிக்கொடுத்து வந்தனர் என்றும், இந்த ஜிகாதி இளைஞர்களுக்கு யாழ் நகர முஸ்லிம்கள் புகலிடம் அளித்தனர் என்றும், இதனைக் கண்டித்த புலிகள் இந்தப் போக்கைக் கைவிடுமாறும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த எச்சரிக்கைக்கு பயன் ஏற்படாத நிலையில், ஜிகாதி இளைஞர்களின் துப்பு, சிங்களப் படையின் தாக்குதலைக் கடுமையாக்கியது. வேறு வழியின்றி விடுதலைப் புலிகள் முஸ்லிம் வட்டாரங்களில் வாழ்ந்தோரை குறுகிய காலக்கெடுவில் யாழ்குடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டனர் (புலிகள் அறிக்கை). பலத்த விமர்சனத்துக்கு ஆளான இந்த உத்தரவு குறித்து பி.பி.சி. வானொலிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அளித்த பேட்டியில், ""1990-ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக் கலவரம் வெடித்துப் பெரும் தொகையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பைக் கருதி நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தாற்காலிகமாக வெளியேறும்படிக் கேட்டுக் கொண்டோம். ஆயினும், யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்'' என்றார். முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன? என்று பி.பி.சி. நிருபர் கேட்ட இன்னொரு கேள்விக்கு வே.பிரபாகரன் அளித்த பதில்: ""முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடு உடைய ஓர் இனக்குழு என்ற வகையில், அவர்களது பிரச்னை அணுகப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் தனித்துவம் மற்றும் நில உரிமைப்பாடு பேணப்படும். அதேவேளை, அவர்கள் தமிழ் மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக, அரசியல், பொருளாதார வாழ்வைச் சிறப்பாக்கும் என நாம் கருதுகிறோம். சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும், விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிகடா ஆகக் கூடாது'' என்றும் அவர் பதிலளித்தார்.இந்திய அரசியலில் ஒரு மாற்றமாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் மண்டல் கமிஷனின் பரிந்துரை அமலாக்கத்தில் பிரச்னை எழுந்தது. ஆனால், மண்டல் பரிந்துரையை அமல்படுத்துவது என்பதில் வி.பி.சிங் உறுதியாக இருந்தார். இம் முயற்சியை இந்தியாவின் வட மாநிலங்களில் மாணவர்களும், படித்த வர்க்கத்தினரும் கடுமையாக எதிர்த்தனர். தீக்குளிப்பு சம்பவங்களும் நடைபெற்றன. மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கம், இந்திய மக்களை இருவேறு பிரிவுகளாகப் பிளவுபடுத்தும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த பாஜக எந்த நிலை எடுப்பது என்பது குறித்து அந்தக் கட்சிக்குள்ளேயே பலத்த விவாதம் எழுந்தது. இறுதியில் மண்டலுக்கு எதிராக, ராமர் கோயிலா - பாபர் மசூதியா? என்கிற பிரச்னையை பாஜக கையிலெடுத்தது. ஆறாயிரம் மைல்களை உள்ளடக்கிய ரதயாத்திரைத் திட்டத்தை, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி, 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-இல், குஜராத்தின் சோமநாத் கோயிலில் இருந்து, தொடங்கினார். வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் புயலைக் கிளப்பிய இந்த ரதயாத்திரை, பீகார் எல்லையைத் தொட்டவுடன், அம்மாநில முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் யாத்திரையைத் தடை செய்து, அத்வானியைக் கைது செய்தார். அரசு விருந்தினர் மாளிகை ஒன்றில் அவர் சிறைவைக்கப்பட்டிருக்க, அவருடன் வந்த தொண்டர்கள் உத்தரபிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கே, அம்மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், ஊர்வலத்தில் வந்தவர்களைக் கூட்டமாகக் கைது செய்து, நகரவிடாமல் செய்தார். அதனையும் மீறி ஒன்றரை லட்சம் பேர் தடுக்கப்பட்டனர். அதையும் மீறி "கரசேவகர்கள்' என்றழைக்கப்பட்ட தொண்டர்கள் சரயு நதியைத் தாண்டிச் சென்று, பாபர் மசூதி அமைப்பில் காவிக்கொடியை நட்டனர். சிறப்பு அதிரடிப் படைக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் உயிர்துறந்தனர். ஏராளமான பேர் படுகாயமுற்றனர். வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த தனது 86 உறுப்பினர்களின் ஆதரவை பாரதீய ஜனதாக் கட்சி விலக்கிக் கொண்டது. பிரதமர் வி.பி.சிங் தனது பதவியைத் துறந்தார். 1979-இல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவைப் பதவி விலகியதையொட்டி, சரண்சிங் பிரதமராவதற்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்த அதே உத்தியைப் பயன்படுத்தி, தற்போது சொற்ப எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட முன்னாள் "இளந்துருக்கியரா'ன சந்திரசேகர் பிரதமர் ஆவதைக் காங்கிரஸ் கட்சி வரவேற்று, ஆதரவு தெரிவித்தது. 1990-ஆம் ஆண்டு நவம்பர் 10-இல் சந்திரசேகர் பிரதமரானார். உடனடித் தேர்தலை யாருமே விரும்பாத நேரத்தில், சந்திரசேகர் ஆட்சி இடைக்கால ஏற்பாடாகவே அப்போது கருதப்பட்டது.நாளை: ராஜீவ் படுகொலை!
கருத்துக்கள்

இப்படியெல்லாம் சகோதர யுத்தத்தைத்' தூண்டியவர்களும் தூண்டியவர்கள் பக்கம் அணி சேர்ந்தவர்களும்தான் 'சகோதர யுத்தத்திற்குக் ' காரணம் விடுதலைப்போராளிகள் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.வெட்கக் கேடு!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து: