Last Updated :
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சென்னை, அக். 28: அ.தி.மு.க.வின் செல்வாக்கு குறைந்து விடவில்லை. இப்போதும் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி அ.தி.மு.க.தான் என்றார் அக்கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: மக்களவைத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க. கதை முடிந்து விட்டது என பலர் கூறுகின்றனர். எனது செல்வாக்கு சரிந்து விட்டது என்கிறார்கள். அ.தி.மு.க. அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது என்கிறார்கள். ஆனால் இன்றைக்கும் தமிழகத்தின் பத்திரிகைகளில் வரும் பிரதான செய்திகள் என்னைப் பற்றியதாகவும், அ.தி.மு.க.வைப் பற்றியதாகவும்தான் இருக்கின்றன. காரணம் காய்க்கும் மரம்தான் கல்லடி படும். இன்றைக்கும் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி, மகத்தான மக்கள் இயக்கம் அ.தி.மு.க.தான்.தாய்: ஒரு குடும்பத்தை கட்டிக் காத்து, நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது தாய்தான். அக்குடும்பத்தின் பிள்ளைகளுக்கு நல்லது எது என்பது தாய்க்குத்தான் தெரியும். பிள்ளைகளின் மீது அன்பு காட்டும் தாய், சில நேரங்களில் கண்டிக்கவும் தவறுவதில்லை. கண்டிப்பு காட்டுவது அந்த பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அ.தி.மு.க. என்னும் மாபெரும் குடும்பத்தின் தாயாக நான் உள்ளேன். இக்குடும்பத்தில் உள்ள தொண்டர்களுக்கு எது நல்லதோ, அதைத்தான் நான் செய்வேன். மறுபக்கத்தில் தி.மு.க.வின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. நேற்று வரை அமைச்சராக இருந்த ஒருவர் இன்று தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸ் தேடுகிறது. அமைச்சராக்குவதற்கு முன்பே அவரைப் பற்றி முதல்வர் கருணாநிதிக்கு தெரியாதா? கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சியும் இல்லை; ஆட்சியும் இல்லை. அங்கே எல்லாமே குழப்பமாகத்தான் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. இன்று நாட்டின் கடைகோடி மாநிலமாக உள்ளது. நிர்வாகத் திறமையற்ற, தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றிய, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, அனைத்து வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் அ.தி.மு.க.வுக்கு கொண்டு வந்து சேர்க்கக் கூடிய திறமை அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உண்டு. அந்தக் கடமையை தொண்டர்கள் தவறாமல் செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமை வகித்தார். கொள்கை பரப்புச் செயலாளர் மு. தம்பிதுரை வரவேற்றார். பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார். பொதுக்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் டி. ஜெயக்குமார், செ. செம்மலை, பா. வளர்மதி, சு. முத்துசாமி, அ. அன்வர்ராஜா, சி. பொன்னையன், ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி. ராமலிங்கம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் இரா. விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2009 2:35:00 AM
By suresh
10/29/2009 12:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*