சனி, 31 அக்டோபர், 2009

மதுரை முன்னாள் எம்.பி. மோகன் மரணம்



மதுரை, அக். 30: உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மதுரை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கட்சி) பி.மோகன் (60) வெள்ளிக்கிழமை மாலை மரணம் அடைந்தார். கடந்த சில மாதங்களாக குடல் வால்வு ரத்தக் கசிவுப் பிரச்னையால் அவதியுற்று, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட மோகன் 30.12.1949-ல் பிறந்தார். இவரது தந்தை பொன்னுச்சாமி. தாய் மீனாட்சி. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்த மோகன், கல்லூரி பருவத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். 1973 முதல் மார்க்சிஸ்ட் கட்சியில் மாணவர் அணி, இளைஞர் சங்கம் என பல்வேறு பொறுப்புகளை வகித்து மாநிலக் குழு உறுப்பினரானார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அவர் இதுவரை 6 முறை சிறை சென்றுள்ளார். 1991, 1996, 1998 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.இரண்டு முறை எம்.பி.: மதுரை மக்களவைத் தொகுதியில் 1999-ல் அதிமுக கூட்டணியிலும், 2004-ல் திமுக கூட்டணியிலும் மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதுரை மக்களவைத் தொகுதியில் மு.க. அழகிரிக்கு எதிராகப் போட்டியிட்டு அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தலின்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் தேர்தல் பிரசாரத்தில்கூட முழுமையாக அவரால் பங்கேற்க முடியவில்லை. ஓரளவு உடல்நலம் தேறிய நிலையில், வீடு திரும்பிய அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் வெள்ளிக்கிழமை இறந்தார். பி.மோகனுக்கு மனைவி பூங்காவனம், 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மனைவி பூங்காவனம் மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியையாக உள்ளார். இன்று இறுதி ஊர்வலம்: மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டுக்கு, மோகனின் உடல் சென்னையிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும், சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இறுதி ஊர்வலம் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

ஆரியச் சார்புடைய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியில் தமிழ் உணர்வுடனும் மிக எளிமையாகவும் தொண்டுணர்வுடனும் வாழ்ந்த திரு மோகன் இறந்துவிட்டாரா? அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது. தினமணி இணைய வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைக் குடும்பத்தார்க்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். துயரத்துடனும் வருத்தத்துடனும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 2:38:00 AM

great loss for tamil nadu working group

By P.RADHAKRISHNAN
10/31/2009 12:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அஞ்சலி



சென்னை, அக். 30: முன்னாள் எம்.பி. மோகன் (60) மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு அஞ்சலியைச் செலுத்துகிறது என்று அதன் செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மோகன் மறைவு, கட்சிக்கும் ஏழை உழைப்பாளி மக்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரை இழந்து தவிக்கும் மனைவி பூங்காவனத்துக்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறுதி ஊர்வலம் சனிக்கிழமை (அக்டோபர் 31) மாலை 5 மணி அளவில் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள கட்சி மாவட்டக் குழு அலுவலகத்திலிருந்து புறப்படும். தத்தனேரி மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக