Last Updated :
கொழும்பு, அக். 26: விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கி வந்த கிளிநொச்சியில் விரைவில் மீண்டும் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு அதிகாரி எமல்டா சுகுமார் தெரிவித்தார். இலங்கை வட பகுதியில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் போரை அடுத்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் கடும் துயரப்படுவதாக இலங்கை அரசுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவிடம் விரைவில் தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அதிபர் ராஜபட்ச உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே குடியமர்த்தும் பணிகள் தொடங்கியது. விரைவில் கிளிநொச்சியிலும் குடியமர்வு நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சண்டைக்குப் பின்னரும் கிளிநொச்சி நகரத்தில் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடையாமல் அப்படியே இருப்பதைப் பார்க்க முடிகிறது. வீடுகள் பல சேதமடையாமல் நல்ல நிலையில் இருப்பதை நாங்கள் பார்த்தோம் என்று கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி அரசு நிர்வாகியான எமல்டா சுகுமார் தெரிவித்தார். அரசு முகாம்களிலிருந்து அழைத்து வரப்படும் தமிழர்களை முதலில் தாற்காலிகமாக குடியமர்த்துவதற்காக இரண்டு கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளோம். மாலவி மத்திய கல்லூரி, யோகபுரம் மத்தியக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் முதல் கட்டமாக குடியமர்த்தப்படுவார்கள். மக்களை குடியமர்த்துவதற்கு முன்பாக அனைத்து வீடுகளும் பள்ளிக் கட்டடங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். நல்ல நிலையில் உள்ள கட்டடங்களில் மட்டுமே குடியமர்த்தப்படுவார்கள் என்றார். கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஜெயபுரம், பூநகரி, முலங்காவில், நஞ்சிக்குடா ஆகிய இடங்களில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள். இங்கு மட்டும் மொத்தம் 25 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவார்கள் என்று எமல்டா சுகுமார் கூறினார். இந்தப் பகுதிகளில் அமைக்கப்படும் தாற்காலிக முகாம்களில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் 100 குடும்பங்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். மறு குடியமர்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக ராணுவ அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்று அவர் கூறினார். இந்த மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அதனால்தான் தாமதமாகிறது என்று அவர் கூறினார். இந்தப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு உரிய நிதி ஒதுக்கி உள்ளது என்றார் அவர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் புதுமத்தளன் ஆகிய இடங்களைப் பார்வையிட்டோம். அங்கு கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இது தொடர்பாக அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமத்தளன் ஆகிய பகுதிகள் ஆபத்தான பகுதிகள் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2009 6:16:00 AM
By PANDI
10/27/2009 1:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*