ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஓலைச்சுவடிகளை நூலாக வெளியிட வேண்டும்: வின்சென்ட்



"அலேசு நாடகச் சுவடி' நூலை பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் பிரிட்டோ வின்சென்ட் (வலமிருந்து 2-வது) வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கிறார் சா
திருநெல்வேலி, அக். 24: ஓலைச் சுவடிகளில் உள்ள தகவல்களைத் திரட்டி நூலாக வெளியிட பதிப்பாசிரியர்கள் முன்வர வேண்டும் என தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் பிரிட்டோ வின்சென்ட் கேட்டுக் கொண்டார். திருநெல்வேலி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் "மேலும்' வெளியீட்டகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் வே. கட்டளைகைலாசம் எழுதிய "அலேசு நாடகச் சுவடி' என்ற நூலை பிரிட்டோ வின்சென்ட் வெளியிட்டு பேசியதாவது: சுவடிகளில் மிகவும் பழைமையானது பனை ஓலைச்சுவடி. இன்றும் பல வீடுகளில் ஓலைச்சுவடிகள் உள்ளன. அவை நமது பொக்கிஷங்கள். இதுபோன்ற ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து அதில் உள்ள குறிப்புகளை எடுத்து நூல் வடிவில் தருவதில் சிரமங்கள் அதிகம். ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுவடிகள் வைத்திருப்பவர்கள் அவற்றை வழங்கலாம் என்றும் அரசு கூறியுள்ளது. இதுபோன்ற ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றில் உள்ள தகவல்களை நூல் வடிவில் தர பதிப்பாசிரியர்கள் முன்வர வேண்டும் என்றார் அவர். நூலின் முதல் பிரதியை சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் பெற்றுக் கொண்டார். தூய சவேரியார் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் சிவசுப்பிரமணியன், ஓவியர் வள்ளிநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் கட்டளைகைலாசம் ஏற்புரை வழங்கினார். முன்னதாக பேராசிரியர் சுந்தரம் வரவேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக