வியாழன், 29 அக்டோபர், 2009

என்று மடியும் இந்த ஜாதிய மாயை...?



நிலவில் நீரெடுக்கிற அளவுக்குத் தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் புதிய திசைகளைத் திறந்து வைக்கின்றன. உலகமயமாக்கலின் உக்கிரப் பரவலில் இந்திய மென்பொருள் "விண்டோ'வில் உலகை எட்டிப் பார்க்கின்றன மேற்கத்திய நாடுகள். விவசாயம் உள்பட நசிந்து வருகின்றன பாரம்பரியத் தொழில்கள். பெருகிவரும் சந்தைப்படுத்துதலின் புதிய தொழில்களால் உடைந்து கொண்டிருக்கிறது பொருளாதாரச் சமன்பாடுகள். ஆனால், இந்த உலக மாற்றங்களின் விரல்களால் தமிழ்நாட்டில் தீண்ட முடியாத ஒரே விஷயம் தீண்டாமை. கிழித்தெறிய முடியாத ஒரே விஷயம் ஜாதிய அரசியலின் பொய் முகமூடிகள்! சமீபத்தில் கண்ட இரண்டு செய்திகள்... மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உத்தப்புரத்தில் உள்ள தலித் சமுதாயத் தலைவர் பொன்னையா வீட்டுக்குச் செல்லும் வழியில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட 11 பேரை காவல்துறை கைது செய்து ஒன்றரை மணிநேரம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இப்போது இதுபற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, பரூக்கி தலைமையில் ஒரு நபர் குழு அமைத்துள்ளது அரசு. அடுத்து விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் திரௌபதி அம்மன் கோயிலில் வழிபட, தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ள தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட, வெடித்துக் கிளம்பியது போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட், தலித் பிரமுகர்களை போலீஸ் தடியடி நடத்திக் கைது செய்தது. அதைத் தொடர்ந்து நடந்த போராட்டம், பேச்சு வார்த்தைகளிலும் சுமுகநிலை ஏற்படாததால் டி.எஸ்.பி. தலைமையில் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். இந்த இரண்டு விஷயங்களிலும் எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியும் நடத்திய "நியாய விளக்க' அறிக்கைப் போர்தான் ஜாதிய அரசியலின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகின்றன. பற்றியெரிகிற ஜாதியத் தீயை அணைக்கிற, அதன் பின்னணியிலுள்ள வேரைக் கண்டுபிடித்து வீழ்த்துகிற செயல்தானே அரசின் முதல் கடமை? ஆதாயத்துக்காக அடிநிலை மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, பிரிவினையை வளர்க்காமல், உண்மையான நியாயத்துக்கு உரிய வழியில் போராடுவதுதானே எதிர்க்கட்சிகளின் முதல் கடமை. ஆனால், இங்கே நடப்பது என்ன? இருதரப்பும் தங்கள் கடமையைச் சரியாகச் செய்கிறார்களா? ஜாதிய ஆதாயத்தில் குளிர்காயாத அரசியல் கட்சிகள் இருக்கின்றனவா? தீண்டாமையை ஒழிக்க, ஜாதியத்தை வீழ்த்த பகுத்தறிவு வாளெடுத்து சுழற்றுவதாய்ச் சொல்லும் அரசியல் இயக்கம் உள்பட, இங்குள்ள எல்லாக் கட்சிகளும் எடுக்கும் தேர்தல் நிலைப்பாடு என்ன? திருச்செந்தூரிலிருந்து திருத்தணி வரை, கும்மிடிப்பூண்டியிலிருந்து கோயமுத்தூர் வரை ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதி பெரும்பான்மையோ அந்த ஜாதிக்காரரை வேட்பாளராக்குவதுதான் இவர்களின் பொதுவிதி. ஓட்டு வங்கி என்கிற ஒற்றை வார்த்தையில் இவர்கள் "டெபாசிட்' செய்வது சீழ்பிடித்த ஜாதியப் பிணியெனும் சமூக அவலத்தை. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி... இவர்கள் மூவரும் வெவ்வேறு நிலைப்பாடுகள் கொண்டவர்கள்... கொள்கை அபிப்ராயங்களில் மூன்று திசையானவர்கள். ஆனால், தான் கொண்ட கொள்கையில் உறுதிபடைத்தவர்கள் என்பதுதான் இவர்களின் மகத்தான ஒற்றுமை. "திருட்டு பக்தியைவிட, பெரியாரின் தெளிவான நாத்திகம் எப்போதும் சிறந்தது இல்லையா...? காமராஜரும் ராஜாஜியும் அரசியல் அரங்கில் கடைப்பிடித்த கருத்துகளில் வேற்றுமைகள் உண்டு. ஆனால், தீண்டாமை ஒழிப்பில் பெரியாரைப் போலவே இவர்களும் காட்டிய தீவிரத்தை ஒருபோதும் யாராலும் சந்தேதப்பட முடியாதே! இன்று உள்ள தலைவர்களின் நிலை என்ன? பெரியார் பெரிய "பிசினஸ் ஜங்ஷன்' ஆகிவிட்டார். நாடறிந்த தலைவர் காமராஜரை, குறிப்பிட்ட ஜாதிச் சங்கத் தலைவரைப்போல சுருக்கிவிட்டார்கள். மூதறிஞர் ராஜாஜியை ஒரு சமூகத்தின் நிழலாக்கி முன்னிலைப்படுத்துகிற கேவலத்தைச் செய்கிறார்கள். "தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று சொன்ன திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை, ஒரு ஜாதியின் தூதுவராக்கி கலவர அரசியலில் குளிர்காய்கிறார்கள். அதெல்லாம் ஏன்? எளிமைக்கும் தூய்மைக்கும் பெயர்போன கக்கனைக்கூட ஜாதியச் சாயம்பூசி அல்லவா பார்த்து மகிழ்கிறார்கள்! இவர்களால் எப்போதும் ஜாதியத்தை ஒழிக்க முடியாது. ஏனெனில் மூலதனத்தை ஒழித்துவிட்டால் தொழில் எப்படி நடக்கும்? இன உணர்வு எழுச்சியால் இங்கே ராமய்யா பேராசிரியர் அன்பழகன் ஆனார்; நாராயணசாமி நாவலர் நெடுஞ்செழியன் ஆனார்; சிதம்பரம் கோதண்டராமன் தில்லை வில்லாளன் ஆனார்; சோமசுந்தரம் மதியழகன் ஆனார்; ஆனால், அதன்பிறகு சமூகத்தளத்தில் உருப்படியான மாற்றம் எதுவுமே இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. வன்முறை, பிரிவினை, ஜாதியதுவேஷம் போன்றவற்றை ஒழிக்க முதலில் அடித்தட்டு சமூகத்தில் தனிமனித வளர்ச்சியைப் பெருக்க வேண்டும். அவர்களின் கல்வியைப் பெருக்கி, அறிவுத்தளத்தை விசாலமாக்க வேண்டும். வேலைவாய்ப்பை வளர்த்து, பொருளாதாரத் தளத்தை உயர்த்த வேண்டும். அதுதான் ஜாதியத்தை வேரறுக்கும் முதல் செயல். ஆனால், எளிய மனிதர்களின் உணர்ச்சியைப் பயன்படுத்தி அரசியல் லாபம் அடைய ஜாதி தான் சிறந்த கருவி என்பதை அறிந்த அரசியல் (பண்டிட்டுகள்) முதலைகள் இந்த மாற்றங்களை எப்படிக் கொண்டுவருவார்கள்? இன்றும் தமிழ்நாட்டில் 70 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலையில்லை, இன்னொரு பக்கமோ ஆடம்பர வசதியில் திளைக்கும் ஊழல் கூட்டம் பெருகி வருகிறது என்பதுதான் துயரநிலை. "ஜாதிய விடுதலை' குரலோடு தங்கள் சமூகத்துக்குப் போராட வந்த தலைவர்களைப் பார்ப்போம். உன்னத லட்சியத்தோடு வந்தவர்களையெல்லாம் சுயநல அரசியல் மிருகம் தன் பெருவாயில் சுருட்டி விழுங்கிவிட்டது. கூட்டணி, பதவிசுகம், ஓட்டு அரசியல் என மாறிப்போய்விட்ட அவர்கள் தங்கள் சமூகத்துக்கு கண்கட்டு வித்தை நடத்தும் மோடிமஸ்தானாக மாறிவிட்டார்கள். பொருளாதாரம், சமூக அந்தஸ்தில் அந்தத் தலைவர்கள் மட்டும் வளர்ந்தார்களே தவிர, அவர்களது சமூக மக்கள் ஏழை அடிமைக்கூட்டமாகவே இருக்கிறார்கள். மக்கள் தங்களைத் துதிபாடும், தங்களுக்காக வேலை செய்யும் அடிமைச் சேவகர்களாகவே வளர்த்துவைத்து குறுநில மன்னர்களாக வாழ்கிறார்கள் இவர்கள். கோஷம் போடத் தொண்டன், வேஷம் போடத் தலைவன், துதிபாடத் தொண்டன், நிதி சேர்க்கத் தலைவன்... இதுதான் இப்போது வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. சகிப்புத் தன்மை இல்லாத, துவேஷம் பாராட்டுகிற இந்தப் பிரிவினருக்கு இங்கே எந்த சமூகமும் விதிவிலக்கல்ல. "அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ' என்ற பக்தி இலக்கிய வரிகளின் இன்றைய நிலை என்ன? அடியார்களுக்குள்ளேயே அடிதடி துவேஷங்கள் நிறைந்து கிடக்கிறது. "மானுடமும் மனிதநேயமும் தான் வாழ்வின் ஆதார சுருதிகள்' என்று போதித்த ராமானுஜர் வழிவந்தவர்களுக்குள்ளேயே மானுடமும் மனிதநேயமும் இல்லை. வடகலையும் தென்கலையும் இந்தியா - பாகிஸ்தான் போல முறைத்துக்கொண்டு, கருவறை வரை வேற்றுமை விதைக்கின்றன. நெடுஞ்சாலைகளை, ரயில் பாதைகளை அகலப்படுத்துகிறோம், ஆனால், நாளுக்குநாள் இதயங்களை சுருக்கிக்கொண்டே இருக்கிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்? பகவத் கீதையும், பைபிளும், திருக்குர்ஆனும் அன்பையும் பண்பையும் தானே போதிக்கின்றன. ராமானுஜரும் அயோத்திதாச பண்டிதரும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் தானே தங்கள் வாழ்வின் செய்தியாகத் தந்துவிட்டுப் போனார்கள். "கூடாரங்கள் வேண்டுமானால் தனித்தனியாக இருக்கட்டும். இதயங்கள் மட்டும் எப்போதும் இணைந்தே இருக்கட்டும்' என்று சொன்னார் நபிகள் பெருமகனார். அப்படி, நம் இதயங்களை இணைக்காமல், மக்களை சமூகத்தளத்தில் உயர்த்தாமல் இங்கே எத்தனை மறுமலர்ச்சித் திட்டங்கள், சமத்துவபுரங்கள் வந்தாலும் அது வெறும் சடங்காகத்தான் இருக்கும்! திராவிட வேதமான தித்திக்கும் தேன்தமிழ் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஓர் அற்புதமான பாசுரம் உண்டு."அமர ஓர் அங்கம் ஆறும் வேதம்ஓர் நான்கும் ஓதித்தமர்களிற் தலைவராய சாதி-அந்தணர்களேனும்நுமர்களைப் பழிப்பர் ஆகில், நொடிப்பதுஓர் அளவில் ஆங்கேஅவர்கள் தாம் புலையர் போலும்அரங்க மா நகருளானே! இதன் பொருள்... "நான்கு வேதமும், அதன் ஆறு அங்கமும் அறிந்து ஓதும் பார்ப்பனர்கள் ஆனாலும் அவர்கள் மற்றவர்களைப் பழிப்பார்களேயானால் அந்தப் பார்ப்பனர்களே சண்டாளர்கள்' என்கிறது அந்தப் பாசுரம். எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு தூவப்பட்ட அற்புத சிந்தனை விதை! எந்தச் சமூகமாக இருந்தாலும் சரி... ஜாதியப் பிரிவினை பேசும், ஏற்றத்தாழ்வை வளர்க்கும் ஒவ்வொரு குடிமகனும்... இதைச் சரிசெய்யும் இடத்தில் இருந்துகொண்டு மக்களை ஏமாற்றிப் பிரித்து சுயநல அரசியல் நடத்தும் தலைவர்கள்தான் சண்டாளர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக