இலங்கையில் கனிமொழி
ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார் ?
தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்...
இறுதிப்போரில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து தமிழீழ வரலாற்றை தாங்கி வந்து முற்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது மக்கள் தமிழீழ வரலாற்றின் சுவடுகள். போற்றப்பட வேண்டியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். கடைசி வரை தமிழீழ போராட்டத்திற்கு தம்மால் முடிந்த ஆதரவை அளித்து இன்று பல சித்திரவதைகளிற்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எமது சுவடுகளை போராட்டத்தின் வலிமையை முகாமிலுள்ள ஒவ்வொரு தமிழ் மகனிலும் நாம் பார்க்க முடியும். அந்த மக்கள் தாம் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய தமது பாராளுமன்ற உறுப்பினர்களையே பார்க்க முடியாத சூழலில் வெளிநாடுகளிலிருந்து வரும் தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்பலரையும் அந்த மக்களை பார்க்க சிறிலங்கா அரசங்கம் அனுமதிப்பது ஏன்?
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் அந்த மக்களை வைத்து தாம் பிழைப்பு நடத்தி பணம் சுரண்டுவதற்கே. ஒருவரால் கொடுக்கும் பணம் மொத்தமாக அந்த மக்களை சென்றடைவது இல்லை. மேலிடத்திலிருக்கும் ஒவ்வொருவரும் அதிலிருந்து சுரண்டி சுரண்டி அந்த மக்களுக்கு செல்வது பெயரளவுக்கு கொடுத்தோம் என்று சொல்கின்றளவுக்கே. உதாரணமாக சமீபக காலமாக நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததே. அதாவது மக்கள் முகாமிற்குள் வந்ததால் சம்பாதித்து இலட்சாதிபதியாகிய அமைச்சர்கள் பற்றி நாம் அறிவோம்.
இதைவிட கொடுமை என்னவென்றால், சிறிலங்காவின் அனுமதியில்லாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களை பார்க்க செல்லவில்லை. அது ஒரு புறமிருக்க, தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாடாளுமன்ற குழு அந்த முகாமுக்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டது. அந்த சுற்றுலாவில் சென்றவர்கள் சிலர் தமிழ்நாட்டில் செய்த ஊழல்கள் போதாதென்று தமிழீழத்திலும் செய்ய சென்றுவிட்டார்களோ! என்று ஐயம் ஏற்பட்டு தெளிவடைந்துள்ளேன்.
ஏன் அந்த ஐயம் என கேட்கிறீர்களா? சில வாரங்களுக்கு முன் தமிழ் நாட்டு நாடாளுமன்றக்குழு சிறிலங்காவுக்கு பயணித்து திரும்பியதும் என் செவிகளில் விழுந்த ஒரு செய்தி "கவிஞர் கனிமொழி 250 ஏக்கர் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார்" என்பதே. உள்ளமெல்லாம் கொதித்தது காரணம் அந்த நிலம் தமிழீழ நிலப்பரப்பிலாக இருந்திருந்தால் தமிழ்நாட்டிலுள்ள மாதிரியான ஒரு ஒழுக்கமற்ற அரசியல் தமிழீழத்திலும் வந்துவிடுமோ என்று. ஏனெனில், தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி பொதுமகனின் நிலத்தை அபகரிப்பதும் அதனை அந்த பொதுமகன் போய்கேட்டால் அடியாட்களுடன் விரட்டுவதும் தமிழகத்தின் வழக்கமான ஒரு நிகழ்வாகிப்போய்விட்டது. அதே மாதிரி எமது தமிழீழத்திலும் வந்துவிடுமோ! என்று ஏங்கினேன்.
நேற்று தான் தெரிந்தது அது எமது நிலப்பரப்பில் இல்லை என்பது. அதையிட்டு சந்தோசமடைந்தாலும் அந்த குழுவில் இடம்பெற்ற தமிழீழ ஆதரவாளரான தொல்.திருமாவளவன் அவர்களின் செயற்பாடும் தமிழர்களின் மனம் நினைத்ததைப்போல இல்லை என்பதே உண்மை. தொல்.திருமாவளவனை கண்டதும் எம் மக்கள் கண்ணீர் விட்டு அழுததாக செய்திகளில் படித்தேன். எம் மக்கள் இலகுவில் யாரிடமும் கண்ணீர் விடமாட்டார்கள் மண்டியிடமாட்டார்கள். அந்த மக்கள் கண்ணீர் விட்டு எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர்களிடம் கூறியதாக செய்திகள் படித்ததுமே என் உரோமங்கள் சிலிருத்தன. கண்கள் கனத்தன. எப்படியெல்லாம் வாழ்ந்த எம்மினம் எம்மக்கள் இப்படி துன்பப்பட்டு போனார்களே என.
சரி அவர்கள் ஏன் தொல்.திருமாவளவனை கேட்டார்கள். தமிழீழத்திற்கு ஆதரவானவர் ஒரு தமிழன் என்ற ஒரு உரிமை அவர்களின் மனதில் இருந்ததால் தானே!, அப்படியான அந்த மக்களிடம் நீங்கள் ஆறுதலாக பேசாதது ஏன்? அவர்களின் மனநிலையை அறிய முற்படாதது ஏன்? சரி அதைத்தான் விடுவோம் சர்வதேச குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று யாரை நீங்கள் கூறினீர்களோ அந்த குற்றவாளியின் விருந்தை உண்டு வந்த உங்களை தமிழீழ மக்களாகிய நாம் எந்த குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது?
வதை முகாம் சென்று வந்த காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் என்பவர் முகாம்கள் சர்வதேச மட்டத்தில் தரமாகவுள்ளதாக அறிக்கை விட்டிருக்கிறார். சர்வதேசமட்டம் என்றால் என்ன? என்பதற்கு வரைவிலக்கணம் தெரியுமா அவருக்கு! அவர் சர்வதேச மட்டம் என்று நினைத்தது தமிழ்நாட்டை என்று நினைக்கிறேன். ஏனெனில் தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதிமுகாம்களைவிட சிறிலங்காவின் ஈழத்தமிழர் வதைமுகாம்கள் சிறந்ததாக இருப்பதால் அவர்கள் சர்வதேசமட்டத்தில் சிறந்தாக இருப்பதாக கருதுகிறார்கள். தமது அரசியல் ஆசனத்துக்காக எமது மக்களை இந்தியரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ்நாட்டு அரசாங்கமும் சிங்கள அரசாங்கமும் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றமை தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதைமுகாம் பயணம் சுட்டிக்காட்டுகின்றது.
தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்....
ஆக்கம்: நித்தியா
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 5292
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக